வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (10/01/2017)

கடைசி தொடர்பு:14:13 (10/01/2017)

'சசிகலாவை ஏன் விமர்சிக்க வேண்டும்?'- கார்டனுக்கு எதிராக வியூகம் வகுத்த தீபா

ன்னும் 7 நாட்களில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க இருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. 'ஜனநாயகத்தில் மக்கள் ஆதரவைப் பெறாதவர்கள் நிலைத்து நின்றதில்லை. சசிகலாவை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை' எனப் பேசி வருகிறார் தீபா. 

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றார் சசிகலா. மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு, பொதுவிழாக்களில் பங்கேற்பு என முழுநேர அரசியல்வாதியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தலைமைக் கழகத்துக்கு அவர் வரும்போதெல்லாம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மக்களைக் கூட்டி வருகின்றனர் மாவட்ட நிர்வாகிகள். அதேநேரம், அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத தீபாவின் தி.நகர் வீட்டின் முன்பு மக்கள் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. ஜெயலலிதா பாணியில் வீட்டின் மாடியில் நின்று தொண்டர்களை நோக்கி இரட்டை விரல்களைக் காட்டுகிறார். தினம்தோறும் தொண்டர்களை சந்திப்பது, அரசியல் பிரமுகர்களுடன் ஆலோசிப்பது என அவரும் அரசியல்வாதியாக மாறுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் தீபா பெயரில் பிளக்ஸ் போர்டுகள் கிளம்பிவிட்டன. பல மாவட்டங்களில் தீபா பேரவை என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை எதுவும் தீபாவின் விருப்பத்துடன் நடக்கவில்லை. இதனை அவர் எதிர்க்கவும் இல்லை. "எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி அரசியல் பிரவேசத்தை அறிவிக்க இருக்கிறார். தனக்கு ஆதரவாக வருகின்றவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார். கடந்த இரண்டு நாட்களாக அ.தி.மு.க பிரமுகர்களிடம் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார். எந்த இடத்திலும் மன்னார்குடி உறவுகளுக்கு எதிராக ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை" என விவரித்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், 

"சசிகலாவின் வருகைக்காக அமைச்சர்கள் காத்துக் கிடப்பதும் அவர் வந்த பிறகு காலில் விழுவதும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தீபாவின் அரசியல் பார்வை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. நேற்று எங்களிடம் பேசியவர், 'யாரையும் வெறுத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அம்மா பக்கம் பற்றுதலோடு இருந்தவர்கள், எனக்கு ஆதரவாக வந்திருக்கிறீர்கள். உங்கள் அன்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களில் பலர் சசிகலாவை எதிர்த்துப் பேசுவதைக் கேட்கிறேன். அப்படி யாரையும் விமர்சிக்க வேண்டாம். மக்கள் ஆதரவைப் பெறாதவர்கள் யாரும் அரசியலில் நீடிக்க முடியாது. அவருக்கு (சசிகலா) மக்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. எதிர்மறை அரசியலையும் வெறுப்பு அரசியலையும் முன்னெடுக்க வேண்டாம். அரசியல்ரீதியாகவே அனைவரையும் எதிர்கொள்வோம். எந்த நோக்கத்துக்காக புரட்சித் தலைவர் கட்சியைத் தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அம்மா வழியில் கழகத்தை சிறப்பாக வழிநடத்த வேண்டும். நெகட்டிவ் பாலிடிக்ஸ் நமக்கு தேவையில்லை. என்னுடைய அரசியல் பயணம் இதையொட்டியே அமையும்' என விரிவாகப் பேசினார். 'சசிகலாவை வீழ்த்துவதற்கு நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. மக்களே பார்த்துக் கொள்வார்கள்' என்ற ரீதியில் விளக்கினார். நாங்களும் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொண்டோம்" என்றார் விரிவாக. 

"ஜெயலலிதா மீது பற்று வைத்திருந்த பல கிராமங்களில், தீபாவின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.  'அத்தையின் மருமகளே வருக... அம்மாவின் ஆட்சியைத் தருக' என்ற வாசகங்கள் பிளக்ஸ் போர்டுகளில் பளிச்சிடுகின்றன. பரமக்குடியில் உள்ள சில கிராமங்கள் ஒட்டுமொத்தமாக தீபா பக்கம் வந்துவிட்டன. மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைத்துச் செல்வது குறித்து விவாதித்து வருகிறார். 'தொண்டர்களும் மக்களும்தான் கட்சி. இவர்கள் நம் பக்கம் இருந்தால், முழுமையான பலம் கிடைக்கும். இளைஞர்களும் நம்மை ஆதரிப்பார்கள். கட்சியின் சின்னத்தை வைத்து யாரும் ஓட்டளிப்பதில்லை. தலைவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். 1969-ம் ஆண்டு காங்கிரஸ் பிளவுபட்டபோது, இந்திரா காந்தி பக்கம் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் காமராஜரைத்தான் மக்கள் ஆதரித்தார்கள். எனவே, இங்கு தலைவர்கள்தான் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல, மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக மாற வேண்டும்' என தேர்ந்த அரசியல்வாதியைப் போல் பேசுகிறார் தீபா. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்காக காத்திருக்கிறோம்" என்கிறார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர். 

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதியை வணங்கிவிட்டு, அரசியல் அதிரடிகளைத் தொடங்க இருக்கிறார் தீபா. தி.நகரில் குவியும் அரசியல் பிரமுகர்களையும் கட்சிக்காரர்களையும் குறிப்பெடுத்து வருகின்றனர் உளவுப் பிரிவு போலீஸார். எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தொண்டர்கள் கூட்டம் குவிந்து கொண்டே இருக்கிறது. 

- ஆ.விஜயானந்த்


டிரெண்டிங் @ விகடன்