அ.தி.மு.க.வினர் மீது தண்ணீர் பாக்கெட் வீசி விரட்டியடிப்பு... பொதுமக்கள் எதிர்ப்பால் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு 'ரத்து' | Protesters have blocked the route to vaadivaasal in Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (22/01/2017)

கடைசி தொடர்பு:11:54 (22/01/2017)

அ.தி.மு.க.வினர் மீது தண்ணீர் பாக்கெட் வீசி விரட்டியடிப்பு... பொதுமக்கள் எதிர்ப்பால் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு 'ரத்து'

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் இன்று காலை நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மக்கள் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசி எரிந்து மக்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றதை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இருப்பினும் நிரந்தரச் சட்டம் பிறப்பிக்காமல் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனச்சொல்லி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இருப்பினும் அனைத்து இடங்களில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்ற இடங்களில் அந்தந்த அமைச்சர்கள் ஜல்லிக்கட்டை துவக்கி வைப்பார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் முதல்வர் உட்பட அமைச்சர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு துவங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கலில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் தேவை என்றும் வலியுறுத்தினர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது போலீஸார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை. தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் நிர்பந்திக்க... ஆவேசமடைந்த மக்கள் தண்ணீர் பாக்கெட்டுகளை கொண்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க.வினர் அறிவித்தனர். போட்டியை துவக்கி வைக்க வரவிருந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் தனது பயணத்தை ரத்து செய்தார்.

- ஆர்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க