வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (03/01/2017)

கடைசி தொடர்பு:13:14 (04/01/2017)

தினகரன் vs திவாகரன்?! - தொடங்கியதா மன்னார்குடி கலகம்?!

மன்னார்குடி குடும்பத்தில் மல்யுத்தம் தொடங்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் சசிகலா தரப்பு கவலையில் ஆழ்ந்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் அதிகார மையத்துக்கு வந்துவிட்டார் சசிகலா. இதனால் அவரது தரப்பினருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் இனி அ.தி.மு.க.வில் அதிகமாக இருக்கும் என்று கட்சித் தொண்டர்கள் புலம்பி வந்தனர். அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் அவரது உடல் அருகே இடம் பிடித்து நின்றுகொண்டனர். அது பெரும் விமர்சனம் கிளப்பியது. இந்நிலையில் சசிகலா தனக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பதவிகளை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சசிகலாவின் குட்புக்கில் இடம் பிடிக்க அவரது ஆதரவாளர்கள் முட்டி மோதும் நிலையில் மன்னார்குடி அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தவும் கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


இதுகுறித்து மன்னார்குடி குடும்ப வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி.தினகரன். இவர், ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர். இவருக்கு ஜெ.பேரவை செயலாளர், கட்சியின் பொருளாளர், டெல்லி அரசியலை கண்காணிக்கும் பொறுப்பு ஆகியவற்றை கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்ப தினகரனும் செயல்பட்டார். தினகரனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், வைகைச்செல்வன் உள்ளிட்டவர்களும் சிறப்பாக செயல்பட்டு ஜெயலலிதாவுக்கு தினகரன் மீதுள்ள நம்பிக்கையை நிலைநாட்டினர். தினகரனைப் போலவே சசிகலாவின் தம்பி திவாகரனும் கட்சியில் ஆதிக்கம் செலுத்தினார். இதனால் அ.தி.மு.க.வில் மன்னார்குடி வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனால் இரண்டு அதிகார மையத்தினரிடையே போட்டி நிலவியது. இதன்விளைவு கட்சியில் கோலோச்சுவதில் தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே முட்டல் மோதல் ஏற்பட்டது. திவாகரனின் வியூகங்களில் தினகரன் சிக்கி, கட்சியிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார். ஆனால், தினகரனால் கட்சிக்குள் நுழைந்தவர்கள் ஜெயலலிதாவின் விசுவாசியாகவே இருந்தனர்.

ஜெயலலிதாவால் கட்டம்கட்டப்பட்ட தினகரன், அதன்பிறகு அரசியலிருந்து ஒதுங்கியே இருந்தார். அவருக்குப் பிறகு கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்திய திவாகரன், குறுகிய காலத்திலேயே சர்ச்சையில் சிக்கினார். இதன்விளைவு சசிகலாவுடன் சேர்த்து மன்னார்குடி குடும்பத்தினர் கார்டனிலிருந்து 2011ல் வெளியேற்றப்பட்டனர். இதன்பிறகு சசிகலா மட்டும் கார்டனுக்குள் நுழைந்து விட்டார். மற்றவர்கள் மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுந்தது. அதன் விளைவு திவாகரன், ராவணன், நடராஜன் ஆகியோர் சிறைக்குள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அனைவரும் சசிகலாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கி உள்ளனர். இதில் மீண்டும் தினகரன், திவாகரனுக்கு இடையே கட்சியில் அதிகார மையத்தை கைப்பற்றுவதில் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. விளைவு மன்னார்குடி குடும்பத்தில் மல்யுத்தம் தொடங்கி உள்ளது. நீருபூத்த நெருப்பாக இருக்கும் இந்த பிரச்னை விரைவில் பூதாகரமாக வெடிக்கும். தினகரன், திவாகரன் ஆகிய இருவரில் சசிகலாவின் ஆசி, தினகரனுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர்.  இதனால் தினகரன் மீண்டும் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுபோல திவாகரனின் ஆதரவாளர்களும் சசிகலாவிடம் நெருக்கத்தை ஏற்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். தினகரனுக்கு திவாகரன் தரப்பு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதுபோலவே திவாகரனுக்கு தினகரன் தரப்பும் தடைக்கல் ஏற்படுத்தி வருகிறது" என்றனர்.

தினகரனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்பட முடிவு செய்துள்ளார்களாம். இதில் ஓ.பன்னீர்செல்வம், தினகரனுக்காக தன்னுடைய கட்சிப் பதவியைக்கூட விட்டுக் கொடுக்கத் தயாராகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. நடராஜனும், தினகரனுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டாராம். இவ்வாறு தினகரனுக்கு ஆதரவு பெருகுவதால் சசிகலாவும் அவர் மூலமே டெல்லி லாபியை கவனித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தினகரன் மீண்டும் கட்சிக்குள் வருவதை திவாகரன் தரப்பு விரும்பவில்லையாம்.

சசிகலா, முதல்வராவதற்கு முன்பே மன்னார்குடி மன்னர்களின் பக்கம் தூதிபாடும் படலம் கட்சியினர் தொடங்கி விட்டனர். இதற்காக மன்னார்குடி வாரிசுகள் மல்லுகட்டி வருகின்றனர் என்கின்றனர் கார்டன் உள் விவரம் தெரிந்தவர்கள். 

 

- நமது நிருபர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்