“தயார் நிலையில் துணை ராணுவம்” - தமிழக அரசுக்கு செக் வைக்க துடிக்கும் மோடி அரசு!

ராணுவம்

 

லைவர்களே இல்லாமல்  ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழக இளைஞர்கள் போராட்டக்களத்தில் இறங்கி இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையே தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. வரலாற்றில் இடம்பிடித்துள்ள இந்தப் போராட்டத்தைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாமல் தவித்து வருகிறது. எந்தவித வன்முறையும் இல்லாமல், அறவழியில் நடைபெறும் இந்தப் போராட்டம் ஆரம்பித்தபோது, அதை சாதாரணமாக நினைத்தது தமிழக காவல்துறை. அதன்பிறகு நாட்கள் செல்லச்செல்ல... அதன் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்து நிற்கிறது. இந்த நிலையில், துணை ராணுவம்மூலம் பூச்சாண்டி காட்டத் தயாராகி வருகிறது மத்திய அரசு. 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு  மத்திய அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் நாடவேண்டிய நிலையில் உள்ளது. போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று (18-1-17) இரவு அவசரமாக டெல்லி சென்றார்.இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் ஓ.பி.எஸ் டெல்லிக்கு பயணம் செய்யும் முன்னே, டெல்லியில் இருக்கும் தமிழக அதிகாரிகள், ''மத்திய அரசு இந்த விஷயத்தில் பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளாமல்தான் உள்ளது. நடப்பதை வேடிக்கை பார்க்கும் மனநிலையில்தான் உள்ளது'' என்ற கருத்தை முதல்வரின் காதில் போட்டுவிட்டார்கள். அவர்கள் கூறியது போன்றே முதல்வர் பன்னீர்செல்வத்திடம் பிரதமர் மோடி, “ மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, அதே நேரம் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உதவும்” என்று சாமர்த்தியமாகப் பேசி பன்னீரை அனுப்பிவிட்டார்.

“மத்திய அரசை நம்பி பயன் இல்லை, நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்” என வருத்தப்பட்ட பன்னீர்செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடையை உடைப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார். அதனால்  இன்று மதியம் சென்னை திரும்பவேண்டிய அவர், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து  தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 


தமிழக அரசியல் மீது ஒரு கண்வைத்திருந்த மத்திய அரசு, இப்போது களத்தில் இறங்கத் தயாராகிவிட்டது என்ற அதிர்ச்சித் தகவல்கள் டெல்லியில் இப்போது வெளியாகியுள்ளன. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மத்திய உளவுத் துறை, தொடர்ந்து மத்திய அரசுக்கு குறிப்புகள் அனுப்பிவருகின்றன. அதில் “தமிழக காவல்துறை போராட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அதற்கு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது” என சுட்டிக்காட்டியுள்ளது. இதைத்தான்  மோடியின் அரசு கூர்ந்து கவனித்துவருகிறது. மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசே போராட்டத்தைத் தூண்டிவிடுகிறதா என்ற சந்தேகம் மத்திய அரசுக்கு எழுந்துள்ளது. தமிழக காவல்துறையினர் செயல்படாமல் இருந்துவிட்டுப் போனால், அடுத்து நமது துணை ராணுவத்தை இறக்கவேண்டியதுதான் என்ற மனநிலைக்கு வந்துள்ளது மத்திய அரசு. இன்று காலையிலேயே, தமிழகத்தில் இருக்கும் துணை ராணுவப்படை மையங்களுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு ஒன்று வந்துள்ளது.“துணை ராணுவப் படையினரைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்”  என்று உத்தரவு வந்துள்ளதால், அனைத்து துணை ராணுவப் படையினரும்  தயார் நிலையில் இப்போது உள்ளார்கள்.

“தமிழகத்தில் மைதானம் மற்றும் சாலைகளில்  நடைபெற்று வந்த போராட்டங்கள், பிரதமர் கைவிரித்த பிறகு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களை நோக்கி போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன.இதையெல்லாம் பார்க்கும் மத்திய அரசு  சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது.தமிழகத்தில்  மத்திய அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை. அசாதாரணச் சூழ்நிலை நிலவுகிறது  என்று  அதிரடியாக மத்திய அரசு அறிவித்ததுடன், துணை ராணுவத்தையும் போராட்டக்களத்தில் இறக்கி போராட்டத்தை ஒடுக்கத் திட்டம் தீட்டுகிறது” என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள். இதே காரணத்தை வைத்து தமிழக அரசுக்கு மத்திய அரசு செக் வைக்கவும் வாய்ப்புள்ளது. தமிழக அரசுக்கும் இதுகுறித்த அச்சம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பிரதமர் சந்திப்புக்குப் பிறகு போராட்டத்தின் வீரியம் குறைந்து, நிலைமை சரியாகிவிடும் என்று எதிர்பார்த்தனர் காவல்துறை அதிகாரிகள். ''முடிவு தெரியாமல் நாங்கள் போராட்டத்தை கைவிட முடியாது'' என்று போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அறிவித்துவிட்டதால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் காவல் துறையினர். இதே நிலை, நாளை காலைவரை நீடித்தால் மத்தியதுணை ராணுவப் படை தமிழகத்துக்குள் நுழைந்துவிடும் என்கிற அச்சம் இப்போது அதிகாரிகள் மத்தியி்ல் ஏற்பட்டுள்ளது. 

கடைசிச் செய்தி - டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பி.எஸ்ஸுடன் மத்திய உள்துறை உயர் அதிகாரிகள் தொடர்புகொண்டு, நிமிடத்துக்கு நிமிடம்... 'தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களின் வாசல்களில் நடக்கும் போராட்டங்களைப் பற்றி விவரித்து, அதை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பாருங்கள்' என்று சூட்சமமாக சொல்லிவருகிறார்கள். இதற்கு ஒ.பி.எஸ்ஸின் உடனடி ரியாக்ஷனை மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

அ.சையது அபுதாஹிர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!