கோயம்பேடு மார்க்கெட்டில் நள்ளிரவில் என்ன நடக்கிறது? #NightRounds

கோயம்பேடு - வந்தாரை வரவேற்கும் சிங்காரசென்னையின் புறநகர் பேருந்து நிலையம் முதல் புதிதாக ரவுசு காட்டும் மெட்ரோ ரயில்நிலையம் வரை... நகரமயமாக்கலில் சிக்குண்டு தன்னை அப்டேட் செய்து கொள்ளும் சென்னையின் முக்கிய  இடம்...

உழைத்துக் களைத்துபோனவர்களுக்கும், இங்கு வந்தால் நிச்சயம் நம்பிக்கை ஊற்று பீறிட வைக்கச்செய்யும் இடம் இங்கு உண்டு. தோல்வியின் கோரப்பிடியில் சிக்குண்டவர்களின் மனநிலையையும் மாற்றும், வாழ்வின் விநோதமான கதைசொல்லிகளை போகிறபோக்கில் காட்டும் விந்தையான ஒரு இடமும் இங்கு உண்டு. ஆம். கோயம்பேடு - தந்தை பெரியார் காய்கறி மார்க்கெட் தான் அது. பெயரிலேயே ஒரு முற்போக்குத் தனத்தை வைத்து இருக்கும் ஒரு உன்னத இடம். 

தவிர,எந்தவொரு பின்புலமும் இன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்துவரும் பல தரப்பு மக்களுடைய உழைப்பையும், நம்பிக்கையையும் விதைத்து அவர்களின் பொருளாதாரத்தைக் கொஞ்சமாவது உயர்த்திக் கொண்டிருக்கும் இடம் கோயம்பேடு காய்கறி மார்க்கெட். 

விடிய, விடிய இங்கு காய்கறிகளை ஏற்றி இறக்கும் லோடுமேன்கள், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும்  லாரிடிரைவர்கள், இரவு முழுக்க டிபன் விற்கும் சிறு கடைகள், சில்லறை வர்த்தகத்திலும் மொத்த வர்த்தகத்திலும் வியாபாரத்தில் சுறுசுறுப்பு காட்டும் வியாபாரிகள், அவர்களை நம்பிய விவசாயிகள் என முழுக்க முழுக்க  நம்பிக்கைத் தரும் மனிதர்களை இங்கு சந்திக்கமுடியும். இரவு நேரத்திலும் விழித்திருக்கும் கோயம்பேட்டின் நம்பிக்கை மனிதர்கள் குறித்த ஒரு லைவ் ரிப்போர்ட் தான் இது.

நாங்கள் மார்கெட்டின் உள்ளே நுழைகையில் நேரம் நள்ளிரவு 12 மணியைக் கடந்து இருந்தது. அடுத்த நாளின் துவக்கமாக எங்களுக்கு அது இருந்தது.  பலருக்கு இரவாக அது இருப்பினும் பகல்போல் தான் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு மக்களின் நடமாட்டத்தை காணமுடிகிறது.

சிறிது சிறிதாக லாரிகள், இந்த காய்கறி மார்கெட்டுக்குள் வரிசை கட்டி நிற்பது அவ்வளவு அழகு. சிலர் மார்கழி மாத குளிரைச் சமாளிக்க, அருகில் இருந்த காய்கறிகளின் கழிவுகளை எரித்து, அதில்  குளிர்காய்கின்றனர்.

கைவிடப்பட்ட நிறைய பசுக்கள், நாய்கள், எருமை மாடுகள் ஆகியவை மார்க்கெட்டின் உள்ளே ஓய்வெடுத்தும், சுற்றித் திரிவதையும் யாரும் தடுக்கவில்லை.மார்க்கெட்டுக்குள் உள்ளே செல்லச் செல்ல குப்பைகளில் ஈரம் கொட்டி,சொத சொதவென இருக்கின்றன பாதைகள். உழைத்த களைப்பில் அருகில் இருக்கும் திண்ணைகளிலும், மீன்பாடி வண்டிகளிலும் இளைப்பாறுகின்றனர் தொழிலாளர்கள்.

சுற்றிலும் பத்துக்கு பத்து சைஸில், குட்டிக் குட்டி தீப்பெட்டிகளாய் இருக்கின்றன காய்கறி கமிஷன் கடைகள். இதில் சிலமணி நேரங்களில் நிகழ்கிறது கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம். இங்கு உள்ளே இருக்கும் கடைகளில் இரவு 10.30-க்கு மொத்த விற்பனையும், வெளிப்பகுதியில் இருக்கும் கடைகளில் இரவு 1.30-க்கு சில்லறை விற்பனையும் படுஜோராக துவங்குகிறது.

இடையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்கி, ஏற்றிக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்.

