'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா

'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறார் பொதுச் செயலாளர் சசிகலா. " ஜெயலலிதா அளவுக்கு மக்களை ஈர்த்த தலைவராக சசிகலா இல்லை என்ற குறையைப் போக்குவதற்காக, பதவியேற்பு விழாவில் விரிவாகப் பேசினார் சசிகலா. வரக் கூடிய நாட்களில் மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகளை சந்தித்துப் பேச இருக்கிறார். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் வரையில் தனக்கான ஆதரவைப் பெருக்குவதில் மும்முரமாக இருக்கிறார். ஜனவரிக்குள் முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்பதற்காக, சீனியர் நிர்வாகிகளான தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வலிந்து பேசி வருகின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த அச்சமும் கார்டன் தரப்பை வாட்டி வருகிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "முதல்வர் பதவியை விட்டுத் தருவது குறித்து பொதுவெளியில் எந்தக் கருத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லை. அவர் எப்போதும் போலவே அமைதியாக இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலாவை வலியுறுத்திய நிர்வாகிகள்தான், முதல்வர் பதவிக்கும் அவரை முன்னிறுத்துகிறார்கள். பதவியேற்ற ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்பதால், எந்தத் தொகுதி சரியாக இருக்கும் என்ற தேடுதலில் மன்னார்குடி உறவுகள் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் வெற்றித் தொகுதியாக இருந்த ஆண்டிப்பட்டியில் போட்டியிடலாமா? உசிலம்பட்டியைத் தேர்வு செய்யலாமா என பலவித ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மரணத்தால் காலியாக இருக்கின்ற, ஆர்.கே.நகரைவிடவும் தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்வதுதான் அவரது விருப்பம். வரும் 9-ம் தேதி வரையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அதன்பிறகு, ஆட்சி அதிகாரத்துக்குள் சசிகலா வருவார்" என்றார் விரிவாக.

அதேநேரம், அ.தி.மு.கவில் உள்ள ஜெயலலிதாவின் விசுவாசிகள் தீபாவை முன்னிறுத்தி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். சசிகலாவை ஏற்காத தொண்டர்கள் அனைவரும், 'தீபா ஜெயலலிதா' என்ற பெயரிலேயே நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். நேற்று தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். தன்னை முன்னிறுத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூடவே, 'இன்னும் மூன்றே வாரத்தில் முடிவை அறிவிப்பேன்' எனவும் தெரிவித்தார். இதன்பின்னர், அரசியல் பிரமுகர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறார் தீபா. அவர்களிடம் பேசும்போது, "சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன். சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.

அவர் உசிலம்பட்டியில் போட்டியிட்டாலும் களமிறங்குவேன். திண்டுக்கல் தொகுதியில் மாயத் தேவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் மூலம், அரசியல் களத்தில் தலைவராக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர். அதைப்போல, ஜெயலலிதாவின் ரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள். பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது. இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும். பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு. எனவே, இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன். அதிகாரத்துக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன்" என தேர்ந்த அரசியல் தலைவரைப் போல் விவாதித்திருக்கிறார். 

'பொங்கலுக்குள் சின்னம்மா முதல்வர் என்ற இனிப்பான செய்தி வரும்' என அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் பேசி வருகின்றனர். பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்ததைப் போலவே, முதல்வர் பதவிக்கும் படிப்படியாக காய்கள் நகர்த்தப்படுகின்றன. 'சசிகலா முதல்வர் ஆவாரா?' என கோட்டை வட்டாரத்திலும் விவாதம் நடந்து வருகிறது. 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!