வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (06/01/2017)

கடைசி தொடர்பு:15:38 (06/01/2017)

'தனி ஒருவன்' ஆனார்களா தனி அதிகாரிகள்?!  -மலைக்க வைக்கும் மாநகராட்சிகள் 

ருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிகளின் கைகளுக்குள் வந்துள்ளது. 'மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு கிடைத்த இந்த வாய்ப்பை, அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கோவை, ஈரோடு உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே பணிகள் வேகம் பெற்றுள்ளன' என்கின்றனர் அதிகாரிகள். 

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12 ஆயிரம் ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களின் பதவிக்காலம், கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் நிறைவடைந்தன. ' உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், சுழற்சி முறை மற்றும் இடஒதுக்கீடு போன்றவற்றை முறையாகக் கடைபிடிக்கவில்லை' என்று கூறி, உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்தது உயர் நீதிமன்றம். இதன்பிறகு, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகம் செய்வதற்கு, தனி அலுவலர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டது. "1996-ம் ஆண்டுக்குப் பிறகு, தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி அமைப்புகள் வந்துள்ளன. சட்டவிரோத ஆக்ரமிப்புகள், முறைகேடான குடிநீர் விநியோகம், விளம்பரப் பலகைகளை அகற்றுவது என அதிகாரிகள் நேரடியாக களமிறங்கலாம். இப்படியொரு வாய்ப்பை ஒரு சில அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர். உள்ளாட்சிகளில் பதவி வகித்த மக்கள் பிரதிநிதிகள் பலரும், ஆட்சிக்காலம் முடிவதற்குள் பெரும் செல்வந்தர்கள் ஆகிவிடுகின்றனர். 'எந்த வகைகளில் கமிஷன் பெற முடியும்' என்பது மட்டும்தான் அவர்களின் கணக்காக இருக்கிறது. இவர்களுக்கு இணக்கமாக இல்லாத அதிகாரிகளும் பந்தாடப்படுகின்றனர். தற்போது தனி அதிகாரிகளின் கைகளில் உள்ளாட்சி நிர்வாகம் இருக்கிறது. இப்படியொரு வாய்ப்பு இனி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்" என விவரித்த மாநகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர், 

"கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன் தனி அலுவலராக இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களில் 115 கோடி ரூபாய் மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடங்களை மீட்டிருக்கிறார். மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ஆக்ரமிக்கப்பட்டிருந்த பொது ஒதுக்கீட்டு இடங்களைப் பட்டியலிட்டு, இணையத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த இடங்களில் பூங்காக்கள், மரம் நடுவது என மாணவர்களை வைத்தே நற்பணிகளைச் செய்து வருகிறார். அரசு அலுவலர்கள் வசிக்கும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ளவாறு, பல இடங்களில் சிறப்பான நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, நகரத்திற்கே சவாலாக இருந்த விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினார். இதுவரையில், 2,800 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. முறையான குடிநீர் விநியோகத்தைத் தடுக்கும் வகையில், சட்டவிரோத இணைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து கொடுத்து வந்தனர். நேரடியாக களமிறங்கி, 1,050 குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தார். இதற்குக் காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குனியமுத்தூரில் ட்ரீ பேங்க் ஒன்றை அமைத்து, மாநகராட்சி இடங்களில் மரம் நடுவதை வாடிக்கையாகவே மாற்றிக் காட்டிவிட்டார். ஆக்ரமிப்புகளை அகற்றும்போது, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் எதிர்த்தாலும், பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது. கோவையைப் போலவே, மற்ற மாநகராட்சிகளும் அதிரடியாக களமிறங்க வேண்டும்" என்றார் விரிவாக. 

"ஒரு சில அதிகாரிகளைத் தவிர, உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகள் பலரும் கவுன்சிலர்களைவிடவும் கமிஷன் பார்ப்பதில் கறாராக உள்ளனர். காரணம், இவர்களில் பலர் தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரியால் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். வேறு சிலர் மாவட்ட அமைச்சர்களின் ஆதரவில் பதவியில் நீடிப்பவர்கள். தனி அதிகாரிகளால் நிர்வாகம் கவனிக்கப்பட்டாலும், ஒட்டுமொத்த அதிகாரமும் மாவட்ட ஆட்சியர் வசம் இருக்கின்றது. பல மாவட்டங்களின் கலெக்டர்கள், அமைச்சர்களுக்கு இணையாக அரசியல் செய்து வருகிறார்கள். இதனால், தனி அலுவலர்கள் என்ற வார்த்தைக்குள் அரசியல்வாதிகளும் அங்கம் வகிக்கத் தொடங்கிவிட்டனர். மேயர், கவுன்சிலர்கள் இருக்கும்போது என்ன நடக்குமோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல்தான் பல தனி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாநகராட்சிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை தலைமைச் செயலாளர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்கிறார் நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர். 

ஆக்ரமிப்பு நிலங்களை மீட்பது; விளம்பரப் பலகைகளை துடைத்தெறிவது; நகரத்தையே சுற்றுச்சூழல் சிறப்புமிக்கதாக மாற்றுவது; முறையான குடிநீர்; சுத்தமான சுகாதாரம் என நகரத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றும் பணி, தனி அலுவலர்களின் கைகளுக்கு வரமாக வாய்த்திருக்கிறது. மக்களுக்கான கனவு நகரத்தை நிர்மாணிக்கும் பணியை இனியாவது தொடங்குவார்களா? 

- ஆ.விஜயானந்த்
 


டிரெண்டிங் @ விகடன்