இங்கு A முதல் N வரை 14 கட்டட வரிசைகள் உண்டு. ஒவ்வொரு வரிசையிலும் 115 கடைகள் வீதம் மொத்தம் 1610 அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மார்கெட்டுக்குள் இருக்கின்றன. தவிர, ஆங்காங்கே இருக்கும் சிறுகடைகள் தனிரகம்.

 .

நள்ளிரவு ஒரு மணிக்கு மொத்த விற்பனைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த  கடையின் உரிமையாளர் ஃபிராங்ளினோடு பேசியபோது, “எங்களுக்கு ஒவ்வொரு ஏரியாவில் இருந்தும் காய்கறிகள் வரும். ஆந்திராவில் இருந்து பெரிய பாகற்காய் வரும். கர்நாடகாவில் இருந்து வெள்ளரி,பெங்களூருவிலிருந்து சவ் சவ் வரும். நம்ம மாநிலத்தில் இருந்து வெண்டை, கத்திரி, பச்சைமிளகாய், பொடிபாகற்காய், ஊட்டி- கேரட், காலிஃபிளவர், மதுரை அவரைக்காய்  ஆகியவை  விற்பனைக்கு வந்து இறங்கும். முக்கால்வாசி லாரிகள் இரவு 10 மணியில் இருந்து, நள்ளிரவு 1 மணிக்குள் வந்துடும். வந்த காய்கறிகளை இறக்க 10 ரூபாய் கூலி கொடுப்போம். அங்கு இருந்து வேறு இடத்துக்கு மாற்ற தூரத்தைப்பொறுத்து பணம் கொடுப்போம். தவிர விற்பனையின்போது கடையில் இருந்து எடைபோட, மூட்டைகளைத் தைச்சு,சம்பந்தப்பட்டவங்களுக்குத் தர்றவங்களையும் பணியில் நியமிச்சு வைச்சு இருப்போம். அவங்களுக்கு  காலை டிபனும், தினக்கூலி 700 ரூபாயும் தந்துடுவோம்.  எல்லா செலவுகளும் போக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5000 ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். சளைக்காம உழைக்கணும்னு மனசு இருந்தால் வெற்றி எப்பயும் நம்மபக்கம் தான்"- என்றார் அந்த  நம்பிக்கையுடன்.

தன் தோட்டத்துக்காய்கறிகளை ஏற்றிக்கொண்டு, தூக்கம் தொலைத்துக் காத்து இருந்த ஆந்திர விவசாயி தஷ்ஷய்யாவிடம் பேசினோம். "எனக்கு ஆந்திராவில் நெல்லூர் பக்கத்துல இருக்கிற கூடூர். அங்க விவசாயம் பாக்கிறேன். மழை குறைவு தான். இருந்தாலும் விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். வாரத்துக்கு ஒரு தடவை, இங்கு விற்பனைக்கு வந்திடுவேன். இங்கு எந்த கடையில் நம்மளுக்கு ஏத்தமாதிரி விலைதருவாங்களோ, வித்துட்டு பணத்தை வாங்கிட்டு கிளம்பிடுவேன்'' என்றார்  அந்த 65 வயது விவசாயி.

 

“எங்க 4 பேருக்கும் சொந்த ஊர் திருவண்ணாமலை. எங்கள் எல்லா பேருக்கும் இங்க தான் வேலை. கிடைக்கிற வேலைகள் பார்ப்போம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 500 ரூபாயாவது சம்பாதிப்போம். வேலை செய்யும்போது காலை டிபன், இங்க கடைகள்ல கொடுத்திருவாங்க. பொதுவாக, எங்களுக்கு வேலைனா நைட் 2 மணியிலிருந்து காலை 10 மணி வரை தான். அதனால, எப்பயுமே இங்க இருக்கோம். பகல்ல மட்டும்  வில்லிவாக்கத்தில் இருக்கிற எங்களோட ரூமுக்குப்போய்  தூங்கி, ரெஸ்ட் எடுத்துட்டு, நைட் ஆனவுடன் இங்க வந்திருவோம்“ என கூட்டாக பதில் அளித்தனர் மீன்பாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த லஷ்மணன், சக்திவேல், சென்னை கிருஷ்ணன், முனியப்பன் ஆகியோர்.

சுருக்கமாக சொன்னால், காலம் பல நம்பிக்கை மனிதர்களை இரவில் உலவவிட்டு வாய்ப்புதரும் இடமாக மாறிப்போயிருந்தது, கோயம்பேடு காய்கறி மார்க்கெட். அத்தனை மனிதர்களுடைய களைப்பு மறைந்த பேச்சுகளில் இருந்து தன்னம்பிக்கை கிடைக்கப்பெற்ற மனிதர்களாக வீடு திரும்பினோம்.

- ம.மாரிமுத்து,

படங்கள்: தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!