வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (09/01/2017)

கடைசி தொடர்பு:13:44 (09/01/2017)

'பயிரைப் பார்த்து உயிரை விட்டுடுவேனோன்னு பயம்...' கவலைக் கதை சொல்லும் விவசாயிகளின் பிள்ளைகள்


பொய்த்து போன மழை, கடுமையான வறட்சியின் காரணமாக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் மரணம்  தமிழகத்தை  அதிர வைத்துள்ளதோடு, விவசாயிகளின் எதிர்காலத்தில்  அச்சத்தை நிரப்பியிருக்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள்  குலைநடுங்கி கிடக்கின்றன. இறப்புகள் நடந்துகொண்டே இருக்கின்றன. நூற்றுக்கணக்கான விவசாய குடும்பங்கள் தெருவுக்கு வந்துகொண்டுதான்  இருக்கின்றன. 'வறட்சியால்  விவசாயிகள் சாகவில்லை நோய்த்தாக்குதல்களாலும் வயது முதிர்வாலும் இறக்கிறார்கள்' என அமைச்சர்கள் மிக சாதாரணமாய் பதிலளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகள் வெந்து மடிவது ஒரு புறம் என்றால், மறுபுறம் விவசாயத்தை விட்டு என்ன செய்வது என தெரியாமல் வெளிநாட்டில் வெந்து மடியும் விவசாயிகளின் பிள்ளைகளின் நிலையும் கொடுமையாகவே உள்ளது.  ஒருகாலத்தில் கிராமத்தில் தனக்கென இருக்கும் காணி நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு ராஜாவைப்போல வாழ்ந்த எத்தனையோ பேர் இன்றைக்கு மலேஷியாவிலும், சிங்கப்பூரிலும் வெந்து மடிகிறார்கள். பெற்றோரை பிரிந்து, தான் ஊர், உறவுகள் அனைத்தையும் பிரிந்து அவர்களை அந்த நரகத்துக்குள் தள்ளியது வறட்சியும், வறுமையும்தான். அப்படியானவர்கள்தான் செல்வமும்.. பாலாவும்.

இருவருமே தஞ்சாவூர் மாவட்டம் ஆழியவாக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருபத்தாறு வயது இளைஞர்கள்.  இங்கு நெல் சாகுபடி...மீன்வளர்ப்பு.. பால் வியாபாரம் என்று இளம்வயதிலேயே விவசாயத்தில் கலக்கிய செல்வம் திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு துபாய்க்கு போய்விட்டார். அங்கு டிரைவர் வேலை. சரியான சாப்பாடு  தூக்கம் எதுவுமே இல்லாத ஒரு துயர வாழ்க்கை இப்போது செல்வத்துக்கு. அப்பா செய்த விவசாயத்தை தொடராமல் தன் ஒரு ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டுவிட்டு சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார் பாலா. ஏன்.?

“எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க அப்பா அம்மா விவசாயம்தான் செஞ்சுகிட்டு இருக்காங்க. எந்த முன்னேற்றமும் இல்ல. ரெண்டு வெள்ளாம தொடர்ந்து போச்சின்னா தலையெடுக்க மூணு வருஷம் பிடிக்கும். நாங்க ரெண்டு பசங்க என்னையும் எங்க அண்ணனையும் படிக்க வைக்க கூட எங்க அப்பா அம்மா பார்த்த விவசாயம் கை கொடுக்கல. கடன் வாங்கித்தான் ரெண்டுபேரையும் படிக்க வச்சாங்க. அவுங்கள  ரொம்ப கஷ்டப்படுத்தகூடாதுனு படிக்கிற காலத்துலயே எங்க அப்பா அம்மாவுக்கு  உதவிகளை செய்வேன். கொஞ்சம் கொஞ்சமா ஆர்வம் அதிகமாகி தனி ஆளா விவசாயம் பாக்கும் அளவுக்கு வந்துட்டேன். நாலு ஏக்கர் விவசாயம் நான் தனி ஆளா பாத்தேன். தொடர்ச்சியா தண்ணி இல்லாததால ரொம்ப லாஸ் ஆகிடுச்சி. ஏகப்பட்ட கடன், விவசாயத்துல பெரிய ஆளா வரணும்னு நினைச்ச என் கனவு நொறுங்கிடுச்சி. என்ன பன்றதுனே தெரியல.

