‘‘அரசியல் மாற்றத்தில் பி.ஜே.பி. இருக்கும்!” வானதி சீனிவாசன் விறுவிறு

வானதி சீனிவாசன்

‘பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என தடை விதிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துவிட்ட பின்னும் நிலைமை இன்னும் சீராகவில்லை. ஏ.டி.எம். வாசல்களில் பொதுமக்கள் நிற்பதும், வங்கிகள் பதற்றப் பிரதேசங்களாகக் காணப்படுவதும் தொடர்கிறது. இதுகுறித்து தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளரான வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

‘‘பிரதமர் மோடி சொன்ன டிசம்பர் 30-ம் தேதி முடிந்தும் பணப்புழக்கம் சரியாகவில்லையே?’’

‘‘பிரதமர் மோடியின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இப்போது பணப்புழக்கத்தில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வங்கிக்குப் போகாத மக்கள்கூட இப்போது வங்கிக்குச் செல்ல ஆரம்பித்து உள்ளனர். சின்னச்சின்ன வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள்கூட க்யூஆர் ஸ்கேன் கோடு வைத்திருக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நாம் வழக்கமாகப் பண நோட்டுகளைப் பயன்படுத்துவதுபோல இன்றைக்குப் பயன்படுத்த முடியவில்லை என்பதும் உண்மை. ஏ.டி.எம்-களில் ஒரு சில இடங்களில் பணம் உடனுக்குடன் தீர்ந்துபோய்விடுகிறது. இதையெல்லாம், ஒவ்வொரு நாளும் அரசாங்கம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில போராட்டங்களுக்குப் பின்னணியில் அரசியலைத் தாண்டிய சக்திகள் இருக்கின்றன. அதற்கு, மக்களின் ஆதரவு இல்லை. இந்த நாட்டின் ஏழை மக்கள் முன்னேற வேண்டும் என்று பிரதமர் கொண்டு வந்துள்ள இந்தத் திட்டம் ஏழைகளுக்கானது. இதில் பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக மோடி இருந்திருந்தால் இந்த நடவடிக்கையையே எடுத்திருக்க முடியாது. அரசாங்கத்தின் சிஸ்டம், பிரதமரின் அதே பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருக்கலாம். ஆனால், இன்றைக்கு அவருடைய வேகத்துக்கு மத்திய அரசு இயந்திரம் வேகமாகச் சுழலத் தொடங்கி இருக்கிறது.’’

வைகோ சசிகலா

‘‘மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறிவிட்டாரே?’’

‘‘சட்டமன்றத் தேர்தலின்போதே அந்தக் கூட்டணிக்கு அற்ப ஆயுள் என்று கூறியிருந்தோம். அது நிரூபணம் ஆகி இருக்கிறது.’’

‘‘இந்தப் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வழி செய்து கொடுக்குமா?’’

‘‘தமிழக மக்களின் உணர்வுகளோடு... உரிமைகளோடு 100 சதவிகிதம் மத்திய அரசாங்கம் இணைந்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் குழப்பத்தால், கடந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்காமல் போய்விட்டது. இப்போது அந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புத் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அந்தத் தீர்ப்பு நமக்குச் சாதகமாக இருக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம். மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ள சட்டப் போராட்டத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.’’

‘‘தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வருமானவரிச் சோதனைக்கு ஆளான ராம மோகன ராவ் கதறுகிறாரே?’’

ராம மோகன ராவ், மோடி

‘‘தமிழகத்துக்குத் தலைக்குனிவு ஏற்படுத்தியது பற்றிச் சிறிது வருத்தம்கூட அவரிடம் இல்லாமல் நாலாந்தர அரசியல்வாதிபோல வீராப்புப் பேசுகிறார். அவர் பேட்டி அளித்த முறை, பேச்சு எல்லாவற்றையும் பார்த்தால் இவர் எப்படி நேர்மையான அதிகாரியாகச் செயல்பட்டு இருப்பார் என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. பொறுப்புமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதை மறந்து, சகல அதிகாரங்களையும் கொண்ட மக்கள் பிரதிநிதிபோலப் பேசுவது தமிழக மக்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவமதிக்கும் செயல். விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அவர் மீது தமிழக அரசும், மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னுடைய தனிப்பட்ட தவறுகளை மறைக்க அரசியலமைப்புச் சட்டத்தைத் துணைக்கு இழுக்கிறார். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முன்னுதாரணமாக, வழிகாட்டியாக இருக்க வேண்டிய தலைமைச் செயலாளர் பதவிக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி பிரச்னையைத் திசை திருப்பப் பார்க்கிறார். உப்பு தின்றால் தண்ணீர் குடித்து தானே ஆக வேண்டும்.’’ 

‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்த சசிகலாவை நியமித்துள்ளார்களே?’’

வானதி சீனிவாசன்

‘‘இது முழுக்க முழுக்க அவர்களுடைய உட்கட்சி விவகாரம். அதில், எந்தக் கருத்தும் இல்லை.’’ 

- எஸ்.முத்துகிருஷ்ணன் | படம்: கே.ராஜசேகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!