வெளியிடப்பட்ட நேரம்: 17:38 (23/01/2017)

கடைசி தொடர்பு:11:34 (24/01/2017)

''நான் நலமாக இருக்கிறேன்.. எந்தக் கட்சியிலும் இல்லை!'' - மெரினா வைரல் பெண் (Video)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்ற போது, பரவலாக கவனம் ஈர்த்தார் ஒரு பெண். ’தடை செய்... தடை செய்... பீட்டாவை தடை செய்’ என உணர்வும் குறும்புமாக இவர் பேசிய வீடியோக்கள் சகல தளங்களிலும் பரவியது. ஆனால், முதல் நாள் ஆச்சரிய லைக்ஸ் குவித்தவர் குறித்து, மறுநாள் கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது.  

’போராட்டத்தில் ஏன் அரசியல் தலைவர்களை விமர்சிக்கிறாய்..? 'உனக்கு ஏன் தேவையில்லாத வேலை? உடனடியாக மன்னிப்பு கேள்’ என்றும் மிரட்டல்கள் வந்ததாம். பத்தாததுக்கு, எதிர்தரப்பு கட்சிகள் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தி, ‘இவர் எங்கள் கட்சியைச் சார்ந்தவர்.  எங்களுக்காகத்தான் கோஷம் எழுப்புகிறார்’ என்றும் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்பினர்.  

ஆனால், அந்தப் பெண்ணோ, ''நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் அல்ல; நான் ஒரு தமிழ் பெண். என் இனத்துக்காகதான் அப்படி கோஷமிட்டேன். எனக்கும் அரசியல் கட்சிகளுக்கும் துளியும் சம்மந்தம் இல்லை. என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழினத்துக்காக போராடினேன் அவ்வளவுதான். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை'' என தெரிவித்துள்ளார். 

இப்போது சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணைக் காணவில்லை என்றெல்லாம் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அதோடு விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு இவர் புகைப்படத்தை இணைத்தும் வதந்தி பரவுகிறது. ’நலமாகத்தான் இருக்கிறாரா..?’ என்று விசாரித்தோம். மேலும் அவரிடம் கேட்க விரும்பிய கேள்விகளையும் கேட்டோம். அனைத்து விசாரணைகளுக்கும் பதிலாக ‘செல்ஃபி  வீடியோ’ அனுப்பி வைத்தார். 

பி.குறிப்பு: அவருடைய நலன் கருதி அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிடவில்லை!

 

 

- ஜெ.அன்பரசன் 


டிரெண்டிங் @ விகடன்