வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (18/01/2017)

கடைசி தொடர்பு:11:24 (18/01/2017)

‘இங்கிலீஷில் பேசுங்கம்மா' - தீபாவிடம் கெஞ்சிய ஆதரவாளர்கள்!

தீபா

"எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்த நாளன்று, முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன்" என்று சில தினங்களுக்கு முன் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து, அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்பதால், காலை முதலே சென்னை தியாகராய நகர் பகுதி, தீபா ஆதரவாளர்களால் திணறியது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி, அதன்பின்னர் வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு என்று திட்டமிட்டபடி எல்லாம் நடந்து முடிந்தது.

'என் வாழ்க்கையில் இன்றுமுதல் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறேன்' என்று ஆரம்பித்தது தீபாவின் பிரஸ்மீட். தியாகராய நகரின் பல பிரதான தெருக்களோடு ஒப்பிடும்போது, சின்னதாகத்தான் இருக்கிறது தீபா வசிக்கும் சிவஞானம் தெரு. அந்தத் தெருவில் இருக்கும் பழமையான ஒரு வீட்டில்தான் தீபா இருக்கிறார். தீபாவின் பேச்சு, வெளியில் திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கும் கேட்கும்வகையில், ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டிருந்தது. பெரிய எதிர்பார்ப்பு, இயல்பைத் தொலைத்த செயல்பாடுகள் அங்கே எதிரொலிக்கவில்லை. இந்த அளவு செய்தியாளர்களை தீபா எதிர்பார்க்கவில்லை, என்பதைவிட காரை வீட்டிற்கு வெளியே நிறுத்தினால் என்னாகுமோ? என்ற சாதாரண குடும்பத்தினரின் நினைப்புடன் வீட்டு காம்பவுண்டுக்கு உள்ளேயே நிறுத்தி இருந்தனர்.

'அம்மாவைப் போல கையைக் காட்டுங்க, கையைக்காட்டிக் கொண்டே, கொஞ்சம் சிரிங்கம்மா' என்று ஆதரவாளர்கள் வைத்த வேண்டுகோளை அன்றாடம் அந்த வீட்டு பால்கனியில் நின்றபடி நிறைவேற்றுவதுதான் சில நாட்களாக தீபாவின் பணியாக இருந்தது. 'நீங்க வரணும் அம்மா... அம்மாவைப் போலவே இருக்கீங்க... நாங்க ஆதரவில்லாம நிக்கறோம்' என்று அன்றாடம் அந்த தெருக்களில் காத்திருந்து எதிரொலித்த குரல்கள் ஏராளம். இதோ, தீபா வெளியே வந்து விட்டார். செய்தியாளர்களை வீட்டுக்கு வரவழைத்து தன்னுடைய மனதில் இருப்பதை எல்லாம் கொட்டித் தீர்த்து விட்டார்.

பேட்டியின்போது ஜெயலலிதா ஸ்டைலில், "உங்களின் அன்புச் சகோதரியின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர வேண்டும். தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக்க வேண்டும் இதுதான் நமது நோக்கம்" என்று அழுத்தமாகக் குறிப்பிட, வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களிடம் இருந்து பலமான விசில் சத்தம்...

"இந்தளவிற்கு எனக்கு ஆதரவு தெரிவித்த தமிழக மக்களுக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் நன்றி. என்மீது நம்பிக்கை வைத்துள்ள உங்களுக்காகவும் வருங்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காகவும் செயலாற்றுவேன். என் தாய்வீடான தமிழ்நாடும், என் தாய்மொழியான தமிழ்மொழியும் என் இரு கண்களாக இருக்கும்" என்றதும் கைத்தட்டலும், விசில் சத்தமும் அடங்க நெடுநேரம் பிடித்தது. 

அந்த சத்தம் அடங்கியதும் பட்டாசு சத்தம் தொடங்கியது. பட்டாசுகளை கொளுத்தும் போதெல்லாம், அவைகள் வெடித்து ஓயும் வரை அமைதிகாத்து விட்டு பின்னரே தீபா பேச்சை ஆரம்பித்தார். 'அம்மாவை விட அதிகமாகவே தீபாம்மா படிச்சிருக்காங்களாம்' என்று வெள்ளந்தியாக வியந்து கொண்ட கிராமத்து மக்கள் வெளியில், வெயிலில் காய்ந்தபடி தீபாவின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
'பிரஸ்மீட் முடிந்ததும், அம்மா உங்களை சந்திப்பார்' என்று திடீரென்று அமைந்த பாதுகாப்பு வளையத்தினர் உறுதி கொடுத்தனர். 

பேட்டியின்போது, ஆங்கில ஊடகச் செய்தியாளர்கள் கேள்விக்கு தீபா ஆங்கிலத்தில் பதில் அளித்தார். வெளியில் நின்றிருந்த ஆதரவாளர்கள், குறிப்பாக கிராமத்து முகங்கள், தீபா ஆங்கிலத்தில் பதிலளித்த போதெல்லாம் விசிலடித்து மகிழ்ந்தது...

'அம்மா, அடிக்கடி நீங்க இங்கிலீஷ்ல பதில் சொல்லுங்கம்மா' என்று அந்த மக்கள், தங்களின் சின்னச் சின்ன ஆசையை கோரிக்கையாக வைத்துக் கொண்டே இருந்தனர். எப்படியோ, தங்களது இன்னல்களைப் போக்க, தமிழகத்தில் இன்னொரு தலைவி கிடைத்து விட்டாற்போன்ற மகிழ்ச்சியில் தீபா வீட்டின் முன் கூடியிருந்தவர்கள் பின்னர் கலைந்து சென்றனர். தமிழ்நாட்டு இன்னல்களை தீபா போக்குவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! 

- ந.பா.சேதுராமன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்