திரு சுப்பிரமணியன் சுவாமி அவர்களே... இங்கு யார் பொறுக்கி? - ஒரு ‘பொர்க்கி’யின் கேள்வி! | Common Man's reply to Subramanian Swamy for calling Tamils as Porukki

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (25/01/2017)

கடைசி தொடர்பு:18:27 (25/01/2017)

திரு சுப்பிரமணியன் சுவாமி அவர்களே... இங்கு யார் பொறுக்கி? - ஒரு ‘பொர்க்கி’யின் கேள்வி!

‘பீட்டா அமைப்பை எதிர்த்துப் போராடுபவர்களின் முகவரிகள் அனைத்தும் தேசிய பாதுகாப்புப் படை வசம் வழங்கப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால், தமிழக அரசைக் கலைக்க வேண்டும். என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் தமிழர்கள் பொறுக்கிகள் என்றும் வாய்க்கொழுப்போடு வாந்தி எடுத்திருக்கிறார்.

சுப்பிரமணியன் சுவாமி

இதற்கு ஏகப்பட்ட பதிலடிகள் தரப்பட்டபோதும், இன்னமும் அடங்கவில்லை சுவாமி. ஆம், சென்னையில் காவல்துறையால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையை அடுத்து, நடிகர் கமலஹாசன், வீரத்தமிழனாக புறப்பட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் பேச முற்பட்டார். அடுத்தக்கட்டமாக, காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த விஷயத்தையும் கையில் எடுத்திருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, கமலஹாசனின் கருத்து முட்டாள்தனமானது என்று ட்வீட் செய்துள்ளார்.

இனியும் இந்த சுவாமியைவிட்டு வைக்கக்கூடாது என்றுதான் இந்தக் கட்டுரை....

தங்களின் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்களைப் பார்த்து பொறுக்கி என்று கூப்பாடு போட்டிருக்கும் இந்த வாய்க்கொழுப்பு சுப்பிரமணியன் சுவாமி, காவிரி நீர் விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் பம்மாத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கர்நாடக அரசையும், அதன் மக்களையும் பார்த்து இப்படி கூறிவிட முடியுமா, கூறிவிட்டுத்தான் முழுதாக இருந்துவிட முடியுமா?

இல்லை... முல்லை-பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், தங்களின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி, அதையே தங்களின் சட்டப் பாதுகாப்பு கவசமாக வைத்துக் கொண்டிருக்கும் கேரள அரசையும், அந்த மாநில மக்களையும் நோக்கி ஒரு வார்த்தை பேசிவிட முடியுமா... பேசிவிட்டு இந்தியாவில் இருந்துவிட முடியுமா?

முடியவே முடியாது. காரணம்... அந்த மாநில மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் இருக்கும் ஒற்றுமைதான். ஆனால், தமிழகம் என்றதும் நாக்குத் தடிக்கிறது. கொழுப்புத் துடிக்கிறது சுவாமிக்கு. இங்கே இருக்கும் அரசியல் கட்சிகளிடம் ஊழலைத் தவிர வேறு ஏதும் இல்லை என்கிற நிலையில், எதையும் உரிமையோடு கேட்டுப்போராடும் தைரியமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். மற்ற கட்சிகள் அனைத்தும் பெரிய கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகியவற்றை அண்டிப் பிழைப்பவர்களாவே இருக்கிறார்கள். இதெல்லாம்தான், சுவாமி போன்ற ஜந்துக்களை, பொறுக்கி என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகளை தமிழர்களை நோக்கி வாய்கூசாமல் சொல்ல வைக்கிறது.
சரியோ... தவறோ... ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயமாக இந்த முடைநாற்ற வாய்க்கொழுப்பு சுவாமியால் இதைச் சொல்லியிருக்கவே முடியாது. மீறிச் சொல்ல நினைத்திருந்தாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு காலத்தில் இந்த சுவாமிக்கு எதிராக அ.தி.மு.க. மகளிரணி நடத்திய அந்த கண்றாவிப் போராட்டமே அவருடைய வாயைக் கட்டிப்போட்டிருக்கும். என்ன செய்ய? ஜெயலலிதா இல்லையே என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மெரினா போராட்டம்

