கொலையான டெலிவரி பாயின் பெயரில் ஆப் வெளியிட்டது ஃப்ளிப்கார்ட்!

சென்ற மாதம் பெங்களூரை சேர்ந்த வருண் குமார் என்பவர் ஃப்ளிப்கார்ட்டில் ஒரு ஸ்மார்ட்ஃபோன் ஆர்டர் செய்திருந்தார். அதை டெலிவரி செய்ய நஞ்சுண்ட சுவாமி என்பவர் வருண் குமார் இருந்த ஜிம்முக்கு சென்றிருந்தார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி வருண், கையில் இருந்த கத்தியால் நஞ்சுண்ட சுவாமியை தாக்கியிருக்கிறார். பின் இரும்பு கம்பியாலும் அடித்திருக்கிறார். அந்தச் சம்பவத்தில் உயிர் இழந்தார் நஞ்சுண்ட சுவாமி. பின், ஜிம்முக்கு வந்த சில கஸ்டமர்களிடம் பேசி, ஜிம் இல்லையென கூறி திருப்பி அனுப்பியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் இயங்கி வந்த மற்ற நிறுவனங்கள், அன்று இரவு மூடிய பின்னர் நஞ்சுண்ட சுவாமியின் உடலை கட்டிடத்தின் பேஸ்மெண்டுக்கு கொண்டு போய் போட்டுவிட்டார் வருண். ஸ்மார்ட்ஃபோன் வாங்க வீட்டில் பணம் கேட்டதாகவும், கிடைக்கவில்லை என்றதால் இந்த முடிவை எடுத்ததாகவும் போலீஸிடம் சிக்கியபோது கூறியிருக்கிறார் வருண். இந்தச் சம்பவத்திற்கு பிறகு டெலிவரி பாய்ஸின் பாதுகாப்பு பற்றிய கேள்விகள் நாடு முழுவதுமே எழுப்பப்பட்டன.

டெலிவரி

இப்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது டெலிவரி பாய்ஸ்க்கு என பிரத்யேக பாதுகாப்பு ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. உயிரிழந்த நஞ்சுண்ட சுவாமியின்  நினைவாக இதற்கு ‘புராஜெக்ட் நஞ்சுண்டா’ என பெயர் சூட்டியிருப்பதாக ஃப்ளிப்கார்ட் அறிவித்திருக்கிறது. “புராஜெக்ட் நஞ்சுண்டா” ஆப் செயல்பட, இணையம் தேவையில்லை. மொபைல் நெட்வொர்க்கிலே செயல்படும். ஆப்பில் இருக்கும் SOS பட்டனை அமுக்கினால், உடனே எமர்ஜென்ஸி என்ற செய்தி அருகில் இருக்கும் டெலிவரி பாய்ஸ்க்கும், இன் சார்ஜுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் போய்விடும். மொபைல் இருக்கும் இடமே தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் உடனே பாதிக்கப்பட்ட நபரை தேடி வந்து விடலாம். 

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டெலிவரி பாய்ஸ் இருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார்கள் வல்லுநர்கள். மாத வருமானம் 10000 முதல் 15000 வரை அந்தந்த நகரத்துக்கு ஏற்றது போல் கிடைக்கலாம். பெட்ரோல் கம்பெனி தந்தாலும், மோட்டார் சைக்கிள் சொந்தமாக இருந்தால்தான் வேலைக்கே சேர முடியும். அதற்கான பரமாரிப்புச் செலவையெல்லாம் அந்த 10000 ரூபாய் சம்பளத்தில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் தாண்டி ஆபத்துகள் நிறைந்த வேலை என்கிறார்கள் டெலிவரி பாய்ஸ். நுகர்வோர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் என்பதால் ஃப்ளிப்கார்ட் இவர்களை விஷ்மாஸ்டர் என்றே குறிப்பிடுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் முறையில் எல்லாமே வர்ச்சுவலாக நடப்பவை. வாடிக்கையாளர் யாரிடமும் பேசுவதோ, விசாரிப்பதோ இல்லை. ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டாலும் கால் சென்டருக்குத் தான் அழைக்க வேண்டும். இந்த மொத்த சுழற்சியில் வாடிக்கையாளர் சந்திப்பது டெலிவரி பாயை மட்டும்தான். தனது பாராட்டுகளையும், திட்டுகளையும் நேரில் சொல்ல கிடைத்த ஒரே ஆள் இவர்கள்தான். 


“எங்கள் பிஸினஸில் விஷ் மாஸ்டர்ஸ் தான் மிக முக்கியமானவர்கள். அவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முதன்மையானது. நஞ்சுண்ட சுவாமி சம்பவத்துக்கு பிறகு, அவர்களின் பாதுகப்பை இன்னும் எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் என யோசித்து இதை உருவாக்கியிருக்கிறோம் “ என்கிறார் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சி.ஓ.ஓ. நிதின் சேத். 

-கார்க்கிபவா
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!