'இங்க இருந்து எங்களோட இந்த வயல்ல காஞ்சியன்னா ஒரு காலமும் முன்னேற முடியாது. கடன்காரனுக்கு பதில் சொல்லியே உன் காலம் போயிடும் ஒழுங்கா ஃபாரின் போய் பொழச்சிக்கோ'னு எங்க அப்பா சொன்னார். எனக்கும் வேற வழி இல்லனு தோணுச்சி. கடனவுடன வாங்கி இப்ப துபாய் வந்து ரெண்டு வருஷம் ஆச்சி. என் வயசுக்கு மீறிய கொடுமைகளை  இங்க அனுபவிச்சிட்டேன். ஆனால், இங்க பணம் கிடைக்குதே!  என்ன பண்றது.? விவசாயம் செய்ய ஆசையாத்தான் இருக்கு. அங்க வந்தா நானும் ஒரு நாளைக்கு  பயிரைப் பார்த்து உயிரை விட்டுடுவேனோன்னு  பயமாவும் இருக்கு. எத்தன பேர் அங்க இருக்க விவசாயத்தை விட்டுட்டு இங்க வந்து கஷ்டப்படுறோம் தெரியுமா? அங்க 100 பேருக்கு வேலை கொடுத்த விவசாயோட  பிள்ளைகளெல்லாம் இங்க வந்து கொத்தடிமை மாதிரி வேலை செய்யுறாங்க. ஏன்னா.? இப்ப நம்ம ஊர்ல வெவசாயத்துக்கு உத்ரவாதம் இல்ல. காவிரியை வச்சி அரசியல் செய்யத்தான் நம்ம ஊரு ஆட்சியாளர்களுக்கு தெரியும்..’’ செல்வத்தின் குரலில் ஏக்கமும் பயமும் கலந்து ஒலிக்கிறது.

பாலாவோ, “ எனக்கு ரெண்டு அக்கா. ஒரு அக்காவுக்கு கல்யாணமாகியும் ஒரு அக்காவுக்கு கல்யாணமாகாமலும் இருந்துச்சி. அப்பா  உடம்புக்கு முடியாம சீரியஸா இருந்தார். ஆம்பளபுள்ள நான்தானே குடும்பத்தை தாங்கணும். எங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர்ல விவசாயம் பண்றேன்னு எங்க அம்மாகிட்ட சொன்னேன். போர்வெல் வச்சிருக்கவனுங்களே இங்க தாளம்போடுறானுங்க... மழை தண்ணிய நம்பி வெள்ளாமைவிட்டு நீ பொழச்சிருவியா..  இத்தன காலம் விவசாயம் பண்ணி உங்க அப்பா என்னத்த சேர்த்து வச்சிருக்கார்.?னு  என் அம்மா கேட்ட கேள்வி எனக்கு நியாயமா பட்டுச்சி. சொந்த நிலம் இருக்குறது, வீட்ல வயசானவங்க நமக்கு துணையா இருப்பது மாதிரி ஒரு நம்பிக்கைதான். ஆனா, அந்த நம்பிக்கை நமக்கு சோறு போடாதுனு புரிஞ்சிடுச்சி. ஊர்லயும்  ஒண்ணும் பெருசா வேலை செட் ஆகல. நாலு லட்ச ரூபா செலவு செஞ்சி சிங்கப்பூர் வந்தேன்.

ரெண்டு வருஷத்துல அக்காவை கட்டி கொடுத்துட்டேன். கடனையெல்லாம் அடச்சிட்டேன். கஷ்டப்பட்டாலும் கைநிறைய சம்பளம் வாங்குறேன். எவ்வளவு சம்பாரிச்சு என்ன பிரயோஜனம் எங்க அப்பா உயிரோட இருக்கும்போது கடைசியா அவரோட முகத்தை என்னால பார்க்க  முடியல. ஒரு நாள் வீட்ல இருந்து ஃபோன் வந்துச்சி. உங்க அப்பா செத்துட்டார்னு சொன்னாங்க. கடல்தாண்டி இருக்கும் எனக்கு எப்டி இருக்கும் சொல்லுங்க.? வந்து சேருறதுக்குள்ள நான் பட்ட அவஸ்தையை விவரிக்க முடியாது. விவசாயம் செஞ்சி என்னை வளர்த்த அப்பாவை கூட இருந்து கவனிச்சிக்க முடியாததுக்கு காரணம் என்னை கைவிட்ட விவசாயம்தான்..’’ கலங்கி வழிகிறது பாலாவின் குரல்.

“விவசாயிகள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். இந்த வருடம் பொய்த்தாலும் அடுத்த வருடம் விளையும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.” என்று அமைச்சர் சம்பத் பேசியது அப்பழுக்கற்ற உண்மை. ஆனால், எத்தனை ஆண்டுகாலம் அந்த நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு அவர்களால் வாழ்க்கையை நகர்த்த முடியும்.? எந்த விவசாயியும் இங்கு உடனடியாக செத்துமடியவில்லை. வயலுக்கு மருந்து தெளிப்பதற்காக பொண்டாட்டி தாலியை அடகு வைக்க ஆரம்பிப்பதிலிருந்து வறுமையும் அவமானமுமாக  அனுஅனுவாக  சாகத்தொடங்கிறான். இதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று நெஞ்சடைத்து வழியிலிலேயே சரிந்துவிழும் விவசாயியின் உடல்  வறட்சியின் எச்சம் வறுமையின் உச்சம்.!

- எம்.புண்ணியமூர்த்தி


டிரெண்டிங் @ விகடன்