சரி, அமைதிப் போர்க்களத்தில் நிற்கும் தமிழர்களைப் பார்த்து பொறுக்கிகள் என்று சொல்லும் இந்த சுப்பிரமணியன் சுவாமி-யின் யோக்கியதை என்ன என்று கொஞ்சம் கொஞ்சமாக தோண்டிப் பார்த்தால்... யார் பொறுக்கி என்பது ஊருக்கும் உலகத்துக்கும் நன்றாகவே விளங்கிவிடும்.

ஓட்டுப்பொறுக்கியாக இருக்கும் ஒருவர், உணர்ச்சிப் பெருக்கோடு இருக்கும் தமிழர்களைப் பார்த்து ‘பொறுக்கி’ என்று சொல்வதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதுவரைக்கும் பத்து, பதினைந்து கட்சிகளுக்குத் தாவி, ஒவ்வொரு கட்சியிலும் பிழைப்பு நடத்திய, நடத்திக் கொண்டிருக்கிற ஒரு மனிதன், மற்றவர்களைப் பார்த்து, ‘பொறுக்கி’ என்று சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இதற்காகவே சுவாமிக்கு தேசிய விருதுகள் ஏதும் கொடுத்துப் பாராட்டலாம்.

முதன் முதலில் ஜன்சங்கம் என்கிற கட்சியின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாமி. அடுத்த தேர்தலில் ஜனதா கட்சிக்குத் தாவி அங்கே குப்பைக் கொட்ட ஆரம்பித்தார். சர்வோதய சங்கம் எனும் இயக்கத்தின் மூலமாக அரசியலுக்குள் பிரவேசித்த இந்த ஆசாமி, கொஞ்ச நாளிலேயே கட்சிவிட்டு கட்சித் தாவும் வேலையை ஆரம்பித்தவர்.

சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, அங்கே அமைச்சராக ஒட்டிக் கொண்ட சுவாமி, ஜெயலலிதாவின் ஆணைகளுக்கு இணங்க, இலங்கை தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டார். வேண்டுமென்றே அன்றைய தி.மு.க ஆட்சியின் மீது பழிகளைப் போட்டு, ஜெயலலிதாவுக்காக அந்த ஆட்சியையே கவிழ்க்க வைத்தார்.

மெரினா போராட்டம்

ஆனால், இதே சுவாமி 91-ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவராலேயே ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டார். ஜெயலிலதா முதல்வராக இருக்கும்போது, அவர் மூலமாக நிறைய சலுகைகளை அனுபவிக்க நினைத்தார். ஆனால், இவருடைய பாச்சா ஜெயலலிதாவிடம் பலிக்கவில்லை. இதனால், ஜெயலலிதா மீது ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை சுமத்தி மிரட்ட ஆரம்பித்தார்.
இன்றைக்கு பெரிதாக பேசப்படும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கு சுவாமிதான் அடிப்படை காரணம். கொதித்தெழுந்த ஜெயலலிதாவின் ஆட்கள் சுவாமியை மூலைக்கு மூலை துரத்தி அடித்தனர். தமிழகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக மாறுவேடம் போட்டுக்கொண்டு தமிழகத்தில் நுழைய பார்த்தார். இவருடன் இருந்த காரணத்துக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்ட கொடுமையும் நடந்தது.

