அவசரச் சட்டத்தில் தமிழக அரசு செய்த தவறு என்ன? நீதிபதி பரந்தாமன் விளக்கம் | What is the mistake in Ordinance made by TN government, Justice Paranthaman explains

வெளியிடப்பட்ட நேரம்: 20:14 (23/01/2017)

கடைசி தொடர்பு:11:35 (24/01/2017)

அவசரச் சட்டத்தில் தமிழக அரசு செய்த தவறு என்ன? நீதிபதி பரந்தாமன் விளக்கம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியும், அதனை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் அரசு தவறி விட்டது. 

அவசரச் சட்டத்தில் தமிழக அரசு செய்த தவறு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்தது. தமிழகம் முழுவதுமே போராட்டம் பரவ, மத்திய மற்றும் மாநில அரசுகள் பணிந்தன. மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை இயற்றியது. அவசரச் சட்டம் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிரந்தரச் சட்டமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அரசு இயற்றியுள்ள இந்த அவசர சட்டம்,  ஜல்லிக்கட்டுக்கு வருங்காலத்தில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இயற்றப்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு சாதகமான அனைத்து விஷயங்களையும் இந்த அவசரச்சட்டம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தேர்ந்த சட்ட நிபுணர்களின் உதவியுடன், போராட்டத்தில் ஈடுட்டு வருபவர்களிடம், சட்டத்தின் நுணுக்கங்களை முறையாக கொண்டு சேர்க்க அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

இந்த அவசர சட்டத்தின்படி,  கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதை தடை சட்டத்தில் 11, 22, 27 ஆகிய பிரிவுகளில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த சட்ட நகலை வெளியிடாமல் ரகசியமாக வைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றி, அதை இந்திய அரசியல் சாசன அட்டவணை 9ல் சேர்த்தாலே போதுமானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த போதும் இதே பாணியைத்ததான் கையாண்டுள்ளார். தமிழக அரசு சட்டத்தை இயற்றியதோடு விட்டுவிடாமல் அரசியல் சாசனம் அட்டவணை 9ல் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பராந்தாமனிடம் பேசினோம். ‛‛மிருகவதை சம்பந்தமாக சட்டம்  இயற்றும் அதிகாரம் பொதுப்பட்டியலில் உள்ளது. பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்குமே அவசரச் சட்டங்களை இயற்ற அதிகாரம் உண்டு. மத்திய அரசு இயற்றிய சட்டத்தில் மாநில அரசு ஏதாவது மாற்றம் செய்ய விரும்பினால், மத்திய அமைச்சரவையிடம் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். இப்போது தமிழக அரசே அவசரச் சட்டத்தை இயற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. 

மிருகவதைச் சட்டம் 11 3ஏ- யில், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக இடம்பெற்றுள்ளது. தற்போது அந்த விதியில் இருந்து ஜல்லிக்கட்டு நீக்கப்பட்டுள்ளது. உணவுக்காக வெட்டுதல், சூடு வைத்தல், மூக்கணாங்கயிறு போடுதல், கொம்புகளைச் சீவுதல், விதையடித்தல் போன்றவை  மிருகவதை கிடையாது என்கிறது(11 -3f)  பிரிவு. தற்போது இதில் ஜல்லிக்கட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதேபோல மிருகவதைத் தடைச்சட்டம் பிரிவு 5, உள்விதி 22ன் கீழ் ‛பெர்மார்மிங் அனிமல்சுக்கு இரு விதிவிலக்குகள் தரப்படுகிறது. போலீஸ், ராணுவம் போன்றவைகளுக்கு விலங்கினங்களைப் பயன்படுத்த விதிவிலக்கு உள்ளது. அடுத்ததாக கல்வி, அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் இப்போது ஜல்லிக்கட்டும் சேர்க்கப்படுகிறது. அதனால் இந்தத் தடையும் நீங்குகிறது. 

எந்தவிதமான சட்ட நுணுக்கங்களைக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததோ, அதையெல்லாம் நீக்கும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு  நெருக்கடி கொடுத்து அரசியல் சாசனச் சட்டப் பிரிவு 9ல் சேர்த்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் யாரும் எதுவும் செய்யமுடியாது'' என்றார். 
 

 

-எம்.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close