இந்தியா முழுக்க 12,602 விவசாயிகள் தற்கொலை..! அதிர்ச்சி ரிப்போர்ட் #savefarmers | 12.602 Farmers suicide - Shocking Report!

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (09/01/2017)

கடைசி தொடர்பு:15:10 (09/01/2017)

இந்தியா முழுக்க 12,602 விவசாயிகள் தற்கொலை..! அதிர்ச்சி ரிப்போர்ட் #savefarmers

நாடு முழுவதும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விவரங்களை ஆண்டு தோறும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் (என்சிஆர்பி) வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களைச் சமீபத்தில் அந்த ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் 2015-ல் 12,602 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 

2015ல் தற்கொலை! 

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை கடந்த 2014ல் 12,360 ஆக இருந்தது. கடும் வறட்சி காரணமாக தற்கொலை எண்ணிக்கை 2015ல் 12,602 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015ல் விவசாயத் தொழிலாளர்களை விட, விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்துள்ளனர். 2015ல் 8,007 விவசாயிகளும், 4,595 விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். கடந்த 1995-ம் ஆண்டு முதல் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் தற்கொலை பற்றி புள்ளி விவரம்

2015ல் விவசாயிகளின் தற்கொலை 42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதற்கான காரணத்தையும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் பட்டியலிட்டுள்ளது. தற்கொலை செய்ய முதன்மையான காரணம் கடன் சுமையே. தீராத கடன் சுமையால் 3,097 பேர் தற்கொலை; 1,843 விவசாயத் தொழிலாளர்கள் குடும்பப் பிரச்னையால் தற்கொலை; விளைச்சலில்லாத காரணத்தினால் 1,562 பேர் தற்கொலை; பல்வேறு நோய்கள் காரணமாக 842 பேர் தற்கொலை; போதை மருந்துகள் மற்றும் மதுவால் 330 பேர் தற்கொலை; திவால் ஆனதால் 3,097 பேர் தற்கொலை என விவசாயிகள்  தற்கொலைப் பட்டியல் நீள்கிறது. 

1,018 பெண் விவசாயிகள் தற்கொலை! 

2009ஐ ஒப்பிடும்போது 2013ல் நல்ல பருவமழையால் விவசாயிகள் தற்கொலை 32% வரை குறைந்து இருந்தது. ஆனால், அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் தற்கொலை துயரம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 2009-ம் ஆண்டில் வறட்சி தாண்டவம் ஆடியதால் 17,368 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். இந்தத் தற்கொலை சம்பவம் 2013ல் 11,772 ஆகக் குறைந்து இருந்தது. ஆனால், 2014ல் 5% உயர்ந்து 12,360 ஆகவும், 2015ல் 12,602 ஆகவும் அதிகரித்துள்ளது. 2015ல் 12,602 விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். இதில் 92% அதாவது 11,584 ஆண் விவசாயிகள், 1,018 பெண் விவசாயிகள் அடக்கம்.

தமிழகத்தில் தற்கொலை..? 

இதில் மாநிலம் வாரியாக எத்தனை விவசாயிகள் தற்கொலை மேற்கொண்டுள்ளனர் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கணக்கீட்டின் படி, 2015ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,291 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது மற்ற மாநிலங்களை விட அதிக எண்ணிக்கையாகும். 2014ல் இந்த எண்ணிக்கை 4,004 ஆக இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் 1,569 விவசாயிகளும், தெலங்கானாவில் 1,400 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் 2014ல் 768 விவசாயிகள் தற்கொலை செய்து இருந்தனர். ஆனால், 2015ல் அந்த எண்ணிக்கை 100 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்து 1,569 ஆக அதிகரித்துள்ளது. 

விவசாயிகள் தற்கொலை

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2014ல் 895, 2015ல் 606 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், இப்போது ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் மரணம்; கடந்த சில நாட்களில் 30 விவசாயிகள் தற்கொலை போன்ற சம்பவங்களால், இந்த ஆண்டின் தொடக்கத்தில்லேயே நிகழ்வது அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

1876-78-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியான சென்னை மாகாணத்தில் கடும் பஞ்சம் பீடித்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும், நோயாலும் மரணமடைந்தனர். இதுபோன்ற நிலைமை நமக்கு வராமல் கூட இருக்கலாம். ஆனால், நமது எதிர்கால சந்ததியினருக்கு வர வாய்ப்புள்ளது. ஏனெனில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பயன்படுத்தும் தண்ணீர் தேவையை விட இரண்டு மடங்கு தண்ணீரை இந்தியா பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. தற்போது ஆறு, ஏரி, கிணறுகளில் நிலத்தடி நீர் 60 முதல் 65 சதவிகிதம் வரை வறண்டு விட்டது. இந்நிலை நீடித்தால் 2030-ம் ஆண்டு இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் என்று சொல்லப்படுகிறது. 

இதுமட்டும் இல்லாமல் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் 40 சதவிகிம் மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பது கடினமாக இருக்கும்; வருகிற 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் சிக்கித் தவிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இன்னும் 35 ஆண்டுகளில் ஆசியா கண்டத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் 100 கோடி மக்கள் அவதிப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாத வரையில், தினமும் 'விவசாயிகள் மரணம்' என்ற செய்தியை படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இனியாவது" விவசாயத்தை வளர்ப்போம், விவசாயிகளைப் பாதுகாப்போம்" #savefarmers

- சோ.கார்த்திகேயன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்