’வைரல் பெண்ணுக்கு பேனர் வைத்தேன்.. போலீஸ் கலங்கடித்து விட்டது!’

ஜல்லிக்கட்டு போராளி வீரத்தமிழச்சிக்கு பேனர் வைத்த தி.மு.க. பிரமுகரின் குடும்பத்தை விசாரணை என்ற பெயரில் போலீஸார் துளைத்தெடுத்து விட்டனர்.

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஒரு இளம் பெண். போராட்டத்தின் போது அந்த இளம்பெண்ணின் போராட்ட ஸ்டைல் அவருக்கு வீரத்தமிழச்சி, வைரல் பெண் என்ற அடைமொழியை பெற்றுக் கொடுத்தது. பெயர், ஊர் என எந்த விவரமும் தெரியாத பலர் அவரை தன்னுடைய மகளாக கருதினர். அந்த பெண்ணின் போராட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. லைக்ஸ்களை அள்ளி குவித்த அந்த வீடியோ வைரல் பெண்ணுக்கு அடுத்த நாளே மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவருக்கு அரசியல் சாயமும் பூசப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த அவர், 'தான் நலமாக இருப்பதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் இல்லை' என்று விளக்கமளித்து முகநூலில் ஒரு வீடியோவை பதிவு செய்தார்.

இதன்பிறகே வைரல் பெண் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் 'வீரத்தமிழச்சி என் மகளுக்கு வாழ்த்துக்கள்' என்று திருவண்ணாமலை, மேற்கு ஆரணி தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயராணி ரவி என்பவர் ஆரணி டவுனில் 5 இடங்களில் பேனர் வைத்திருந்தார். தற்போது அந்த பேனர் விவகாரம் சூடுபிடித்துள்ளது. பேனர் வைத்த ஜெயராணி மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோரிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். வைரல் பெண் குறித்து பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர். அந்த பெண் குறித்த எந்த விவரமும் எங்களுக்குத் தெரியாது என்று போலீஸாரிடம் பதில் அளித்த பிறகும், சென்னை வேளச்சேரியில் உள்ள ரவியின் மகளிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். 

இதுகுறித்து தி.மு.க.வில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரவி கூறுகையில், "அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துடிப்புடனும், துணிவுடனும் செயல்பட்ட அந்த வீரத் தமிழச்சிக்கு பேனர் வைத்தோம். தற்போது அந்த பெண் குறித்த விவரங்களை கேட்டு போலீஸார் எங்களை நிம்மதி இழக்க வைத்து விட்டனர். சென்னையில் இருக்கும் என்னுடைய மகள் வீட்டுக்குச் சென்றும் போலீஸார் விசாரித்துள்ளனர். இதனால் அந்த 5 பேனர்களையும் அகற்றி விட்டோம்" என்றார். 

போலீஸ் வட்டாரத்தில் கேட்ட போது, "அந்த பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அந்த பெண் குறித்த விவரத்தை சேகரிக்க ரவியிடம் விசாரணை நடத்தினோம். தற்போது அவர் உயிரோடு இருக்கும் தகவல் கிடைத்து விட்டது. இதனால் பேனரை மட்டும் அகற்றும்படி தெரிவித்துள்ளோம்" என்றனர். 

- எஸ்.மகேஷ்   


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!