வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (17/01/2017)

கடைசி தொடர்பு:05:57 (18/01/2017)

உணர்வுகளை விதைத்த கலைஞன் கே.ஏ.குணசேகரன் #KAGunasekaran

கே.ஏ.குணசேகரன்

"மனுசங்கடா நாங்க மனுசங்கடா...
உன்னப் போல, அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா ..."

எனத் தொடங்கும் இன்குலாப்-ன் உணர்ச்சிமிக்க கவிதையை, தன் குரலால் உலககெங்கும் சேர்த்த, கே.ஏ.குணசேகரனின் நினைவு தினம் இன்று. 

சிவகங்கை மாவட்டம் இளையான் குடியில் 1955 ஆம் ஆண்டு எளிய குடும்பப் பிண்ணனியில் பிறந்தவர். சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர்.  நாட்டுப்புற நடனப் பாடல்களில் முனைவர் பட்டம் பெற்றவர். 1978 ஆம் ஆண்டு காந்தி கிராமம் நாடகப் பட்டறையில் பேராசிரியர் சே.ராமானுஜத்திடம் நாடகப் பயிற்சிப் பெற்றவர். தமிழகத்தில் நாட்டுப் புறக் கலையை ஆவணமாக்குவதில் இவரது பணி மகத்தானது. 

கே.ஏ.குணசேகரின் கலை ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது. அதுபற்றி அவரின் தங்கை கே.ஏ.ஜோதிராணி, "ராமநாதபுரம், சாலைக்கிராமத்து அழகர்சாமி வாத்தியார் எங்களுக்கு உறவுமுறை. அவரே அண்ணனுக்கு பறை அடிக்க கற்றுக்கொடுத்தார். பறைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. கிராம கலைஞர்களுக்கு பறைதான் அமுதசுரபி என அண்ணன் சொல்வார்" என்கிறார். 

கே.ஏ.குணசேகரன் பள்ளியில் படிக்கும்போதே, வசீகரமாக பாடக் கூடியவராக இருந்தார். அதுவும் பறையை அடித்துக்கொண்டே இவர் பாடும் பாடலைக் கேட்பதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. சாதியின் பெயரால் பல இழிவுகளை அனுபவித்ததை எல்லாம் கலையாக மாற்றினார். அதற்கு எதிராக போராடுவதற்கான ஆயுதமாக தன் குரலையும் இசைக்கும் ஆற்றலையும் பயன்படுத்தினார். பாரதிதாசனின் கவிதைகளுக்கும் மெட்டமைத்து பாடியிருக்கிறார். 'தன்னனானே' எனும் நாடகக் குழுவை நிறுவி, அதன் வழியே பல்வேறு கலைஞர்களைக் கொண்டு சமூக பிரச்னைகளை காத்திரமாக மக்களிடம் பேசு பொருளாக்கினார். 'பலி ஆடுகள்' எனும் நாடகத்தையும் எழுதினார். இடதுசாரி இயக்கங்களின் கலை மேடைகளில் இடம் பெற்றவர். அவரின் குரல் கேட்காத இடங்களே இல்லை எனும் அளவுக்கு தமிழகம் முழுவதும் பல மேடைகளில் பாடியவர். தன் திறமையை வெளிப்படுத்தியதோடு, சக திறமையானவர்களை வெளிச்சமிட்டு காட்டவும் தவறவில்லை. நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயியை தொலைக்காட்சியில் பாட வைத்தது கே.ஏ.குணசேகரனே.

தன்னுடைய வாழ்வனுபங்களை 'வடு' எனும் நூலாக்கினார். அது வெளிவந்த காலத்தில் பரவலாக பேசப்பட்டது. தமிழில் முதல் தலித் சுயசரிதை நூலாகவும் இது குறிப்பிடப் படுகிறது. பல்வேறு பதவிகளை வகித்த கே.ஏ.குணசேகரன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். அப்போது அவர் செவ்வியல் நூல்களுக்குப் புதிய விளக்கவுரைகளையும் எழுதினார். தமிழகப் பழங்குடி மக்கள், இசை நாடக மரபு, நாட்டுப்புற இசைக் கலை, பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள் தலித் அரங்கியல் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 

கே.ஏ.குணசேகரன் எழுதிய 'நாட்டுப்புற மண்ணும் மக்களும்' எனும் நூலுக்காக தமிழக அரசின் நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்து. மேலும் கலைமாமணி, கனடா தமிழ் இலக்கியச் சங்க விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். 

திரைப்படத் துறையிலும் இவர் பங்களிப்பு செய்துள்ளார். ‘அழகி’ உள்ளிட்ட படங்களில் மிக யதார்த்தமான நடிப்பை வழங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இசையால் இந்த உலகை நிறைத்தவருக்கு என்றென்றும் மரணமில்லை

- வி.எஸ்.சரவணன்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்