வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு! -என்ன சொல்கிறார் நாஞ்சில் சம்பத்?

‘அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட உள்ளது’ என்ற தகவல் கோட்டை வட்டாரத்தில் வலம் வருகிறது. ‘எனக்கு உறுதியான தகவல் எதுவும் வரவில்லை’ என்கிறார் நாஞ்சில் சம்பத். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளர் சசிகலாவுடன் முரண்பட்டார் நாஞ்சில் சம்பத். இதையடுத்து, கட்சித் தலைமை அளித்த இனோவா காரையும் திருப்பிக் கொடுத்தார். ‘ ஜெயலலிதா மரணத்தில் மர்மம்’ என அதிர வைத்தார். இதன்பிறகு, மன்னார்குடி உறவுகளின் சமசரப் பேச்சால் இனோவா காரை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்தார் சம்பத். ‘ சசிகலாவின் ஆணையை தமிழகம் முழுக்கக் கொண்டு செல்வேன்’ எனவும் அசர வைத்தார். ‘ நாஞ்சில் சம்பத்தின் வறுமைச் சூழலைப் போக்குவதற்காக, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசதியான வீடு ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது’ என்கிறார் வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர். 

“அ.தி.மு.க தலைமையோடு நாஞ்சில் சம்பத் முரண்படுவதற்கு பல காரணங்கள் இருந்தன. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வந்தார். தலைமைக் கழகம் கொடுத்த காருக்கு டீசல் போட முடியவில்லை. மகனுடைய கல்விச் செலவை ஈடுகட்ட முடியவில்லை. இந்த அதிருப்திகள்தான் மன்னார்குடி உறவுகளுக்கு எதிராக அவரைப் பேச வைத்தது. இதை உணர்ந்து, ‘ உங்களைப் போன்றவர்களை சிரமப்பட வைக்க மாட்டோம்’ என உறுதிமொழி கொடுத்தார் மன்னார்குடி உறவு ஒருவர். அடுத்த சில நாட்களிலேயே கார்டனுக்குச் சென்றார். சொந்த ஊரான நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் தனியார் விடுதியில் தங்குவார். அந்த விடுதிக்கு லட்சக்கணக்கில் கடன் பாக்கி வைத்துள்ளார். இதைப் பற்றியும் கார்டன் வட்டாரத்துக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். இதையடுத்து, பட்டினப்பாக்கம் அரசு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீட்டை ஒதுக்கியுள்ளது அரசு. இதுகுறித்து அதிகாரபூர்வ கடிதம் அவருடைய கைக்குக் கிடைக்கவில்லை. தமிழறிஞர் பிரிவில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். 

‘வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது உண்மையா’ என நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். “எனக்குத் தகவல் வரவில்லை. முப்பது வருடங்களாக இப்படியே பழகிவிட்டேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. எந்த ஏமாற்றமும் கிடையாது. ஆளும் கட்சியில் இருந்தாலும், நான் சௌகரியமாக இல்லை. இன்னமும் சங்கடத்தில்தான் இருக்கிறேன். எனக்கு எப்போது என்ன கிடைக்கும் என்று யாரிடமும் கேட்கவில்லை. வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வீடு குறித்து எனக்கு தகவல் வரவில்லை. அப்படி வந்தால் ஏற்றுக் கொள்வேன். சமைத்து சாப்பிட எளிதாக இருக்கும்” என்றார் நிதானமாக.  

- ஆ.விஜயானந்த்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!