ஜெயலலிதா மரணம்: மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது என்ன? | RTI query reveals backdrop to Jayalalithaa’s death

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (03/01/2017)

கடைசி தொடர்பு:14:27 (03/01/2017)

ஜெயலலிதா மரணம்: மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது என்ன?

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்.. மர்மம்... என்று பொதுமக்களும், அ.தி.மு.க-வினர் சிலரும் கூப்பாடு போட்டு வந்தாலும், இந்த பிரச்னையில் இன்னமும் தெளிவு பிறக்கவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒருவர், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவரது கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட நபருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த பதில்களுடன், ஜெயலலிதா மரணம் குறித்து டிசம்பர் 7-ம் தேதியன்று, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகர் ராவ் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தையும் இணைத்துள்ளனர். மிகவும் ரகசியமாக அனுப்பட்ட கவர்னர் வித்யா சாகர் ராவின் கடிதத்தில் இடம்பெற்றிருந்த தகவல்கள் இதோ..

*காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவால், செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்தது. ஆனால், ஒரு வாரத்தில் அவரின் உடல்நிலை குன்றியது. 

*மருத்துவர்களின் 50 நாட்கள் தீவிர முயற்சியால், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் நவம்பர் 11-ம் தேதியன்று, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா

*டிசம்பர் 4-ம் தேதி, நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரஸ்ட்' ஏற்பட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் தகவல் வந்தது. இதனால், நான் உடனே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன்.

*அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் மற்றும் மருத்துவர்கள் என்னிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விவரித்தார்கள். ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக, அவருக்கு ECMO கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அவர், தொடர்ந்து அபாயக் கட்டத்திலேயே இருந்த நிலையில், டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்தார். 

*இதனையடுத்து சில மணி நேரங்களில், அ.தி.மு.க பொருளாளரும் மூத்த அமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் என்னை ராஜ்பவனில் சந்தித்தார். அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஒ.பி.எஸ் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் என்னிடம் அளித்தார்கள். 

*அத்துடன் 31 அமைச்சர்களின் பட்டியலை ஒ.பன்னீர் செல்வம் என்னிடம் அளித்தார். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஒ.பன்னீர் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் என வித்யாசாகர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

- ஆ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்