திமிறும் தமிழகம்: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்! அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு #LiveUpdate | Protests continue all over TamilNadu for Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 08:36 (18/01/2017)

கடைசி தொடர்பு:16:52 (21/01/2017)

திமிறும் தமிழகம்: அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்! அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு #LiveUpdate

அவசரச் சட்டம் பிறப்பித்தார் ஆளுநர்! அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு

Jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, அவசரச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. அதன்படி, காட்சி படுத்தக்கூடாத விலங்கின பட்டியலில் இருந்து காளை நீக்கப்பட்டது. இதையடுத்து இன்று சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களிலும் நாளை காலை ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இன்று இரவு மதுரை செல்லும் முதல்வரர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பார் என கூறப்படுகிறது.

TN Governor Vidhyasagar Rao

 

சென்னை மெரினாவில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போலீஸ்காரர் ஒருவர் பேசிய நிலையில், தற்போது திருச்சியில் நடந்து வரும் போராட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் பங்கேற்று பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் போலீஸ்காரர் மாயழகு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அருகே 4-வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் பெய்து வரும் மழையிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இந்த போராட்டத்துக்கு பாதுகாப்புக்கு வந்த ஊர்க்காவல் படை வீரர் பெல்சன், மைக்கை பிடித்தார். அப்போது, அவர் பேசுகையில், நானும் கிராமத்தைச் சேர்ந்தவன்தான். ஜல்லிக்கட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜல்லிக்கட்டு நடக்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு காவல்துறை எதிரி கிடையாது. அதனால் போலீசாரை மதித்து நடந்து கொள்ளுங்கள். காவலர்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். காவலர் உங்கள் நண்பர்கள். இப்போது ஜல்லிக்கட்டுக்காக போராடும் நீங்கள் விவசாயத்துக்காகவும் போராட வேண்டும். மழை பொய்த்துபோனது மரம் வையுங்கள்" என்றார்.

ஊர்க்காவல் படை வீரர் பெல்சனின் பேச்சால் போராட்டக்காரர்கள் உற்சாகம் அடைந்ததோடு, அவரை கட்டி அணைத்து ஆர்ப்பரித்தார்கள்.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டக்களம் தீவிரமடைந்து வரும் நிலையில், திருச்சியில் இன்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக போராட்டம் நடக்கும் இடத்தில் குவிந்து வருகின்றனர்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தஞ்சாவூரில் மழை கொட்டுகிறது.ஆனாலும் தொடர்கிறது ஆர்ப்பாட்டம்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான்

சொன்னபடி ஜல்லிக்கட்டை நடத்தி முடித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கிவிட்டார் சீமான்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க கடந்த 16-ம் தேதி மதுரை வந்தார் சீமான். 'அரசியல்வாதிகள்  எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்' என்று மாணவர்கள் கறாராக அறிவித்ததால், தமுக்கம் அருகே அவுட் போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக 17-ம் தேதி தனியாக போராட்டத்தை தொடர்ந்தார்.

அப்போது, போராட்டம் குறித்து பேசிய சீமான், "வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று சொன்னவர், அதுவரை மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

சொன்னபடி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான். 'அலங்காநல்லூரில் நடத்துவேன்' என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.


இதற்கான ஏற்பாடுகளை மிக ரகசியமாக செய்த அவரது கட்சியினர், மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். தகவல் வெளியாகிவிடும் என்பதால் குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார். சீமானைத் தொடர்ந்து கண்காணித்து வந்த உளவுத்துறையால் கூட  ஜல்லிக்கட்டு நடத்தப்போகும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டுள்ளனர்.

- செ.சல்மான், சே.சின்னத்துரை
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

புதுச்சேரியில் மழைக்குப் பின் மீண்டும் போராட்டம் வலுத்தது.

நேற்று இரவு பெய்த மழையால் புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் நடத்திய இடத்தில் நீர் சூழ்ந்து சேறும் சகதியுமாக ஆனது. ஆனாலும் போராட்டத்தைகைவிடாமல் தொடர்ந்தனர் மாணவ மாணவிகள். இன்று காலை பொக்லைன் இயந்திரங்ககைக் கொண்டு மாணவர்கள் அமருவதற்கு  இடத்தை சரி செய்து வருகின்றனர். அசுர வேகத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. முருகன்

திருச்சியில் தீவிரமடையும் போரட்டம் 

திருச்சி துறையூர் பிரிவு சாலையில் ஜல்லிக்கட்டுக்காக போராடும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள்,  பொதுமக்கள் அணிவகுத்து வந்தும் மேலும் லாரி உரிமையாளர்கள் மனிதச்சங்கிலி அமைத்து ரோட்டில் நின்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

