'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' - ஆய்வில் வனத்துறை அமைச்சர் சொன்ன 'பொறுப்பான' பதில்!

விவசாயிகள்,அமைச்சர்கள்

றட்சியின் காரணமாக தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகமாக நிகழ்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் சார்பாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இன்று தேனி மாவட்டத்தில் வறட்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ் செல்வன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ் ஆகியோர் தேனியில் ஆய்வு மேற்கொண்டனர். 

விவசாயிகள்,அமைச்சர்கள்


    தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர். தேனி மாவட்டத்தில் 113 வருவாய் கிராமங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வறட்சி பகுதிகளை ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயார் செய்து வைத்துள்ளது. விவசாயத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் தேனி மாவட்டத்தில் மக்காச்சோளம், நெல், திராட்சை ஆகிய பயிர்கள் அதிகம் பயிரிடுவதால் அதனை ஆய்வு செய்ய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த மாதம் 7,8,9 தேதிகளில் இந்த ஆய்வானது நடந்து 10, 11-ம் தேதிகளில் வறட்சி நிவாரணம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று காத்திருக்கின்றனர் விவசாயிகள். ஆய்விற்கு வந்த அதிகாரிகளிடமும் அமைச்சர்களிடம் ``எம்.ஜி.ஆர் காலத்தில் அடிக்கல் நாட்டிய திப்பரேவு அணை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அன்றைய தேதி 3 கோடிக்கு மதிப்பீடு செய்த இந்த திட்டம் இன்றைய தினத்தில் 70 கோடி ரூபாய் செலவாகும். இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு இருந்தால் எங்களுக்கு வறட்சி காலங்களில் உதவியாக இருக்கும்`` என்று கோரிக்கை வைத்துள்ளனர், வருசநாட்டை சேர்ந்த மக்கள்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலும் தொடர்ந்த அவர், ``வறட்சி நிவாரண நிதிக்கு மத்திய அரசை எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களுக்கு முறைப்படி அறிக்கை அனுப்பப்படும். ஆனால், மத்திய அரசை எதிர்ப்பார்க்காமல் மாநில அரசே பொறுப்பேற்று வறட்சி நிவாரணம் ஒதுக்கும். அதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வனத்துறை பொறுத்தவரையில், வனத்துறை மேம்படுத்தவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் உரிய கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது`` என்றார்.

விவசாயிகள்,அமைச்சர்கள்

       இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் எந்தெந்த விவசாயிகள், யார் யாரை சந்திக்க வேன்டும் என்பது பற்றிய பட்டியலை மாவட்ட ஆட்சியர் முன்னரே தயாரித்து விட்டார். அவர் தயாரித்த பட்டியலில் இருந்த விவசாயிகளை மட்டும்தான் அமைச்சர்களும் சந்தித்தனர். டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள் தவிர யாருமே நிலத்தில் இல்லை. எல்லா இடங்களுக்கும் ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், "ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம், இந்த இடங்களை பார்த்த பின்னர் மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொண்டேன்" என்றார். ஏதோ முழுமையாக ஆய்வு செய்ததை போல் காட்டிக்கொண்டு, ஒவ்வொறு இடத்திலும் நின்று வளைத்து வளைத்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டு மீடியா வெளிச்சம் தன் மீது பட காரில் பறந்து சென்றார். மற்ற அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கென்ன என்றவாறே நடையை கட்டினர். 

இதுதான் அரசு நடத்தும் ஆய்வுகளின் நிலை. அமைச்சர் சொன்ன ஒரு சோற்றுப்பதம் உவமை இதற்கும் பொருந்தும்!

- உ.சுதர்சன் காந்தி (மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: வீ.சக்தி அருணகிரி.

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!