படகுகளை விடுவிக்க இலங்கை பரிசீலனை... தமிழக மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் :  இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்ய இருப்பதாக இலங்கை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. படகுகளையும், மீனவர்களையும் மீட்டுத் தரக் கோரி மீனவர்கள் போராடுவதன் விளைவாக சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 122 படகுகளையும் அதில் இருந்த உபகரணங்களையும்  இலங்கை அரசு அரசு உடமையாக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. படகுகளையோ, மீன்பிடி உபகரணங்களையோ திருப்பித் தர மாட்டோம் என இலங்கை மீன்வள துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொழும்பில் இன்று இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மீனவர்களின் படகுகள் நாட்டுடமையாக்கப்படும் என அமைச்சர் கூறியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் இந்திய அமைச்சர்கள் சார்பில் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 122 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அமைச்சர்கள் சார்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
கூட்டத்தில் இலங்கை வசம் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது குறித்து பரிசிலனை செய்யப்படும் என இலங்கை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!