யாருக்கு என்ன விருது..? புத்தகக் காட்சியில் முதல் நாள்

சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 40-வது சென்னைப்  புத்தகக் காட்சி நேற்று மாலை தொடங்கியது. 

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் 1977 முதல் சென்னையில் புத்தகக் காட்சி நடந்து வருகிறது. தொடக்கத்தில் 22 கடைகள், சில நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்தக் காட்சி இன்று 700 கடைகள், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் என மிக பிரமாண்ட திருவிழாவாக மாறியிருக்கிறது. 

புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி  வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சி கடந்த ஆண்டு, கனமழை காரணமாக ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்தாண்டு வழக்கம்போலவே ஜனவரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 2017-ம் ஆண்டுக்கான கையேடை வெளியிட்டு, புத்தகக் காட்சியையும் திறந்து வைத்தார் கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். 

விழாவின் தொடக்கத்தில் சிறந்த பதிப்பாளருக்கான, ''பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது'' அல்லயன்ஸ் நிறுவனத்துக்கும், சிறந்த விற்பனையாளருக்கான, ''பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது” மெட்ராஸ் புக் ஹவுஸ் நிறுவனத்துக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான, ''கவிஞர் அழ. வள்ளியப்பா விருது” எழுத்தாளர் அய்யக்கண்ணுக்கும், ''சிறந்த நூலகர் விருது” பெருங்களத்தூர் கிளை நூலகத்தின் நூலகர் கு.தாமோதரனுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான ''நெல்லை சு.முத்து விருது” டாக்டர் எஸ்.நரேந்திரனுக்கும், சிறந்த தமிழறிஞருக்கான, ''பாரி செல்லப்பனார் விருது” கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான, ''ஆர்.கே.நாராயண் விருது” பேராசிரியர் எஸ்.ஏ.சங்கர நாராயணனுக்கும் வழங்கப்பட்டது.  

ஜனவரி 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் தினமும் பல்வேறு துறை ஆளுமைகள் கருத்துப் பகிர்வு செய்கிறார்கள். இன்று மாலை 6 மணிக்கு எழுத்தாளர் கண்மணி குணசேகரன், ‛நடுநாட்டுக் கதைப்பாடல்கள்’ என்ற தலைப்பிலும், சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம், ‛வீழ்ந்த மரங்களும் முறிந்த மனங்களும்’ என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்வில் முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன், ‛நூல் ஆயுதம்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.   

தினந்தோறும் காட்சிக்குள் அமைக்கப்பட்டுள்ள சிற்றரங்கில் பபாசி அமைப்போடு வாசகசாலை அமைப்பு இணைந்து தொடர் இலக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளது. அதில் இன்று மாலை 4.30 மணிக்கு எழுத்தாளர் அபிலாஷ், ‛கவிதையை அணுகுதல்’ என்ற தலைப்பில் வாசகர்களோடு உரையாடுகிறார். நாளை காலை 11.30 மணிக்கு இயக்குநர் உஷா கிருஷ்ணன், கவிஞர் மனுஷி பாரதி, கவிஞர் அகர முதல்வன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநர் வடிவேல் ஆகியோர் தங்கள் முன்னோடிகளைப் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள். மாலை 4.30 மணி அரங்கில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை ‛தமிழின் கதை சொல்லல் மரபு’ பற்றி பேசுகிறார்.

புத்தகக் கண்காட்சியில் புத்தகம் தேடும் சிறுமி

பண மதிப்பு நீக்கம் புத்தகக் காட்சியில் பெருமளவு எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பதிப்பகத்தாரிடம் கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான "ஸ்வைப்பிங் மெஷின்" இல்லை. அதனால் பபாசி அமைப்பே சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஒவ்வொரு பாதையிலும் குறிப்பிட்ட அளவுக்கு பொதுவான "ஸ்வைப்பிங் மெஷின்"கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த ஸ்டாலில் புத்தகம் வாங்கினாலும் இந்த மெஷின்களில் பணம் செலுத்தலாம். இதுதவிர, சில்லரைச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக 500 ரூபாய், 2000 ரூபாய் ரூபாய்களைக் கொடுத்து, 50, 100 ரூபாய் மதிப்புள்ள டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றை ஸ்டால்களில் கொடுத்து புத்தகங்கள் வாங்கலாம். இந்த டோக்கன்களுக்கென தனி கவுன்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.  

காத்திரமான இலக்கியங்கள், ஈர்க்கும் அட்டைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான நூல்கள், மேஜிக் புத்தகங்கள், ஈ- ரீடர் என அனைத்து தரப்பினரையும் கவரும் எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கிறது புத்தகக் காட்சி. 5 புத்தகங்கள் வாங்கினால் 3 புத்தகங்கள் இலவசம் போன்ற தள்ளுபடி குவியல்களும் உண்டு. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடக்கும்.

அடுத்த 12 நாட்களை புத்தகங்களுடனும் வாசிப்புடனும், இலக்கிய ஆளுமைகளுடனும் கொண்டாட தயாராகுங்கள்! 

சென்னைப் புத்தகக் காட்சி தொடக்க விழா படங்களைக் காண இங்கே கிளிக்கவும்

- வெ.நீலகண்டன்

படங்கள்: ப.சரவணகுமார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!