துறையூர் வடக்கு தெரு மக்கள் மாட்டு வண்டியிலும்,வழக்கறிஞர் சங்கம் ஜல்லிக்கட்டு காளையுடன், அப்பர் உழவார அமைப்பினர் செண்டைமேளம் அடித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராடும் மாணவர்களுக்கு ஆதரவு அதிகரிப்பதால் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.சி.ய.ஆனந்தகுமார்

ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பேன்! சென்னை ஏர்போர்ட்டில் முதல்வர் ஓபிஎஸ் மகிழ்ச்சி பேட்டி

O.PanneerSelvam

'ஜல்லிக்கட்டு போட்டியை நீங்கள் தொடங்கி வைப்பீர்களா' என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'உங்கள் விருப்பப்படியே அது நடக்கும்' என்றார் மகிழ்ச்சியுடன்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகலில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினேன். அதன் பின்னர் ஒருநாள் அங்கேயே தங்கியிருந்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்துவதற்குரிய அவசர சட்டத்தினை கொண்டு வரக்கூடிய ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளேன். சட்ட முன்வடிவுகள் தயார் செய்யப்பட்டு மத்திய உள்துறை, சட்டத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஒப்புதல் பெற்று இன்று மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

குடியரசுத் தலைவர் அலுவல் பயணமாக வெளியூர் சென்றிருப்பதால் இன்று இரவுதான் அவர் டெல்லி திரும்புகிறார். நாளை குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நம்முடைய ஆளுநர் மூலமாக உரிய சட்டத்திருத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் வாழுகின்ற அனைத்து தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் என்ற மகிழ்ச்சியான செய்தி வரும். உறுதியாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். மாணவர்களும், இளைஞர்களும் எதிர்பார்த்த அந்த வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக்குதித்து வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ஜல்லிக்கட்டு போட்டியை நீங்கள் தொடங்கி வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், உங்கள் விருப்பப்படியே அது நடக்கும் என்றார் மகிழ்ச்சியுடன்.

அவசர சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால்... என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நம்பிக்கை அடிப்படையில் செய்கிறோம். அதுபோன்ற தடை வராது என்றார் முதல்வர்.

பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், எந்த தடை வந்தாலும் அதை சட்டத்தின் மூலம் தமிழக அரசு நீக்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மதுரை அலங்காநல்லூர்  போராட்ட களத்தில் எல்இடி திரை மூலம் தற்போது பொதுமக்களுக்கு காண்பிக்கப்படும் ஜல்லிகட்டு காளைகளின் பெருமைகள். ராம்குமார்

தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்!

Anil Dave

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மாதவ்தவே தெரிவித்தார்.

டெல்லியில் இன்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோருடன் மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அனில் மாதவ்தவே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேசிய அனில், ’பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழ் பாரம்பர்யத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும். ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் திட்டவட்ட முடிவெடுக்கப்படும். தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்’ என்றார்.

அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்!

தமிழக அரசு கொண்டு வர உள்ள அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் தயாரித்திருந்தது. இதையடுத்து இந்த சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு, இந்த சட்ட வரைவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இந்த சட்ட வரைவை அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து இன்று இரவுக்குள்ளே குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரியில் ரயில் மறியல்.

புதுச்சேரி போராட்ட தளத்தில் குவிந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.

முதல்வர் அறிக்கையை கிழித்து எறிந்த இளைஞர்கள்!

 

ராமநாதபுரம் போராட்டக்களத்தில் முதல்வரின் அறிக்கையை படித்த இளைஞர்கள், அதனை கிழித்து எறிந்ததுடன் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் நிறைவேற்றும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையை மாவட்ட செய்தி  மக்கள் தொடர்பு அலுவலர் ராமநாதபுரத்தில் ஜல்லிகட்டுக்காக போராட்டம் நடத்துபவர்களிடம் கொடுத்து வாசிக்க சொன்னார்.

