தமிழகத்தில் அகழ்வாராய்ச்சி தடைக்கு இவர்கள்தான் காரணம்! ஜி.ராமகிருஷ்ணன்

மதுரை மாவட்டம், கீழடியில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வுப்பணிகளை 2017-ம் ஆண்டில் தொடர மத்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், அரசு நிறுவனங்களின் பல்வேறு படிநிலைகளில் சங்பரிவார் ஆதரவாளர்களை நியமித்திருப்பதன் காரணமாகவே இத்தகைய தடைகள் உருவாக்கப்படுகின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தொல்லியல் ஆய்வுப்பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.  கீழடியில் 110 ஏக்கர் தொல்லியல் பகுதியில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே அகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், 2017-ம் ஆண்டில் இப்பணியை தொடர மத்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்துள்ளது. அகழாய்வுப்பணிகளை இரண்டே ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என தொல்லியல்துறை எதிர்பார்ப்பது வரலாற்றை  முழுமைப்படுத்த தடை போடுவதாகும். 2005-ம் ஆண்டில் நிறைவு பெற்ற ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகள் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. ஆனால் வடமாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் நடைபெறும் அகழ்வாய்வுப்பணிகள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்வதோடு சில பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அகழாய்வுப்பணிகளை நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தின் தொன்மையை, நாகரிக வளர்ச்சியை  வெளிக்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சிகளை தொல்லியல்துறை திட்டமிட்டே முடக்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மத்தியில் ஆள்பவர்கள் புனைவுகள் அனைத்தையும் வரலாறுகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒருபகுதியாகவே, உண்மையான அறிவியல்பூர்வமான ஆய்வுகளை தொன்மைமிக்க நாகரிகங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று கருத இடமுண்டு. கீழடியில் ஒரு சதவிகிதம் மட்டுமே ஆய்வு நடந்துள்ள நிலையில், இந்த ஆய்வைத் தொடர அனுமதி அளிக்காமல் இருப்பதற்கு வேறெந்த நியாயமான காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. தொல்லியல்துறை தானாக இத்தகைய முடிவை எடுத்திருப்பதற்கான வாய்ப்பில்லை. அரசு நிறுவனங்களின் பல்வேறு படிநிலைகளில் சங்பரிவார் ஆதரவாளர்களை நியமித்திருப்பதன் காரணமாகவே இத்தகைய தடைகள் உருவாக்கப்படுகின்றன.

மத்திய அரசின் இத்தகைய நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு மற்றும் தொல்லியல் துறை கீழடியில் முழுமையான ஆய்வு நடைபெற அனுமதியையும், ஆய்வுக்கான நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு, மத்திய அரசிடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!