தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி : தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் திருச்சியில் விவசாயிகள் மற்றும் பொது நல அமைப்புகள் ஒன்றிணைந்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கம், ஆதிதமிழர் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் ஒன்றிணைந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வெஸ்டிரி பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். அப்போது விவசாயிகள் காய்ந்த மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களை தூக்கிப் பிடித்தபடி, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்ககோரியும் இந்த போராட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், "தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று உயிரைப் பலியாக கொடுத்து வருகிறார்கள் அந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும், வறட்சியின் காரணமாக விவசாயக்கடன்களை முழுவதையும் தள்ளுபடி செய்ய மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடாதது தான். காவிரியில் தண்ணீர் முறைப்படி விட்டிருந்தால் பாதிப்பு குறைந்திருக்கும்," என்றார்.

 

சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!