ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநரின் நம்பிக்கை! - நிர்வாகிகள் கூட்டத்தில் உறைந்த சசிகலா

 

 

 

பிரதமருக்குத் தொடர் கடிதம், அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திப்பு என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகத்தோடு வலம் வரத் தொடங்கிவிட்டார். 'குடியரசு தினத்தில் ஓ.பி.எஸ் கொடியேற்றுவார் என ஆளுநர் அலுவலகம் கொடுத்த உத்தரவும் ஜெயலலிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட மனுவை பணியாளர் நலத்துறைக்கு ஒப்படைத்ததையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். 

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலா, 'ஜனவரி 2-ம் தேதி முதல்வராக பதவியேற்பார்' என நிர்வாகிகள் பேசி வந்தனர். அதன்பிறகு, 'ஜனவரி 12-ம் தேதி முதல்வர் ஆவார்' என்றனர். அதையொட்டி, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள், 'முதல்வர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும்' என்பதை வற்புறுத்தியபடியே இருந்தனர். ஒருகட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, நீண்ட அறிக்கையே வெளியிட்டார்.

இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த எதிர்வினையும் கிளம்பவில்லை. வழக்கம்போல, தலைமைச் செயலகப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார். அ.தி.மு.க நிர்வாகிகளும் சசிகலாவை முன்னிறுத்துவதை மறந்துவிட்டனர். "பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த சில நாட்களில் முதல்வர் பதவியில் சசிகலா அமர்ந்துவிட வேண்டும் என்றுதான் மன்னார்குடி உறவுகள் திட்டம் வகுத்தனர். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்குள், முதல்வராகிவிட வேண்டும் என பணிகளை துரிதப்படுத்தினர். ஆனால், முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மௌனமும் ஆளுநர் மாளிகையின் நெருக்குதல்களும் முடிவைத் தள்ளிப் போட வைத்துவிட்டன. பொதுவாக , குடியரசு தின விழாவில் ஆளுநர்தான் கொடியேற்ற வேண்டும். மகாராஷ்ட்டிரா மாநில ஆளுநராகவும் வித்யாசாகர் ராவ் இருக்கிறார். 'அங்கு கொடியேற்றச் செல்வதால், தமிழகத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொடியேற்றுவார்' என கடிதம் எழுதியுள்ளது ஆளுநர் அலுவலகம்.' முதல்வர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ் விலக மாட்டார்' என்பதை ஆளுநர் அலுவலக கடிதமே சுட்டிக் காட்டிவிட்டது" என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

"அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்களை நேற்று சந்தித்தார் சசிகலா. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் உள்பட சீனியர்கள் பலரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர். 'விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது' என சசிகலா பேசிக் கொண்டிருக்கும்போது, அவர் அருகில் வந்தார் டாக்டர் வெங்கடேஷ். ' ஜெயலலிதா மரணம் தொடர்பாக பணியாளர் நலத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியிருந்த' தகவலை சசிகலாவிடம் தெரிவித்தார். ஒருகணம், அதிர்ச்சியில் உறைந்தவர், அருகில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவர், கார்டனுக்குச் சென்றுவிட்டார். 'சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்' என டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இந்தநேரத்தில், சசிகலாவுக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்களை மத்திய அரசு பெற்றுக் கொள்வதையும் அதிர்ச்சியோடு கவனிக்கிறது கார்டன். 

‘உங்களுக்கு எதிராக வரும் சிறு துரும்பையும் விட்டுவிட மாட்டோம்' என்பதை நேரடியாக தெரிவிக்கிறது மத்திய அரசு. எனவேதான், 'நிலைமை சீராகும் வரையில் அமைதியாக இருப்போம்' என மன்னார்குடி உறவுகள் முடிவெடுத்தனர். கூடவே, தீபாவுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் எரிச்சலில் இருக்கிறார் சசிகலா. தீபாவை சந்திக்க வரும் பிரமுகர்களை உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 'தீபாவை இயக்குவது யார்?' என்ற கேள்விதான் வலம் வருகிறது. முதலமைச்சர் உத்தரவின்பேரில் தீபா வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க இருக்கிறார் தீபா. இதை மன்னார்குடி உறவுகள் எதிர்பார்க்கவில்லை. எந்தவகையில் அவரைத் தடுத்து நிறுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "ஜனவரிக்குள் முதல்வர் ஆவது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மன்னார்குடி உறவுகள் வந்துவிட்டனர். டி.டி.வி தினகரனை அமலாக்கத்துறையின் வழக்கு நெருக்கியதையும் தி.மு.க தலைவருக்கு ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனித்து வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். ஒருவேளை முதல்வராக சசிகலாவை முன்னிறுத்தினாலும், 'ஒரு முதல்வரை அறிவித்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் இன்னொருவரை முன்னிறுத்துவது எப்படி சாத்தியம்? பன்னீர்செல்வம் பலத்தை நிரூபிக்கவில்லையென்றால், அடுத்த முதல்வரைப் பார்த்துக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கும் முடிவில் ஆளுநர் அலுவலகம் இருக்கிறது. அரசின் பிடி முழுக்க ஆளுநர் கையில் இருப்பதை கார்டனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மத்திய அரசை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன. அரசியல்ரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, நிதானமாகவே செயல்பட்டு வருகிறார் சசிகலா" என்றார். 

முதல்வர் கனவு தள்ளிப் போகும் கவலை ஒருபுறம் வாட்டினாலும் தீபாவின் வருகை; சசிகலா புஷ்பாவின் மனு; ஆளுநர் அலுவலக நெருக்குதல்; சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு என ஆக்டோபஸ் பிடியில் சிக்கியிருக்கிறார் சசிகலா. இன்று நடந்த இந்தியா டுடே மாநாட்டிலும் கண்ணீரோடு காட்சியளித்தார் சசிகலா. நெருக்குதல்கள் கொடுக்கும் வலிதான் காரணமா என்ற கேள்விகளும் அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது.  

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!