ஏன் அரசை அணுகுவதில்லை! விவசாயிகள் தற்கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி

அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் நேரடியாக அரசை அணுகுவதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விவசாயிகள்  தற்கொலை வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கே.கே.ரமேஷ் என்பவர் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக பொதுநலன் வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தொடர்ந்தார். அந்த மனுவில், விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநிலம் முழுவதும் குழு அமைக்க வேண்டும் என்றும். பருவ மழை பொய்க்கும்போது நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தைக் காக்க வேண்டும் என்றும், வேளாண்துறையின் முன்னேற்றம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசை தேர்ந்தெடுக்கும் நீங்கள் ஏன் நேரடியாக அரசை அணுகுவதில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் நிர்வாக முடிவுக்காக ஒவ்வொரு முறையும் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என்றும் வினா எழுப்பினர்.

அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், விவசாயத்தை காக்க, விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு!

இதனிடையே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாலகணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்துள்ள மனுவுக்குப் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!