இதனால்தான் சசிகலா தொண்டர்களைச் சந்திக்கிறார்...!

சசிகலா

.தி.மு.க-வின் அடுத்த இன்னிங்ஸ் சசிகலா தலைமையில் ஆரம்பித்துவிட்டது. பொதுச்செயலாளர் ஆகி ஒருவாரத்திலேயே முதல்வர் பதவிக்கும் காய்நகர்த்தத் தொடங்கிவிட்டார் சசிகலா. சசிகலாவின் உறவுகளை நோக்கி அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். 

தமிழகத்தில் சசிகலாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டுவதும், தீபாவை ஆதரித்து  பதாகைகள் வைக்கப்படுவதையும் பார்த்த சசிகலா உறவுகள், குறிப்பாக சசிகலாவின் கணவர் நடராஜன் இனியும் தாமதம் செய்தால் ஆபத்து என்பதை உணர்ந்து அவசரப் பொதுக்குழு கூட்டத்தை நடத்தச் சொல்லி, அதில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமித்தும் விட்டார்கள். சசிகலாவின் அடுத்த டார்கெட் ஆட்சி தான். அதற்கான மூவ்கள் இப்போது ஆரம்பித்துவிட்டன. சசிகலாவின் பாலிசி தனக்கு வேண்டிய ஒன்றை தானே கேட்காமல்,வேறு நபரை வைத்து தனக்கு கொடுத்தே ஆகவேண்டும் என்று சொல்ல வைப்பார். பொதுச்செயலாளர் பதவிக்கும் சரி, இப்போது இவர் குறி வைத்து இருக்கும் முதல்வர் பதவிக்கும் சரி... சசிகலாவின் குரலாக வேறு ஒருவர்தான் ஒலித்து வருகிறார். 

இன்னும் சில தினங்களில் முதல்வர் அரியணையில் சசிகலா ஏறுவதற்கான ஒத்திகைகள் ஆரம்பித்துவிட்டன. 2-ம் தேதி  அனைத்து அமைச்சர்களையும் போயஸ் கார்டன் வரவரழைத்து இது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றது. முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ் நீங்கள் வருவதுதான் எனக்கு மகிழ்ச்சி என்று தன்னுடைய விசுவாசத்தை மீண்டும் நிரூபித்துள்ளார். அ.தி.மு.க சட்டமன்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது. சசிகலாவும் முதல்வராக நாம் எப்படி இருக்க வேண்டும் என்ற முன்னோட்டத்தில் தனது உடை, சிகை அலங்காரம் அனைத்தையும் மாற்றிவிட்டார். விதவிதமான  புகைப்படங்கள் எடுக்கும் படலமும் முடிந்துவிட்டது. இந்த நிலையில்தான் நான்காம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சசிகலா சந்திக்க உள்ளார். 

இந்த சந்திப்புதான் அ.தி.மு.க-வின் இப்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது. எதற்காக இந்த சந்திப்பு என்று அ.தி.மு.க வட்டாரங்களில் கேட்டபோது “அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தாலும், அந்தப் பொதுக்குழுவுக்கு சசிகலா வரவில்லை. ஆனால், எந்த எதிர்ப்பும் இல்லாமல் தன்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்சியோடு ஏற்றுள்ளார். தன்னை தேர்ந்தெடுத்த பொதுக்குழு உறுப்பினர்களை  சந்திக்க வேண்டும் என அவர் மூத்த நிர்வாகிகளிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்கு நாள் குறிக்கப்பட்டது. அ.தி.மு.க பொதுக்குழுவில்  சார்பு நிர்வாகிகளுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை அவர்களுக்கு அழைப்பு எதுவும் அனுப்பப்படவில்லை. சசிகலாவுடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும்போது மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களோடு, சார்பு அணி நிர்வாகிகளும், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பத்து நிமிடம் வீதம் சசிகலா நேரம் ஒதுக்கியுள்ளார். தன்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கட்சியின் அடுத்தக்கட்ட நிலைகள் குறித்தும் அவர்களிடம் சசிகலா பகிர்ந்துகொள்ள உள்ளார். பல மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக அணி சேர்ப்பு படலம் நடைபெற்று வருவதால் அதை சரிகட்டவும்தான் இந்த சந்திப்பு” என்கிறார்கள். 

அதே போல் வரும் 5-ம் தேதி அன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வினருக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவின் புகைப்படத்தோடு, அவர் கொண்டுவந்த சாதனைகள் குறித்த புகைப்படங்களை இந்தப் பேரணியில் எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார்கள். 

- எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!