பணமதிப்பிழப்பு தொடர்பான ஆர்.டி.ஐ கேள்வி...! அதிர வைத்த டெல்லி பதில் 

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆர்.பி.ஐ அலுவலகத்துக்கும் நெல்லை வழக்கறிஞர் பிரம்மா, ஆர்.டி.ஐ மூலம் கேள்விகளை கேட்டிருந்தார். இந்த கேள்விகள் தமிழில் இருந்ததால் அதை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டது. ஆனால் ஆர்.பி.ஐ. அலுவலகம் பெயருக்குப் பதிலை அளித்துள்ளதாக பிரம்மா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பணத் தேவைகளை சந்திக்க முடியாமல் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். இன்று வரை நிலைமை சீராகவில்லை.  இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா, "பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கும், மும்பையில் உள்ள ஆர்.பி.ஐ.க்கும் ரூபாய் விவகாரம் தொடர்பான கேள்விகளை கடந்த நவம்பர் 11-ம் தேதி ஆர்.டி.ஐ மூலம் கேட்டு இருந்தார். இதுதொடர்பாக விகடன் டாட் காமில் 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த ஆர்.டி.ஐ.க்கு, ஆர்.பி.ஐ பதில் அளித்துள்ளது. அதே நேரத்தில் தமிழில் ஆர்.டி.ஐ கேள்விகள் இருப்பதால் அதற்கு பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் அந்த மனுவை நிராகரித்துள்ளது. இதையடுத்து பிரதமர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளார் பிரம்மா. 

இதுகுறித்து பிரம்மா கூறுகையில், "பயன்பாட்டில் இருந்த ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் செல்லாது என்று அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று எப்போது முடிவு எடுக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை ஆர்.டி.ஐ மூலம் பிரதமர் அலுவலகத்துக்கும், ஆர்.பி.ஐ.க்கும் தனித்தனியாக கேள்விகளை கேட்டிருந்தேன். தமிழ் மொழியில் என்னுடைய கேள்விகள் இருந்ததால் அதை பிரதமர் அலுவலகம் நிராகரித்து விட்டது. அதே நேரத்தில் ஆர்.பி.ஐ, அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.  அந்த பதிலில் உருப்படியான தகவல்கள் இல்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு வங்கி வாடிக்கையாளர்களுக்கு முன் ஏற்பாடு குறித்த கேள்விக்கு இதற்கு தகவல் வழங்க இயலாது என்று பதில் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவை எந்த தேதியில் ஆர்.பி.ஐ கவர்னரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்ற கேள்விக்கு இது சென்சிட்டிவ்வான தகவல் என்பதால் பதில் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளது.

புதிதாக அச்சிடப்பட்ட 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு பெங்களூர், டெல்லியில் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அதற்கான செலவு விவரங்கள் எங்களிடம் இல்லை. உங்கள் மனு, டெல்லி, பெங்களூரில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனத்தில் உள்ள பொது தகவல் அலுவலருக்கு பதில் அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் பதில் எங்களிடம் இல்லை. இதனால் என்னுடைய கேள்விகளுக்கு பதில் கேட்டு மேல்முறையீடு செய்துள்ளேன். ஆர்.டி.ஐ கேள்விகளை பிராந்திய மொழிகளில் கேட்க சட்டத்தில் இடம் உள்ளதை என்னுடைய மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளேன். பிரதமர் அலுவலக மத்திய உதவி பொது தகவல் அலுவலர் ஜே.பி.சிங் அளித்த பதிலால் நான் மிகவும் மனவேதனையடைந்துள்ளேன். என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துவேன்" என்றார். 

- எஸ்.மகேஷ் 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!