தனியார் வங்கிகளுக்கு மட்டும் அதிக பண வினியோகம் ஏன்? வங்கி ஊழியர் சங்கம் கேள்வி | Why higher cash allocation to private banks?

வெளியிடப்பட்ட நேரம்: 23:48 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:25 (04/01/2017)

தனியார் வங்கிகளுக்கு மட்டும் அதிக பண வினியோகம் ஏன்? வங்கி ஊழியர் சங்கம் கேள்வி

திருப்பூர் : "மத்திய அரசுக்கு உண்மையாகவே நாட்டின் வளர்ச்சிமீது அக்கறை இருந்திருந்தால் அரசு வங்கிகளை காத்திருக்க வைத்துவிட்டு தனியார் வங்கிகளுக்கு ஏன் அத்தனை பணத்தை அனுப்ப வேண்டும்" என வங்கி ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, பணத்தட்டுப்பாடு பெருமளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் முன்பு கால்கடுக்க காத்திருந்து பணத்தை பொதுமக்கள் பெற்றுச்செல்கிறார்கள். ஏ.டி.எம்.கள் இன்னும் மூடப்பட்டே இருப்பதால் சிக்கல் தொடர்கிறது.

இந்நிலையில் பொதுமக்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் மோதலை உருவாக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு உள்ளதாகக் கூறி வங்கி ஊழியர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி திருப்பூரில் ரிசர்வ் வங்கியைக் கண்டித்து வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், "500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் முதல் இன்று வரை மத்திய அரசு மேற்கொண்டு வரும் தவறான நடவடிக்கைகளால் மக்களுக்கு போதிய அளவு பணம், வங்கிகளால் தர இயலவில்லை.. இதனால் பொறுமை இழக்கும் வாடிக்கையாளர்களோடு மோதல் ஏற்படும் அபாயத்துக்கு வங்கி ஊழியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இன்று வரை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், கிளைகளுக்கும் தேவையான அளவு பணப்பரிமாற்றத்தினை வழங்கவில்லை. ஏடிஎம் இயந்திரங்களும் மூடியே கிடக்கிறது. ரிசர்வ் வங்கி பண விநியோகம் செய்வதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவில்லை. தனியார் வங்கிகளுக்கு அதிகப்படியான பண விநியோகமும், அரசு வங்கிகளுக்கு குறைந்த அளவிலான பண விநியோகமும் செய்து வருகிறது," என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், "இன்று பொதுமக்களின் மனதில் வங்கி ஊழியர்கள் அனைவரும் குற்றவாளிகளாய் இருக்கிறார்கள்.. அரசாங்கம் ஒரு நபருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் வங்கி ஊழியர்கள்தான் தர மறுக்கிறார்கள் என்று மக்கள் கோபப்படுகிறார்கள். ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பும் பணத்தில் நபர் ஒன்றுக்கு 24000 ரூபாய் கொடுத்தால் ஒருநாளைக்கு 20 நபர்களுக்கு மேல் வங்கிகளால் பணம் கொடுக்க முடியாது.. இதுதான் உண்மை நிலவரம்.

குறைந்த அளவிலான பணத்தை ரிசர்வ் வங்கி அனுப்பிவிட்டு, வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பணத்தை கொடுக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கி, வங்கி ஊழியர்களின் மீது பொதுமக்கள் ஆத்திரமடையும் நிலையை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் உருவாக்கிவிட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு உண்மையாகவே நாட்டின் வளர்ச்சிமீது அக்கறை இருந்திருந்தால் அரசு வங்கிகளை காத்திருக்க வைத்துவிட்டு தனியார் வங்கிகளுக்கு ஏன் அத்தனை பணத்தை அனுப்ப வேண்டும்.

இன்னும் பல மாதங்களுக்கு 500, 2000 ரூபாயே அச்சடித்துக்கொண்டு இருக்கும் பட்சத்தில் பொதுமக்களின் பிரச்னை தீர்வதற்கு இன்னும் சில மாதங்களுக்கு மேலாகும் என்ற அவலநிலையை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் வங்கிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். இதுபோன்றதொரு நடைமுறை சிக்கலை உருவாக்கிவிட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் வங்கி கணக்கு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுவது பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கப்போவதில்லை. பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று மரணமடைந்த மக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை வழங்குவதற்கான ஏற்பாட்டை  முதலில் மத்திய அரசு செய்ய வேண்டும்," என்றார்.

- தி.ஜெயப்பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க