வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (03/01/2017)

கடைசி தொடர்பு:19:19 (03/01/2017)

மகுடம் சூடும் ஸ்டாலின் ... என்ன செய்யப்போகிறார் அழகிரி...?!

ஸ்டாலின்

தி.மு.க பொதுக்குழு கூட்டம், தலைவர் கருணாநிதியின் தலைமையில், கடந்த டிசம்பர் 20-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் க.அன்பழகன் அந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்திருந்தார். கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அந்தப் பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு, டிசம்பர் 28-ம் தேதி வைக்கலாமா என்றும் ஓர் ஆலோசனை நடைபெற்றது. கருணாநிதியின் உடல்நிலை முழுவதுமாகக் குணமடையாத நிலையில், அந்தத் தேதியும் சரிபட்டு வரவில்லை. இந்தநிலையில், ஜனவரி 4-ம் தேதிக்குப் பொதுக்குழு தள்ளிவைக்கப்பட்டது. 

இதுகுறித்து அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (4-1-17) காலை 9 மணிக்குக் கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்ட கூட்ட அழைப்பிதழை இந்தக் கூட்டத்துக்கு வரும்போது தவறமால் உடன் கொண்டுவர வேண்டும். கட்சியின் ஆக்கப் பணிகள் மற்றும் கட்சி வரவு - செலவு தணிக்கைக் குழு அறிக்கை ஆகியவை குறித்துப் பேசப்படும்’’ என்று அதில் கூறியுள்ளார். 

தி.மு.க-வில் இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த மு.க.ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் பதவிக்கு மாற்றப்பட்டார். தி.மு.க ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். எனவே, அவருக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால், அது துணைத் தலைவர் பதவியா அல்லது செயல் தலைவர் என்ற விவாதமும் இருந்துவந்தது. கட்சியில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மு.க.அழகிரி எதிர்ப்புக் காட்டியதால்... கருணாநிதியும், ஸ்டாலினுக்கு பொறுப்புக் கொடுப்பதில் வேகம் காட்டவில்லை. ஆனால், தி.மு.க-வின் ஒவ்வொரு கூட்டத்திலும்... தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனும் மற்றும் முன்னணித் தலைவர்களும், ‘‘ஸ்டாலினுக்கு கட்சியின் தலைமைப் பொறுப்பு தானாகவே வந்துசேரும். அவருக்கு, அத்தனை தகுதிகளும் இருக்கின்றன’’ என்று பேசிவந்தனர். ‘‘இந்தநிலையில், கருணாநிதியின் உடல்நிலையும், கட்சிப் பணிகளை முன்புபோலச் சுறுசுறுப்பாக செய்ய முடியாத சூழலும் இருப்பதால், கட்சிப் பணிகளைக் கவனிக்க... ஸ்டாலினை, தேர்வுசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்குக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகனும் ஒகே சொல்லிவிட்டார்’’ என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். 

நாளை கூடும் தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலினை தேர்வுசெய்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் கருணாநிதி வருவதற்கு வாய்ப்பில்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். எனவே, பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் ஸ்டாலினுக்கு கட்சியின் செயல் தலைவர் பதவிக்கான மகுடம் சூட்டப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், வி.பி.துரைசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலினை வாழ்த்தியும், கட்சியின் வருங்கால திட்டங்கள் குறித்தும் பேசுகிறார்கள். ஆனால், அழகிரி என்ன செய்யப்போகிறாரோ? என்ற கேள்விதான் இப்போது தி.மு.க.வின் ஹாட் டாபிக்.

- எஸ்.முத்துகிருஷ்ணன், ஜெ.அன்பரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்