ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்... கருணாநிதியாக மாறும் சசிகலா!

 

 

 

ரை நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் இரு பெரிய கட்சிகளின் தலைமை தற்போது மாறியுள்ளது. இது தொண்டர்களுக்கு புதிய அனுபவம்தான். முந்தைய தலைமையின் குணங்களுக்கு அனுசரித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு... புதிய தலைமையின் குணங்களால், இதுவரை பார்க்காத காட்சிகளைநோக்கி, அவர்களைக் கடத்த  இருக்கிறது. ஓர் ஆளுமையின் கீழ் இருந்து, எதிர்த்து கருத்துகள் கூறாமல்... விசுவாசத்தை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு, பதவி வாங்கிப் பழக்கப்பட்ட அ.தி.மு.க-வில், இனி அதற்கு வாய்ப்பு இல்லை. பொதுக்குழுவில்  கருணாநிதியையே எதிர்த்துப் பேசிப் பழக்கப்பட்ட தி.மு.க-வில், அதுபோன்ற நிகழ்வுகளை இனி பழைய வரலாற்றில்  மட்டும்தான் பார்க்க முடியும். சுருக்கமாகச் சொன்னால்... இரண்டு கட்சிகளின் தலைமை மாற்றத்தால் இனி, தி.மு.க.  என்பது அ.தி.மு.க. போலவும்... அ.தி.மு.க. என்பது தி.மு.க போலவும் மாறப் போகிறது. 

ஜெயலலிதா

கட்டுப்பாடும்... ஜனநாயகமும்! 

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மக்கள் எதிர்ப்பு இருந்தாலும்... சசிகலாவால், கட்சிக்குள் எந்தச் சிக்கலும் இல்லாமல் பொதுச் செயலாளர் ஆக முடிகிறது என்றால்... அதற்குக் காரணம் ஜெயலலிதாதான். ‘சசிகலாவை விட்டால் அந்தக் கட்சியில் வேறு யாரும் இல்லை’ என்று பொதுமக்களே பேசும் அளவுக்கு ஒற்றைத் தலைமையை உணரவைத்து இருந்தார் ஜெயலலிதா. அவர், இருந்தவரை கட்சியின் தலைமைக்கு எதிராக யாரும் கருத்துச் சொல்லத் தைரியம் இல்லாத பொம்மை ராணுவப் படையாகத்தான் அ.தி.மு.க-வை வைத்து இருந்தார். 30 வருடங்களாக ஒற்றைத் தலைமையின் கீழ் சுயக் கருத்து இல்லாமல் இயங்கிவந்தவர்கள் திடீர் என சசிகலாவை எதிர்த்து எப்படிப் பேசுவார்கள்? இதை நன்கு தெரிந்தனால்தான் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம், பேனா என அவரின் பொருட்களின் மூலம் நிழலைக் காட்டிப் பயமுறுத்தி வருகிறார் சசிகலா. ஆனால், இதற்கு நேர் எதிராக உள்ளது ஸ்டாலின் விவகாரம்.

தி.மு.க-வின் உட்கட்சி ஜனநாயகத்தால்தான் ஸ்டாலின் செயல் தலைவர் ஆவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ‘இந்தத் தேர்தலில் வாரிசு யாருக்கும் சீட் கிடையாது’ என்று ஒருமுறை கருணாநிதி கூறியபோது... ‘ஸ்டாலினும் போட்டியிட மாட்டாரா’ என்று பதில் கேள்வி கேட்டு கருணாநிதியை வாய் அடைக்கவைத்தவர் வீரபாண்டி ஆறுமுகம். இதுபோல ஆயிரம் கதைகள் உண்டு, தி.மு.க-வின் உட்கட்சி ஜனநாயத்துக்கு. ஸ்டாலின், கட்சியில் முன்னேறுவதற்குத் தடையாக இருந்ததும் இதுதான். இந்த உட்கட்சி ஜனநாயகத்தை உரம்போட்டு வளர்த்தவர் கருணாநிதிதான் என்றாலும், ஸ்டாலினின் நெருக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றிக்கொள்ளும் கேடயமாக அது பயன்பட்டது.