இதையடுத்து தி.மு.க-வின் தயவைத் தேடி ஓடினார். தி.மு.க பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து, அவர்களோடு உறவாடினார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் கவிழ்ந்து தி.மு.க ஆட்சி மலர்ந்த கொஞ்ச நாட்களிலேயே தி.மு.கவுக்கும் சுவாமிக்கும் முட்டிக் கொள்ள, நிரந்தர எதிரிகள் இல்லை என்று ஜெயலிதாவிடம் ஒட்டிக் கொண்டார். இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா, இன்றைக்கு இவர் சங்கமமாகியிருக்கும் பி.ஜே.பி-யின் ஆரம்பக் கட்ட ஆட்சியையே ஆட்டி வைத்தவர்தான் இந்த சுவாமி. ஆம், படாதபாடு பட்டு வாஜ்பாய் தலைமையில் மத்தியில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது பி.ஜே.பி. ஆனால், 13 நாட்களில் அந்த ஆட்சியைக் கவிழ்த்த பெருமை, ‘பொறுக்கி’ புகழ் சுவாமிக்குத்தான் சொந்தம். பி.ஜே.பி-யில் இவர் எதிர்பார்த்தபடி பதவி ஏதும் கிடைக்கவில்லை. அதனால், அந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த ஜெயலலிதாவின் மனதைக் கலைத்து, சோனியா பக்கம் திருப்பினார்.

சோனியாவை வைத்து டீ பார்ட்டி கொடுக்க வைத்தவர், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வைத்தார். அப்போது, சோனியா, ஜெயலலிதா மற்றும் மாயாவதி மூன்று பேரையும் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்று முப்பெரும் தேவியராக வர்ணித்து மகிழ்ந்தார். தனக்கு ஏதாவது பதவி கிடைக்கும் என்றுதான் வாஜ்பாய்க்கு ஆதரவாக நடந்து கொண்டார். ஆனால், தனக்கு பதவி இல்லை என்றதும், பி.ஜே.பி-யின் ஆட்சியையே ஆட்டம் காண வைத்தார் இந்த சுவாமி!

நரேந்திர மோடியுடன் சுப்பிரமணியன் சுவாமி

ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவருடன் ஒப்பந்தம் ஏற்படவே, சொத்துக்குவிப்பு வழக்கையே இல்லாமல் செய்யும் நிலைக்குக் கூட சென்றார் சுவாமி. நல்லவேளையாக அந்த வழக்கை தி.மு.க-வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கையில் எடுத்துக் கொண்டார். இல்லையென்றால், அந்த வழக்கை வைத்து ஜெயலலிதாவிடம் இருந்து  என்னென்ன மரியாதைகளையெல்லாம் பெற்றிருப்பாரோ இந்த சுவாமி?!

தனக்குப் பதவி வேண்டுமென்றால், எதைவேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்த புண்ணியவான்.... இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ், வி.பி.சிங், சந்திரசேகர், வாஜ்பாய், மன்மோகன் சிங் என்று எல்லா பிரதமர்களிடமும் நெருங்கிப் பழகி, தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். தற்போது, நரேந்திர மோடி மூலமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மனசாட்சியின் குரலாக அவ்வப்போது இவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி. ஜெட்லி மீது பாய வேண்டுமா... சுவாமி குரைப்பார். சுஷ்மாவை நோகடிக்க வேண்டுமா... சுவாமி கத்துவார். ரகுராம் ராஜனை மட்டம் தட்டவேண்டுமா... சுவாமி பாய்வார்.

ஆரம்பத்தில், மோடி அரசாங்கத்தில் நமக்கும் வகையான பதவி கிடைக்கும் என்றுதான் அவருடைய தலைமையின் கீழ் பி.ஜே.பி-யில் ஐக்கியம் ஆனார் சுவாமி. ஆனால், நரேந்திர மோடியா... கொக்கா. பலே கில்லாடியான மோடி, சுவாமியின் தில்லாலங்கடி வேலைகளை எல்லாம் அறிந்தவராயிற்றே. அதனால், சுவாமியை எதற்காகப் பயன்படுத்தவேண்டுமோ... அதற்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பதவியா முக்கியம்... பிழைப்பு ஓடினால் போதும் என்று சுவாமியும் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் யார் பொறுக்கி?

- மேகலாசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்