போராட்டக் குழுவினர் யார் சொன்னால் கேட்பார்கள்? போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர், யார் சொன்னால் கேட்பார்கள் என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா முதல் குமரி வரை போராட்டம் நடந்தது. அமைதியாகவும், அறவழியில், தலைமையே இல்லாமல் நடந்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுக்கு இந்த போராட்டம் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினர். 

குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் நடத்தப்படும். இந்த முறை ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக அந்த விழாவிற்கான ஏற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையில் தேசிய இறையான்மைக்கு எதிராகவும் போராட்டக்குழுவிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பினர். 
 
இதுவே போராட்டக்குழுவை கட்டுப்படுத்த சரியான தருணம் என்று போலீஸ் கருதியது. இதுதொடர்பாக ஆட்சியாளர்களுடன் ஐ.பி.எஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் தமிழக போலீஸார் ஈடுபட்டனர். 

மெரினாவை பொறுத்தவரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்தினர். இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்குழுவினர் கலைந்து செல்லவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மெரினாவில் போராட்டக்குழுவின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் லத்திசார்ஜ் நடத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்குழுவினர் கடற்கரையில் கூடினர். அதற்கு மேல் போலீஸாரால் போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸ் உயரதிகாரி பேசினார். ஏற்கெனவே போராட்டக்களத்துக்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற போலீஸாரிடம் கேட்ட ராகவா லாரன்ஸ், மெரினாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர், நம்முடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து விட்டது. இதனால் போராட்டத்தை கைவிடுமாறு பேசினார். ஆனால் அவரது பேச்சை கேட்க ஒரு பகுதியினர் மெரினாவிலிருந்து கிளம்பினர். ஆனால் மற்றொரு தரப்பினர் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்பின் இயக்குநர் கௌதமன்,  போராட்டக்களத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

 
கடற்கரை ஓரத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போரட்டக்குழுவினரை எப்படி அங்கிருந்து அகற்றுவது என்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் குறித்து சேகரித்து அதற்குப்பிறகு களத்தில் இறங்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. இன்று மாலைக்குள் போராட்டக்குழுவினரை மெரினாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதனால் காலதாமதமில்லாமல் போராட்டக்குழுவினரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் போலீஸாருக்கு வேண்டப்பட்டவர்களை களமிறக்கி அதன்மூலம் இந்த போராட்டத்துக்குத் தீர்வு காணலாம். இல்லையென்றால் அரசிடமிருந்து அதிகாரத்தை பெற்று போராட்டக்குழுவினரை அகற்ற வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆட்சியாளர்களிடம் சொன்னபோது எந்தக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய முடிவுகளை போலீஸார் எடுக்கக்கூடாது என்று ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 6 நாட்களாக மெரினா போராட்டக்களத்திலேயே 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், எப்போது இயல்பு நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள்  உயரதிகாரிகளின்  உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, " போராட்டக்குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது பேச்சுவார்த்தைக்கு வெற்றி கிடைத்து வருகிறது. விரைவில் மீதமுள்ளவர்களையும் மெரினாவிலிருந்து இன்று அகற்றி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். 

- எஸ்.மகேஷ் 


  , 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!