வெளியிடப்பட்ட நேரம்: 13:29 (04/01/2017)

கடைசி தொடர்பு:17:37 (04/01/2017)

அரசியலற்ற 1 மணி நேர பேச்சு... இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா?

.தி.மு.க.வில் இணையும் போது ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்து விட்டார். 'சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை' எனச்சொல்லி அமைதியானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க.வில் தான் இருக்கிறாரா? தி.மு.க.வில் இணையப்போகிறாரா? என அவரை மையப்படுத்தி ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதாலும் செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசப்போகிறார் என்பதாலும் அங்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நாஞ்சில் சம்பத் என்ன பேசப்போகிறார் என்பதும், நிச்சயம் அரசியல் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து ரயிலில் வந்தார் நாஞ்சில் சம்பத். சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினாலும் அவரால் அது முடியவில்லை. மீடியாக்களிடம் தொடர்ச்சியாக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. 'இன்னும் நான் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். விரைவில் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது' என மீடியாக்களிடம் சொன்னார் நாஞ்சில் சம்பத்.

இரவு 7 மணிக்கு  செங்கை புத்தகத்திருவிழாவிற்கு வந்தார் நாஞ்சில் சம்பத். அவருடன் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சனுடன் மேடையேறிய நாஞ்சில் சம்பத்,  பிரபஞ்சனைத்தொடர்ந்து பேசினார். சசிகலா தலைமையை விமர்சித்தும், அரசியலில் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும் சொன்ன நாஞ்சில் சம்பத், அந்த முடிவெடுத்த பின்னர் பங்கேற்கும் முதல் பொது மேடை என்பதால் அதை முன்னிறுத்தியே பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கேற்ப புத்தக திருவிழா அரங்கு நிரம்பி வழிந்தது.

அமைதியாக பேச்சைத்துவங்கினார் நாஞ்சில் சம்பத். “ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அந்த எழுத்தாளனோடு நாம் ரத்தமும் சதையுமாக இசைந்து விடுகின்றோம். இன்றைக்கு இருக்கும் தலைமுறையினர் வாசிக்க தயக்கம் காட்டும் யுகம் இது. கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் போது புத்தகத்தை கொண்டு செல்வதில்லை. அதைப் பேராசிரியர் கொண்டுவருவார் என்கிறான் மாணவர். புத்தகத்தை தொடுவது பாவம் என்று கருதும் இந்த சூழலில் இந்த புத்தகத்திருவிழா வாசிக்கின்ற நோக்கத்தை ஒரு வரலாற்று திருப்பத்திற்கு வகுப்பெடுக்கிறது.

இன்றைக்கு வாசிக்கும் தலைமுறையை புதிதாக மாற்றியே தீரவேண்டும். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலை இனிஉண்டோ  என்று கேட்டான் யுகக்கவிஞன் பாரதி. ஆனால் மனிதன் நோக மனிதன் எதையும் செய்யத் தயாராகும் இந்த காலக்கட்டத்தில் ஆயுதங்களால் சாதிக்க முடியாதவற்றை புத்தகங்கள் சாதிக்கும் என்பதை நாம் நிலை நிறுத்துவதற்கு இந்த விழாக்களை நடத்தியாக வேண்டும். நம் குழந்தைகளுக்கு எழுத்தாளர் பெயர்களை சூட்டுவோம். திருமணங்களுக்கு செல்லும் போது புத்தகங்களை பரிசாக கொடுங்கள். ஒரு புதிய தலைமுறை புத்தகவாசிப்பில் பூத்து வரட்டும்” என ஒருமணி நேரம் பேசினார்.

அரசியலோடு இலக்கியத்தையும், இலக்கியத்தோடு அரசியலையும் கலந்து பேசுவது நாஞ்சில் சம்பத் ஸ்டைல். ஆனால் இந்த ஒரு மணி நேர நாஞ்சில் சம்பத் பேச்சில் ஒரு துளி கூட அரசியல் இல்லை. இனி நாஞ்சில் சம்பத் இப்படித்தானா என்பதும் தெரியவில்லை.

- பா.ஜெயவேல்,

படங்கள் : தே. அசோக்குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்