வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (05/01/2017)

கடைசி தொடர்பு:17:29 (05/01/2017)

முதல்வரின் உத்தரவை ரத்து செய்த ஆளுநர்! கலகலக்கும் புதுச்சேரி

அரசு உத்தரவுகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிறப்பித்த சுற்றறிக்கை உத்தரவை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்துள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு உயர் அதிகாரிகளை உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்காக “வளமான கிராமப்புறம்” என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். அதில் தலைமைச் செயலாளர், பிற துறைச் செயலர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், காவல்துறையின் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவுக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பியதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமாரை கடந்த 29-ம் தேதி கிரண்பேடி சஸ்பெண்ட் செய்ததோடு காவல்துறைக்கு அவர் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் சிபிசிஐடி அவரது வழக்குப்பதிவு செய்தது. இதற்குத்தான் புதுச்சேரி அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியிலும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், “அரசு உத்தரவுகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதனால் அரசு ரகசியங்களை காக்கும் சட்டத்தின்படி அனைத்து அரசு அதிகாரிகளும் சமூக வலைதளங்களின் மூலம் அரசு சம்மந்தப்பட்ட விவரங்களை பரிமாறக் கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியதோடு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் அரசு அதிகாரிகள் பணிக்கு வர வேண்டிய அவசியமில்லை. அதுகுறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார். முதல்வரின் இந்த பேச்சு உடனடியாக சுற்றறிக்கையாக வெளியானதும் ஆளுநர் கிரண்பேடியின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து பெரும்பாலான அதிகாரிகள் உடனே வெளியேறினர்.

இந்நிலையில், அமைச்சரவை எடுத்த இந்த முடிவும், பிசிஎஸ் அதிகாரிகள் கிரண்பேடிக்கு எதிராக நடத்திய ஆலோசனைக் கூட்டமும் அவரை கோபமடைய வைத்தது. இதனிடையே, டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துவிட்டு வந்த ஆளுநர் கிரண்பேடி, “புதுச்சேரியின் வளர்ச்சிக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்தித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லி முதல்வர் நாராயணசாமி பிறப்பித்த ஆணைய ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

- ஜெ.முருகன்

படம்: அ.குரூஸ்தனம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க