இந்த வளையத்தை உடைக்க ஸ்டாலின் தலைகீழாய் நிற்கவேண்டி இருந்தது. சிறிதுசிறிதாக அந்த மலைகளை எல்லாம் உடைத்து, அவரின் சூரியனை இன்று பிரகாசிக்க  செய்து இருக்கிறார். தனக்குத் தடையாக இருந்த இந்த ஜனநாயகக் கொடியை... இனி, எந்தக் காலத்திலும் தி.மு.க-வில் படரவிட மாட்டார் ஸ்டாலின். இனி, தி.மு.க-வின் ஒரே குரல், ஸ்டாலின் மட்டும்தான். தி.மு.க-வில் ஒரு ஜெயலலிதாவாக ஸ்டாலின் இருப்பார். அதற்கான முதல் படியைக் கடந்த சட்டமன்றத் தேர்தலிலே எடுத்து  வைத்துவிட்டார். கூட்டணிக்காக எந்தக் கட்சியுடனும் இறங்கிப் பேசவில்லை. தான் தேர்வுசெய்தவர்களைத்தான்  வேட்பாளர்களாக நிறுத்தினார். இது, அனைத்தும் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அ.தி.மு.க-வில் தற்போது  நடக்கும் காட்சிகள் எதுவும் கடந்த 30 வருடங்களில் தொண்டர்கள் பார்க்காத விஷயங்கள். என்ன ஆனாலும் தினமும் கட்சி அலுவலகம் வருவது கருணாநிதியின் வழக்கம். அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்தவரை ஜெயலலிதா, கட்சி அலுவலகம் வருவதே ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்ற 6 நாட்களில்... 4 நாட்கள் அவர் கட்சி அலுவலகம் வந்து இருக்கிறார். நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். கட்சி சீனியர்களை அருகில் வைத்துக்கொள்வது என்று அப்படியே கருணாநிதி ஸ்டைலில் அரசியலுக்கு வந்துவிட்டார் சசிகலா. தொண்டர்களுக்கு அவர்மேல் இருக்கும் கோபத்தைப்  போக்க... இதைத் தவிர வேறு வழியும் இல்லை.

கருணாநிதி

சாதி... மதம்... மொழி!

திராவிட இயக்கத்தின் ஆணிவேர் மதமும்... மொழியும்தான். மத அடக்குமுறையில் வேர்விட்டு, மொழி வேறுபாட்டால் துளிர்விட்ட இயக்கம் தி.மு.க. அரை நூற்றாண்டுகால திராவிட இயக்கக் கொள்கைகளில் ஏதாவது  ஒரு பிணைப்பை, தி.மு.க-வுடன் ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் கருணாநிதி. பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக்கொண்டு... அதில் இருந்து வெகுதூரம் தள்ளியே இருந்தார் ஜெயலலிதா. புதிய தலைமைகள், இந்த இருவேறு விஷயங்களில் எப்படி இருக்கும்? பாரம்பர்ய தி.மு.க-வில் இருந்து கொள்கைரீதியாக மாறுபடுகிறார்  ஸ்டாலின். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது... கட்சியிலிருந்தும், வெளியிலிருந்தும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அதை மறுத்தார். பின்பு, ‘தி.மு.க-விலும் இந்துக்கள் இருக்கிறார்கள்’ என்று கூறினார். அவர் செயல் தலைவராகப் பதவி ஏற்ற பொதுக்குழுகூட நல்ல நேரம் பார்த்துத்தான் தொடங்கப்பட்டது. காலை, 10 மணிக்கு, பொதுக்குழு கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டாலும்... காலை, 9.10 மணிக்கே கூட்டம் கூடி, 10.25 மணிக்கு முடிக்கப்பட்டது. மதியம், 12 மணிக்கு மேல், ராகு காலம் தொடங்கயிருந்ததால்... அதற்கு முன்னே, ஸ்டாலின் செயல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தத்தில் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து மாறுபட்டு வரும் காலங்களில் அனைவரும் கட்சிக்குள் வரும் வண்ணம் அவரது செயல்பாடுகள் இருக்கும்.

தென்  மாவட்டங்களில் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் கட்சியாக தி.மு.க. பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம்,  கருணாநிதி. அவர், பல்வேறு நலத் திட்டங்களையும், நகரங்களில் பாலங்களையும் அமைத்திருக்கிறார். கிராமங்களில் தி.மு.க-வுக்கு அப்படி ஒரு சாதி அடையாளம் இருந்துவருகிறது. ஜெயலலிதாவை பொறுத்தவரை, சங்கராச்சாரியாரை கைதுசெய்து... சிறுபான்மையினர் ஆதரவைப் பெறுவார். அதேநேரம், மதமாற்றத் தடைச்  சட்டத்தைக் கொண்டுவந்து இந்துக்கள் ஆதரவைச் சரிசெய்வார். ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவரை என்கவுன்டர்  செய்தால்... அதில், உள்ள ஒருவருக்கு முக்கியப் பதவி கொடுப்பார்.

