'ஃபேஸ்புக்கும் இல்லை; வாட்ஸ்அப்பிலும் இல்லை!'  -சீறும் சகாயம் ஐ.ஏ.எஸ்

 

 

மெரினா புரட்சி தற்காலிகமாக தணிந்திருந்தாலும், போராட்டம் குறித்து பிரபலங்கள் பெயரில் அவதூறு செய்யும் காரியத்தில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். இன்று காலை முதலே சகாயம் ஐ.ஏ.எஸ் பெயரைப் பயன்படுத்தி, ஃபேஸ்புக்கில் வெளியாகும் தகவல்களால் அதிர்ந்து கிடக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். ' என் பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புகிறார்கள்' எனக் கொந்தளிக்கிறார் சகாயம் ஐ.ஏ.எஸ். 

ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்கக் கோரி, தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். மெரினாவில் நடைபெற்ற போராட்டத்துக்கு நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது வருகை போராட்டக் களத்தில் இருந்தவர்களுக்கு பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. நேற்று மாணவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த, 'சகாயத்தை அழைக்கலாம்' என தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. தற்போது மாணவர்கள் போராட்டம் தணிந்திருக்கும் சூழலில், ' மாணவர்கள் மீது தடியடி நடத்தியது சரிதான் என நடிகர் விஷால் சொல்கிறார்' என சகாயத்தின் பெயரில் போலியாக இயங்கும் முகநூலில் கருத்து சொல்லப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்து போன நடிகர் விஷால், ' நான் அவ்வாறு ஒருபோதும் சொல்லவில்லை. என்னைப் பழிவாங்க இது தருணம் அல்ல' என விளக்கம் அளித்துள்ளார். இன்னொரு பதிவில், ' இனி எந்த நடிகரையும், செலிபிரட்டிகளையும் உள்ளே அனுமதிக்காதீர். அது நடிகர் விவேக்கோ, ஹிப் ஹாப் ஆதியோ, யாராக இருந்தாலும் சரி. உங்களுடன் சரி சமமாக பேச அனுமதிக்காதீர்.

அவர்களை விட, மாணவ செல்வங்களாகிய நீங்களே உயர்ந்தோர்; வெற்றிக்கு மிக அருகில் வந்து விட்டீர்கள். காளையை காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து, மத்திய அரசு நீக்கியவுடன், நீங்கள் வெற்றி அடைவீர். அதுவரை, நடிகர்களை உங்களுக்குள் புகுந்து குழப்பவிடாதீர். ஆயிரம் ஆண்டுகளில், இதுபோன்ற போராட்டம் நடந்தது இல்லை. வெற்றி இனி உங்கள் வசம்' என சகாயம் தெரிவித்ததாகவும் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. மேலும், 'போர்க்களமாக காட்சியளிக்கிறது. சென்னை மெரினா...அறவழி போராடியதற்கு கிடைத்த பரிசு' , மாணவர்கள் போல் வேடமிட்டு சில விஷமிகள் கலவரம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் - மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்', ' போராட்ட களத்தை மாற்றுங்கள். ஒரே இடத்தில கூடி நின்று செய்வது மட்டும் போராட்டம் இல்லை' என்றெல்லாம் பதிவிடப்பட்டுள்ளனர். மெரினா புரட்சியை சகாயமே முன்னின்று நடத்துவதைப் போன்ற தோற்றத்தை அவர் பெயரிலான போலி முகநூல் கணக்கு காண்பிக்கின்றது. இந்தப் பக்கத்தை அப்புறப்படுத்துவதற்கான பணிகளில் அவருடைய ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இதுகுறித்து, சகாயம் ஐ.ஏ.எஸ்ஸிடம் பேசினோம். " ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிப் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். இந்தப் போராட்டத்தில் என்னுடைய நலம் விரும்பிகளும் பங்கெடுத்தனர். மாணவர்களுடன் வந்து பேசுமாறு, பலமுறை அழைப்புவிடுத்தனர். இதையடுத்து சில நிமிடங்கள் அங்கு சென்றேன். என்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து நடிகர் விஷாலுக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனக்கும் இதற்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை. எனக்கென்று முகநூல் கணக்கு எதுவும் கிடையாது. சொல்லப் போனால், வாட்ஸ்அப்பை நான் பயன்படுத்துவதே இல்லை. சமூக வலைத்தளங்களில் நான் இயங்குவதுமில்லை. யாரையும் இயக்குவதுமில்லை. யாரோ திட்டமிட்டு என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என்றார் கொதிப்போடு. 

- ஆ.விஜயானந்த்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!