வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (06/01/2017)

கடைசி தொடர்பு:17:07 (06/01/2017)

சாமிநாதனை ஏன் முன்னிறுத்தினார் ஸ்டாலின்? - முடிவுக்கு வந்த 30 ஆண்டு இளைஞரணி பதவி 

தி.மு.கவின் செயல் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் பதவியை தன்வசம் வைத்துக் கொண்டார். ' இளைஞரணிப் பதவியை விட்டுக் கொடுத்ததற்குக் காரணமே, அந்தப் பதவியை முன்னிறுத்தி குடும்ப உறவுகள் செய்த அரசியல்தான்" என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக, உடன்பிறப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட துணை அமைப்பாக இளைஞரணி இருந்து வந்தது. காரணம், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இளைஞரணியின் செயலாளராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்ததுதான். ‘இளைஞரணியில் சிறு பொறுப்பு கிடைத்தால்கூட போதும்’ என நினைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. தி.மு.க மாநாடு, கட்சி விழாக்களில் இளைஞரணி நிர்வாகிகள் அரணாகச் செயல்பட்டு வந்தனர். கடந்த 4-ம் தேதி அறிவாலயத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.கவின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்டாலின். தி.மு.கவின் செயல் தலைவர் பதவியோடு பொருளாளர் பதவியும் இளைஞரணிச் செயலாளர் பதவியும் ஸ்டாலின் வசமே இருந்தது. இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘ இளைஞர் அணிச் செயலாளராக கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வந்த மு.க.ஸ்டாலின், கழக செயல் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குப் பதிலாக கழக சட்டதிட்ட விதி 18, 19 பிரிவுகளின்படி, இளைஞர் அணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதனும் இளைஞர் அணி இணைச் செயலாளராக சுபா.சந்திரசேகரும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்’ என அறிவித்தார். 

அறிவாலய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இரண்டு நாளில் இப்படியொரு அறிவிப்பு வெளியாகும் என தொண்டர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். நீண்டகாலமாக, இளைஞரணிச் செயலாளர் பதவியில் நீடிப்பது விமர்சனத்துக்கு உள்ளாவதையும் கவனித்து வருகிறார். ‘ கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் வந்துவிட்டால், இதர பொறுப்புகளைக் கைப்பற்றிவிட வேண்டும்’ எனக் குடும்ப உறுப்பினர்களே களத்தில் இறங்கினர். முதலில், ‘பொருளாளர் பதவியை விட்டுக் கொடுப்பார்’ என எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்காததால், ‘இளைஞரணி பதவியை தயாநிதி மாறனுக்கு வழங்க வேண்டும்’ என ஒரு சிலரும் ‘ அழகிரி மகன் துரை தயாநிதிக்குக் கொடுக்க வேண்டும்’ என வேறு சிலரும் கோரிக்கை வைத்தனர். ஒருகட்டத்தில், ‘ அன்பில் பொய்யாமொழி மகேஷ் வசம் இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுப்பார்’ என்ற பேச்சும் எழுந்தது. ‘ இளைஞரணிச் செயலாளர் பதவியிலும் குடும்ப ஆதிக்கம் வர வேண்டுமா?’ என தீவிரமாக ஆலோசித்தார் செயல் தலைவர். ‘ கட்சி புரோடாகால்படி, இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள சாமிநாதனுக்கே செயலாளர் பதவியைக் கொடுத்துவிடுங்கள். சுபா.சந்திரசேகரை இணைச் செயலாளர் ஆக்கிவிடுங்கள்’ என உறுதியாகக் கூறிவிட்டார். இப்படியொரு பதவி பரிமாற்றம் நடக்கும் என்பதை குடும்ப உறுப்பினர்களே எதிர்பார்க்கவில்லை. செயல் தலைவர் பதவிக்கு வந்ததும் ஸ்டாலின் கொடுத்த முதல் அதிர்ச்சி இது” என்றார் விரிவாக. 

“ சாமிநாதனுக்குப் பதவியைக் கொடுத்ததில் எந்த முக்கியத்துவமும் இல்லை. அவர் ஏற்கெனவே மாவட்டச் செயலாளர் பதவிக்கு நின்று தோற்றுப் போனவர். கட்சியின் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். கட்சியின் சீனியராகவும் இருக்கிறார். இதுவரையில், அவர் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. அவரை நியமிப்பதன் மூலம் சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பில்லை. கூடவே, ‘தி.மு.கவில் அதுவும் ஒரு துணை அமைப்புதான்’ என்றரீதியில் மட்டுமே பேசப்படும். ஸ்டாலின் இருந்தவரையில், அந்தப் பதவிக்கு ஒரு மரியாதை கொடுக்கப்பட்டு வந்தது. அதே இடத்தில் குடும்ப உறுப்பினர் யாரையாவது நியமிக்கும்போது, இன்னொரு அதிகார மையம் உருவாகும் என்பதையும் ஸ்டாலின் உணர்ந்து வைத்திருக்கிறார். எனவேதான், சத்தம் இல்லாமல் சாமிநாதனைப் பதவிக்குக் கொண்டு வந்தார்” என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர். 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்