வாவ்... ஜல்லிக்கட்டை ஆதரித்து கவிதையாக ஒரு போராட்டம்..! | Poetic protest for Jallikattu

வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (19/01/2017)

கடைசி தொடர்பு:15:07 (19/01/2017)

வாவ்... ஜல்லிக்கட்டை ஆதரித்து கவிதையாக ஒரு போராட்டம்..!

‛மெளனம் தன் இருப்பை சத்தமாக வெளிப்படுத்தும்’ என்பது புரிந்தது நேற்று. அலுவலகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். டெய்லர்ஸ் ரோடு நிறுத்தம் அருகே இருக்கும் டீ கடையில் தினமும் டீ குடிப்பது வழக்கம். அதற்காக வண்டியை ஓரங்கட்டினேன். அங்கே பஸ் ஸ்டாப்பில் இருந்து சற்று தள்ளி ஆணும், பெண்ணுமாக ஒரு பத்துப் பதினைந்து பேர் வரிசையாக நின்றிருந்தனர். அவர்கள் கைகளில் பதாகைகள். அதில் ‛வீ வான்ட் ஜல்லிக்கட்டு... பீட்டா கொஞ்சம் ஓரங்கட்டு...’ என விதவித வாசகங்கள்.

கவிதையாக ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம்

அதைக் கடந்தபோது ஒரு பெண் குரல். ‛எக்ஸ்க்யூஸ்மி சார்... ஒரு ஃபைவ் மினிட்ஸ்...’ என்னை டீ கடைக்குச் செல்லவிடாமல் தடுத்தது அந்த வார்த்தை. என்னவெனக் கேட்டபோது என் கையிலும் ஒரு பதாகையைத் திணித்திருந்தாள். அந்த மாதுவின் பெயர் மது. 

நீங்க யாரு... மெரினா போகலையா...?

‛ஆக்சுவலி.... நான் இங்க ப்ரைவேட் கம்பெனில வொர்க் பண்றேன். டெய்லி இங்க இருந்துதான் பஸ் ஏறுவேன். அப்டி வந்தப்போ... இவங்க ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் பண்ணி ப்ரடஸ்ட் பண்ணாங்க. நானும் ஜாயின் பண்ணிட்டேன். வீ வான்ட் ஜல்லிக்கட்டு...’ என்று விளக்கினார். ’எனக்கு இதுக்குமேல எதுவும் தெரியாது. அதோ... ப்ளாக் சர்ட் போட்டிருக்காரே, அவர்தான் எங்களை ஆர்கனைஸ் பண்ணார். அவர்கிட்ட கேளுங்க’ என அந்தப் பெண் விரல் நீட்டிய திசையில் நோக்கினால், ‛ஹாய் ப்ரோ...’ என கைகுலுக்கினார் ஒரு இளைஞர். அவர் பெயர் வீரபத்ரன். மீசை அரும்பும் வயது. சொந்த ஊர் வேலூர் பக்கம். இங்கே ஒரு வெப்டிசைனிங் நிறுவனத்தில் வேலை.

‛எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு எல்லாம் நடக்காது. ஆனா, ரேக்ளா ரேஸ் நடக்கும். நான் ஜல்லிக்கட்டு பார்த்தது இல்லைன்றதுக்காக சப்போர்ட் பண்ணாம இருக்க முடியுமா? என்னால இன்னிக்கி மெரினா போக முடியலை. அதான் ஈவ்னிங் 3.30க்கு ஆஃபீஸ்ல பெர்மிஷன் போட்டு இங்க வந்து நின்னேன். ஆஃபீஸ்லயே சின்னதா ஒரு மீட்டிங் போட்டோம். இந்த பஸ் ஸ்டாப்ல போராட்டம் பண்றதா பிளான். எங்க ஆஃபீஸ் ஒன் ஆஃப் தி பார்ட்னரும் ஓகே சொல்லிட்டார். அதுமட்டுமில்ல. அதோ அவரும் இங்க வந்து நின்னுட்டார்’ என்றார் வீரபத்ரன்.
யார் அந்த பெரிய மனிதர் எனத் தேடிக் கொண்டிருந்தபோது டிப் - டாப் உடையில் தலைக்கு மேலே பதாகையைத் தூக்கிப் பிடித்தபடி நம்மைப் பார்த்து கண் சிமிட்டி, வெற்றிக்குறி காட்டினார் அந்த பார்ட்னர். 

கவிதையாக ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம்

ஏற்கெனவே பீக் அவர்ஸில் பூந்தமல்லி ஹைரோடு நிரம்பி வழியும். அருகே புத்தகக்காட்சி வேறு நடந்து கொண்டிருந்தது. சொல்லவா வேண்டும். வாகனங்கள் அலறிக்கொண்டிருந்தன. அந்த வழியே கடந்தவர்கள் எல்லோர் கண்களும், இந்த போராட்டக்காரர்கள் மீது பட்டு விரிந்தது. இதுதான் அவர்களின் நோக்கமும் கூட.

