வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (25/01/2017)

கடைசி தொடர்பு:11:36 (25/01/2017)

கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் வறட்சி! மத்திய குழு ஆய்வு

Central crew investigates Cuddalore drought

கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில்  வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் மாநிலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பயிர்கள் கருகியதால் வேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, முதல்வர் கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வறட்சி ஏற்பட்டுள்ள பகுதியை ஆய்வு செய்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் விவரங்களை இக்குழு கேட்டு வருகிறது.

இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் இந்திய வேளாண் அமைச்சக தேசிய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநர் வசுந்தரா மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. விவசாயிகள், கருகிய பயிர்களை குழுவினரிடம் காண்பித்ததோடு, தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து தெரிவித்தனர். இதனை மத்திய குழுவினர் கேட்டுக்கொண்டதோடு, விவரங்களை பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வசுந்தரா மிஸ்ரா தலைமையில் மத்திய ஆய்வு குழுவினர் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு, நெல் பயிரினை மத்திய குழுவிடம் விளக்கி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட இடத்தை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. 5 கிராமங்களில் இந்த ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது மத்திய குழு.

- பூபாலன் அச்சணந்தி, அரவிந்த் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க