இப்படி இரண்டு பக்கமும் பேலன்ஸ் செய்து வந்தார். அந்த வழியைத்தான் ஸ்டாலின், இனி பின்பற்றுவார். சசிகலாவை, பொறுத்தவரை தெய்வ நம்பிக்கை உடையவர் என்று எடுத்துக்கொண்டாலும், அவரைப் பின்னால் இருந்து இயக்கும் நடராஜனின் எண்ணங்கள்தான் கட்சியில் பிரதிபலிக்கும். பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு... பதவி ஏற்றபோது பேசிய சசிகலா, ‘பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம்’ என்று கோடிட்டுப் பேசினார். இதுவரை அண்ணா பெயரைக்கூட, குறிப்பிட்டு இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், பெரியார் பெயரை அதிகம் பயன்படுத்தியது கிடையாது. அதேபோன்று பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு சசிகலா, சந்தித்த முதல் தலைவர் திருமாவளவன். குறிப்பிட்ட சாதி அடையாளத்தை மறைக்க தலித் தலைவரை சந்திப்பது, நடராஜனுக்கு உள்ள தமிழ்  அமைப்புகளின் தொடர்புகள் மூலம் அதுசார்ந்த விஷயங்களில் இனி அ.தி.மு.க அதிக ஈடுபாடு இருப்பதுபோல்  நடிக்கும். இரண்டு கட்சிகளும் இந்த விஷயங்களில் செய்யப் போகும் மாற்றங்களால் தமிழக அரசியல் சூழலே  மாறும். 

ஸ்டாலின்

உறவுகள்! 

‘கருணாநிதி, குடும்பத்தால் கெட்டார்... ஜெயலலிதா, நட்பால் கெட்டார்’ என்பார்கள். நட்பைவிட, கருணாநிதியின் குடும்ப அரசியலுக்குத்தான் தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதனால்தான் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க. தோற்பதற்கு அதுவே முக்கியக் காரணமாக இருந்தது. குடும்பம் இல்லாதவர் என்கிற இமேஜ்தான் ஜெயலலிதாவுக்கு இரண்டுமுறை ஆட்சியைக் கொடுத்தது. ஆனால், தற்போது எல்லாம் தலைகீழ்தான். உறவுகள் அனைத்தையும் தள்ளியே வைத்து இருக்கிறார் ஸ்டாலின். அழகிரியை கட்சியைவிட்டு நீக்கியது, கனிமொழியை டெல்லி அரசியலை பார்த்துக்கொள்ள வைத்தது... இப்படி உறவுகள் அனைத்தையும்  துறந்து தனி மரமாக நிற்கிறார் ஸ்டாலின்.

கருணாநிதி, காலத்தைப்போன்று ஸ்டாலின் காலத்தில் அவரின் உறவுகள் ஆட்டம்போட முடியாது. அ.தி.மு.க-வின் நிலைமையைச் சொல்லவே வேண்டாம். ஜெயலலிதா, இறந்தபோதுகூடக் கட்சிக்காரர்கள் யாரும் இல்லாமல் சுற்றிலும் தன் உறவுகளை நிறுத்திக்கொண்டார் சசிகலா. ‘ஒன்வுமன் ஆர்மி’யாக இருந்த அ.தி.மு.க-வை, இன்று அரை டஜன் அதிகார மையங்களைக்கொண்டு இயக்கி வருகிறார். கட்சியைவிட்டு விரட்டப்பட்டவர்கள் எல்லாம்... இன்று, போயஸ் தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறார்கள். மாவட்டத்துக்கு ஒருவர் என குடும்ப உறுப்பினர்களைப் பிரித்து... கட்சியைக் கட்டுக்குள்வைத்து வருகிறார் சசிகலா. மன்னார்குடி சென்று திவாகரனைச் சந்திக்கச் சொல்லிக் கட்சிக்காரர்களை வற்புறுத்துவது, தி.மு.க-வினரை மதுரையில் சென்று அழகிரியை சந்திக்கவைத்ததை ஞாபகப்படுத்துகிறது.

ஓர் இயக்கம், அது தோன்றிய காலத்தில் இருந்த பிரச்னைகளுக்கும்... தற்போது உள்ள பிரச்னைகளுக்கும் ஒரே அளவுகோலில் தீர்வுகாண முடியாது. காலத்துக்கு தகுந்தாற்போல் அதன் கொள்கைகள் மாறவேண்டியது அவசியம்தான். அது, அந்த இயக்கத்தின் தொண்டர்கள் மூலமாக நடக்க வேண்டுமே தவிர, தனிநபர் விருப்பு வெறுப்புக்காகக் கட்சியின் கொள்கையை மாற்றுவது... அந்த இயக்கம், தோன்றிய நோக்கத்தைச் சிதைப்பதாகும்.

- பிரம்மா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!