வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (05/01/2017)

கடைசி தொடர்பு:16:53 (05/01/2017)

அன்லாக்டு ஆண்ட்ராய்டு பேர்ட்ஸ்! -அசர வைத்த அரசுப் பள்ளி ஆவணப்படம்

குழந்தைகளை சிறைப்படுத்தும் செல்போன் கேம்களின் அபாயத்தை ஆவணப்படம் மூலம் உணர்த்தியிருக்கிறார் திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர். ' பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்ததன் விளைவை, ஆவணப்படத்தின் மூலம் காட்சிப்படுத்தினோம். எங்கள் முயற்சியை மற்ற பள்ளிகளும் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள்' என உற்சாகப்படுகின்றனர் ஆவணப்படக் குழுவினர். 

திருப்பூர் மாவட்டம், தம்மரெட்டிப் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் விளையாடுவதில் இருந்து ஆவணப் படம் தொடங்குகிறது. ' நாங்க மைதானத்துல விளையாடறோம். எங்க தம்பி, தங்கைகளைப் பாருங்க' என மாணவி ஒருவர் பேசத் தொடங்க, செல்போன் விளையாட்டுக்களில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளைக் காட்டுகிறார்கள். பள்ளிகளில் பாரம்பரிய விளையாட்டுக்களை மேம்படுத்த செய்ய வேண்டிய முயற்சிகளைப் பட்டியலிடுகிறார்கள். கூடவே, மொபைல் கேம்களின் தீமைகளைப் பற்றி மருத்துவர் ஒருவர் விளக்குகிறார். அவர் பேசும்போது, ' இன்றைக்கு செல்போன் பயன்படுத்தாத குழந்தைகளே இல்லை. தொடர்ந்து செல்போனைப் பயன்படுத்துதால், பார்வை இழப்புக்கு ஆளாக நேரிடுகிறது. சிறு வயதிலேயே கண்ணாடி போடும் நிலை ஏற்படுகிறது.

ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு விளையாடுவதால், உடல் பருமனோடு சேர்த்து சர்க்கரை நோயும் வருகிறது. கழுத்து, தண்டுவடம் பகுதிகளில் உள்ள எலும்புகளில் தொந்தரவு ஏற்படுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. செல்போன் விளையாட்டுக்களைத் தூர எறியுங்கள்' என பாடம் எடுக்கிறார். இதன்பிறகு, சக மாணவர்களிடம் பணம் வசூலித்து, பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களை வாங்குகின்றனர். பல்லாங்குழி, கண்கட்டி விளையாட்டு, தாயம், கபடி, குண்டு விளையாட்டு, கோகோ என பலவித விளையாட்டுக்களில் மூழ்குகிறார்கள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தெருவில் இறங்கி விளையாடுவதை பெற்றோர்கள் ஊக்குவிக்கின்றனர். படிப்படியாக செல்போன் விளையாட்டுக்களில் இருந்து குழந்தைகள் விடுபடுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் ஆவணப்படக் குழுவினர். 

தம்மரெட்டிப் பாளையம் அரசுப் பள்ளி ஆசிரியர் கார்த்திக்கிடம் பேசினோம். " எங்கள் வீட்டில் இருந்துதான் இப்படியோரு யோசனை தோன்றியது. எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும், செல்போன் இல்லாத குழந்தைகளைப் பார்ப்பது அரிது. இரவு தூங்கப் போகும் வரையில் செல்போனில் விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மொபைலைப் பறிப்பதும் அவ்வளவு எளிதானதல்ல. டச் மொபைல்களின் வருகைக்குப் பின்னர்தான், செல்போன் கேம்களின் ஆதிக்கம் அதிகமானது. நகரங்களில்தான் இதுபோன்ற பிரச்னைகள் என்றால், கிராமங்களையும் டச் போன்கள் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளின் உடல்நலத்தைக் கெடுக்கும், செல்போன் விளையாட்டுக்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனத் தோன்றியது.

எங்கள் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் விழிப்பு உணர்வை உருவாக்கும் வகையில் பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தினோம். மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை அப்படியே ஆவணப்படமாகக் கொண்டு வந்தோம். ஒருகாலத்தில் தெருவில் விளையாடப் போனாலே, குழந்தைகளைத் திட்டித் தீர்க்கும் பெற்றோர்கள் இருந்தார்கள். இப்போது குழந்தைகள் வெளியில் விளையாடப் போவதையே பெரும் வரமாகப் பெற்றோர்கள் கருதுகிறார்கள். இதை கருவாக வைத்துக் கொண்டு அன்லாக்டு ஆன்ராய்டு பேர்ட்ஸ் என்ற தலைப்பில் படமாக்கினோம். தொடக்கத்தில் மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய படமாக இருந்தது. ' இந்தப் படத்தை இன்னும் விரிவாக எடுத்துக் கொடுங்கள்' என ஈரோட்டில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கேட்டனர். அவர்களுக்காக பத்து நிமிட ஆவணப்படமாக மாற்றியிருக்கிறோம். எங்கள் முயற்சி வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி" என்றார் நெகிழ்ச்சியோடு. 

அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மைதானங்களை முன்வைத்து ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஒவ்வொரு குடும்பமும் கவனிக்க வேண்டிய படம் இது! 

 

 

 

- ஆ.விஜயானந்த் 
 


டிரெண்டிங் @ விகடன்