வறண்டது ஆறு; இருண்டது வாழ்க்கை, எங்களுக்குக் கறுப்புப் பொங்கல்! கலங்கும் மக்கள்! | 'Our life is full of darkness;We are facing Black Pongal day this year' says Cauvery delta Farmers

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (10/01/2017)

கடைசி தொடர்பு:15:32 (11/01/2017)

வறண்டது ஆறு; இருண்டது வாழ்க்கை, எங்களுக்குக் கறுப்புப் பொங்கல்! கலங்கும் மக்கள்!

வறட்சி பொங்கல்

பொங்கல் பண்டிகை என்றாலே மகிழ்ச்சி, கொண்டாட்டம் என்ற நிலை மாறி, சமீப காலமாக எந்த பண்டிகைகள் ஆனாலும், கொண்டாட்டங்கள் மெல்ல மெல்ல அருகி வருகின்றன. சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும் கிராமப்புற மக்கள், காலப்போக்கில் பணிச்சூழல் உள்ள இடத்திலேயே தங்கி விடுகின்றனர்.

பருவமழை பொய்த்தும், அண்டை மாநிலங்களில் இருந்து வர வேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் விவசாயம் செழிக்காத சூழ்நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை உற்சாகமின்றி கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் சொந்த ஊரில் கொண்டாடி மகிழ்வதே தனியான அனுபவம்தான்.

தற்போதைய சூழ்நிலையில், கிராமப்புறங்களிலும் பொங்கல் பண்டிகை களை இழந்தே காணப்படுகிறது. 'சோழநாடு சோறுடைத்து' என்ற சங்க காலப் பாடல் வரிகளை பொய்யாக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுக்கு 4 போகம் நெல் விளைவித்த காலம் மலையேறிப் போய், ஒன்று அல்லது இரண்டு முறை பயிர் செய்வதே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கி பயிர் செய்த நெற்பயிர், தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் கருகிப் போவதைக் காண முடியாமல், தாங்களும் உயிரை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகள் பற்றிய செய்திகள், அன்றாடம் வந்து கொண்டிருப்பது வேதனையான ஒன்று. 

வறட்சிப் பொங்கல்- விவசாயிபொங்கல் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில், கிராமப்புறங்களில் இந்தப் பண்டிகைக்கான வரவேற்பு எப்படி உள்ளது? என்பது பற்றி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது, நெல் விளைந்து, மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடுவோம். அடுத்த போகத்திற்கு பயிர் செய்வதற்கான பணிகள் நடைபெறும். அல்லது சில நேரங்களில் நாற்று நடப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால், இந்த ஆண்டு, போதிய மழை இல்லாததாலும், காவிரியில் தேவைக்கேற்ப தண்ணீர் வராததாலும் நிலம் வறண்டுள்ளது. இதனால், இந்த முறை எங்களுக்குக் கறுப்புப் பொங்கல் என்றே கூற வேண்டும். எங்களின் வாழ்க்கையே இருண்டு விட்டது. வறட்சி நிவாரணம் எல்லாம், எங்கள் இழப்பிற்கு ஈடுசெய்ய முடியாது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

"பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் நினைப்பதுண்டு. ஆனால், வேலைப்பளு, கடைசி நேரத்தில் பயணத்திற்கு திட்டமிட முடியாத நிலை போன்ற காரணங்களால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் போய் விடும்" என்று பெரும்பாலானோர் புலம்பும் நிலையில், விவசாயிகளின் நிலையை அறிந்து கொள்ளவும், அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காவது சொந்த ஊருக்குச் சென்று, கிராமப்புற விவசாயிகளுடன் பண்டிகையைக் கொண்டாடி விட்டு வரலாம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்னரே திட்டமிட்டு, பேருந்திலோ அல்லது ரயில் மூலமோ, குறைந்தது பொங்கல் தினத்திற்கு ஒருநாள் முன்பாகவாவது, சொந்த ஊருக்குச் சென்று, நண்பர்கள், உறவினர்களுடன் தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையைக் கொண்டாட வேண்டும். 
சொந்த ஊரில், கிராமிய மண் மணம் கமழ, "பொங்கலோ பொங்கல்" என மகிழ்ச்சி ஆரவாரமிட்டுக் கொண்டாடுவோம்!! 

-சி.வெங்கட சேது
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்