அந்த அறிக்கையை படித்த இளைஞர்கள், அதனை கிழித்து எறிந்ததுடன் வாடி வாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனால் செய்வது அறியாது விழித்த அதிகாரிகள். "இளைஞர்களே முதல்வரின் அறிக்கை நீங்கள் படிப்பதற்காக கொடுக்கப்பட்டது. கிழிப்பதற்கு அல்ல" என கெஞ்ச, கூடியிருந்த இளைஞர்களோ, எஞ்சியிருந்த அறிக்கைகளையும் கிழித்து கோஷமிட்டனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். இரா.மோகன்

திருச்சியில் ரயில் மறியல்

திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் சோழன் எக்ஸ்பிரஸ், மைசூர்-தூத்துக்குடி ரயில்களை மறித்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டுவரவும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுகவினரின் போராட்டத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி திமுகவினர் ரயிலை மறித்தது பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.சி.ய.ஆனந்தகுமார், படம்: என்.ஜி.மணிகண்டன்

முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

CM. Panneerselvam

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசர சட்டம் தயாராக உள்ளதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இந்தநிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அனுமதியளித்தபின் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டில் 'கானகன்' நாவலுக்காக வழங்கப்பட்ட 'யுவ புரஸ்கார்' விருதை சென்னையில் உள்ள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் இன்று ஒப்படைத்தார்.

'ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு சாதகமான முடிவு எடுக்காவிட்டால், சாகித்ய அகாடமி அளித்த விருதை திருப்பி கொடுத்துவிடுவேன்' என்று எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் நேற்று கூறியிருந்தார்.

ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், சரவணகுமார் கூறியபடி யுவ புரஸ்கார் விருதை இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாகித்ய அகாடமி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

படம்: தி.குமரகுருபரன்

புதுச்சேரியில் முழு அடைப்பு:

 

Pudhucherry strike Jallikattu

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புக்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தனியார் பஸ் நிறுவனங்களும், ஆட்டோ சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருப்பதால் ஆட்டோ, பஸ்கள் இயங்கவில்லை. அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதால் தனியார் பள்ளி கல்லூரிகளும் விடுமுறையை அறிவித்திருக்கின்றன. மேலும், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சல்மான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் கடந்த இரண்டு நாளாக கலந்து கொண்டிருந்தார். தற்போது லாரான்ஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், போராட்டம் நடந்துவரும் மெரினாவில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். படம்:தே.அசோக்குமார்

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் மாணவர்கள் சிலம்பம் சுற்றுதல் மற்றும் தற்காப்பு சண்டை பயிற்சி ஆகியவற்றை நடத்தி சக மாணவர்களை உற்சாகபடுத்தினார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம் நடத்திவரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டனிராஜ்

ஜல்லிக்கட்டு வேண்டும்: காளைகளுக்கு ஆதரவு தந்த செல்லப்பிராணி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வளர்ப்பாளருடன் கலந்து கொண்ட நாய்.

 

 

மெரினாவில் ஹீரோவான காவலர்

 

மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தில் பேசிய காவலர் மதியழகு ஹீரோவாக மாறியுள்ளார். சீருடையுடன் பேசிய மதியழகு, 'காவலனாக இல்லாமல், ஒரு தமிழனாகவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எனக்கு பயமில்லை.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் மகத்துவம் தெரியாமல் சிலர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இது கண்டிப்பாக உடைக்க வேண்டும். வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவநிலையில் உள்ளனர். அவர்களுக்காகவும் இளைஞர்கள் போராட வேண்டும்.

மேலும், தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கு, இளைஞர்கள் போராட வேண்டும். இங்குள்ள அனைத்து காவலர்களுக்குமே இதே போன்ற எண்ணத்தில்தான் உள்ளனர்' என்றார்.

இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை இளைஞர்கள் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே அவர் பேசும் போது, சில காவலர்கள் அவரை தடுக்க முயன்றனர். ஆனால், இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதியழகை தொடர்ந்து பேச வைத்தனர்.

தமிழக அரசு அவரச சட்டம் இயற்ற முடிவு 


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு வரைவு அவரச சட்டம் இயற்ற முடிவு செய்திருப்பதாக முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ' ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, மிருகவதை தடை சட்டத்தில், மாநிலம் சார்பில் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு அவசர சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரைவு சட்டம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர், பிரதமரிடம் ஒப்புதல் பெற்று இந்த சட்டம் பிறப்பிக்கப்படும். மேலும், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும்.

O.Panneerselvam

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்' என்றார்.