அதான், மெரினாவுல போராட்டம் நடக்குதே. அங்க போயிருக்கலாமே... மீடியா கண் உங்க மேல பட வாய்ப்பே இல்லையே...

‛அவங்க நாள் முழுக்க போராடுவாங்க பாஸ். நாங்க அங்க போக முடியலை. அதான் இங்க இருந்தே சப்போர்ட் பண்றோம். அதோட, மெரினாவுல மட்டுமில்லை, எல்லா இடத்துலயும் ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் இருக்குன்னு நிரூபிக்கத்தான் இங்க நின்னோம். எங்க பிளான் சிம்பிள். பஸ் ஏற வர்றவங்க, ஒரு பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ இங்க எங்க கூட வந்து நின்னா போதும். நாங்க நினைச்சதை விட பயங்கர சப்போர்ட். 6 மணி போல, 30 - 40 பேர் நின்னுருந்தாங்க. லேடீஸ் கூட கூச்சப்படாம வந்து நின்னாங்க. நாங்க கோஷம் போடலை. ஆர்ப்பாட்டம் பண்ணலை.

சைலன்ட்டா எங்க உணர்வுகளை மத்தவங்களுக்கு ஷேர் பண்றோம். இதோ போலீஸும் எங்களுக்கு பாதுகாப்பா இருக்காங்க. இதுவரைக்கு இந்த வழியா லட்சம் பேர் போயிருப்பாங்க. எல்லா இடத்துலயும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இருக்குன்னு அவங்களுக்குப் புரிஞ்சுருக்கும். எங்களுக்கும் ஏதோ ஆத்ம திருப்தி ’ என வீரபத்ரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த வழியே கடந்து சென்ற 15B பஸ்ஸில் இருந்தவர்களின் கண்களில் ஆச்சரியம். 

‛பாத்திங்களா... எங்க போராட்டம் ரீச் ஆயிடுச்சுல்ல? இந்த வழியா ஏற்கெனவே 2 ஐ.ஏ.எஸ். ஆஃபீஸர்ஸ் கார் கடந்து போயிருச்சு. குறைஞ்சது லட்சம் பேராவது பாத்திருப்பாங்க. அது போதும் எங்களுக்கு’ என விடைபெற்றார். மீண்டும் ஒருமுறை அவர் பெயர் கேட்டேன். வீரபத்ரன் என பதில் வந்தது. வாழ்த்துச் சொல்லி டீ குடிக்க வந்தேன். 

கவிதையாக ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம்

ஆயிரம், ஆயிரமாக கூட்டம் இல்லை. சத்தம் இல்லை. ஊடகங்களின் பார்வை இல்லை. ஆனாலும், மெளனமாக ஒரு போராட்டம் நங்கூரமிட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கையில் எனக்கு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அஸ்ஸாமில் இருந்து மலைவாழ் மக்கள் யாருக்கும் இடையூறின்றி டில்லியை நோக்கி நடந்து சென்று, அமைதி வழியில் நடத்திய போராட்டம், நாடாளுமன்றத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது  நினைவுக்கு வந்தது. தற்போது தமிழகம் எங்கும் அப்படி பல அமைதிப் போராட்டங்கள் அரங்கேறுவது நல்ல ஆரம்பம்.

வண்டியை  ஸ்டார்ட் செய்ய முயல்கிறேன். அப்போது ஒரு பஸ் கோயம்பேடு நோக்கி புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் குடுகுடுவென ஓடி வந்து போராட்டக்காரர்களிடம் இருந்து ஒரு பதாகையை வாங்குகிறான். பஸ் கிளம்பிவிட்டது. அவன் வேகமாக ஓடிச்சென்று பஸ் ஏறுகிறான். முதல்வேளையாக இரண்டாவது படிக்கட்டில் நின்று கொண்டு, அந்த பதாகையை வெளியே தெரியும்படி தூக்கிப் பிடித்துக் கொண்டான். பச்சையப்பன் கல்லூரி நிறுத்தம் வரை, ‛வீ வான்ட் ஜல்லிக்கட்டு... பீட்டா கொஞ்சம் ஓரங்கட்டு...’ என்ற வாசகம் வெளியே தெரிந்து கொண்டே இருந்தது.

மெரினாவில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஒரு கட்டுரை எனில், டெய்லர்ஸ் ரோடு ஸ்டாப்பிங்கில் நடந்தது ஓர் அழகிய கவிதை.
 

- தா.ரமேஷ் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்