 

 

ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், இன்று மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சில ஆட்டோ தொழிற்சங்கத்தினரும் இன்று ஆட்டோக்கள் இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பெரும்பாலான கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில தனியார் பள்ளிகளுக்கும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக, தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. இதில் அனைத்து நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு என்ற ஒருவார்த்தை, தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொழுந்து விட்டு எரியும் தீ போல பரவி விட்டது. இந்தத் தீயை ஜல்லிக்கட்டு நடத்தி மட்டுமே அணைக்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, உடனடியாக தமிழகம் திரும்பும் ஐடியாவில் இருந்தார் தமிழக முதல்வர் ஒ. பன்னீர் செல்வம். பிரதமர் அ.தி.மு.கழக எம்.பி-களிடம் தனியாக பேசும்போது, பிரதமரிடமிருந்து பாஸிட்டிவ்-வான சிக்னல் கிடைத்துள்ளது. அதை தெரிந்துகொண்ட பிறகுதான் சென்னை கிளம்பலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னாராம். இதனால், முதல்வரின் சென்னை ரிட்டர்ன் புரோகிராம் கேன்சல் ஆனது. அ.தி.மு.கழக எம்.பி-களை கிளம்பச் சொல்லிவிட்டு, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.

Tamilnadu goverment is planning to bring ordinance for Jallikattu

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்வருடன் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் கறாராக இருக்கிறது. அதையே சுட்டிக்காட்டி மத்திய அரசும் கைவிரித்துவிட்டது. இந்த நிலையில், தமிழக அரசு தரப்பிலிருந்து ஏதாவது அவசர நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆதரவு போராட்டங்கள் ஓயும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தபடியே, சென்னை தலைமைச் செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதற்கான சில நடவடிக்கைகளை டெல்லியில் இருந்தபடியே செய்துமுடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். 


இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சட்டசபையை கூட்டி அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் சிறப்பு தீர்மானம் கொண்டு வரலமா? என்று யோசித்தோம். இந்த கருத்தை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் மீடியாக்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டதால், அவர் சொல்லி இதை அரசு செய்ததாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்த யோசனையை கைவிட்டோம். அடுத்து, அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாமா? என்று ஆலோசனை நடந்தது. அதுவும் வேண்டாம் என்று பிறகு  கைவிடப்பட்டது.  ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தில் நடத்தலாம் என்று தமிழக அரசு தரப்பில் அவசரச் சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசனை தற்போது நடந்து வருகிறது. அவசர சட்டத்திற்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டாலே போதும். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புவது சம்பிரதாயம். அந்த சம்பிரதாயத்திற்காகத்தான், முதல்வர் டெல்லியில் தங்கியிருக்கிறார். இதெல்லாம் முடிந்து, தமிழகத்திற்கு முதல்வர் வரும்போது, ஜல்லிக்கட்டு எல்லா இடங்களிலும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதற்கான சாதக - பாதங்களை நாங்கள் விவாதித்து வருகிறோம்" என்கிறார்.

Mukul Rohatgi

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறுகையில், 'ஒரு சட்டத்துக்கு தடை இருக்கும்போது, அதற்கு மாற்றாக மாநில அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடியும். ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு சட்டம் கொண்டுவர முடியாது என உச்சநீதிமன்றம் கூற முடியாது. விளையாட்டு மாநில அரசின் கீழும், மிருகவதை மத்திய அரசுக்கு கீழ் வருவதுமே, ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கியக் காரணமாக உள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு தனது கருத்தை இதுவரை கேட்கவில்லை' என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க மத்திய அரசை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை ஒருநாள் அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்படும், என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் 30,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் நாளை இயங்காது என கூறப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் இருக்கும் மருந்தகங்கள் மட்டும் நாளை இயங்கும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 

Karthikeyan Senapathy

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.  இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாக குழு உறுப்பினராக இருந்த கார்த்திகேய சிவசேனாபதி, ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்க்கும் விதமாக, தன் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த பிரதமர் மோடி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Karthikeyansenapathy

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், சுமார் 3 கோடி எண்ணிக்கையிலான முட்டைகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது நிறுத்தப்படுகின்றன. மேலும், கோழிப்பண்ணை வாகனங்கள் அனைத்தும் நாளை இயக்கப்பட மாட்டாது என்றும் கோழி பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ்நிலையம் முன்பு  ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் இளைஞர்களிடம் இணைந்து இயக்குநர் சமுத்திரகனி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.

Private schools Tamiladny

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என தமிழ்நாடு நர்சரி, ப்ரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதனால் 18,000 தனியார் நர்சரி, ப்ரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க தலைவர் டி.இ. இளங்கோவன் தெரிவித்துள்ளார். வாகன ஸ்டிரைக் காரணமாக மாணவர்கள் நலன் கருதி, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Pon.radhakrishnan

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்த வந்த நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் எ

நீங்க எப்படி பீல் பண்றீங்க