வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (25/01/2017)

கடைசி தொடர்பு:17:31 (25/01/2017)

குடியரசு தினவிழாவில் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றுவது சட்டபடி சரியா? புதிய சர்ச்சை!

முதல்வர் கவர்னர் குடியரசு தினம் சர்ச்சை

நாளை நாடு முழுவதும்  குடியரசு தினம் கோலகலமாக கொண்டாட  ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் குடியரசு தின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் குடியரசு தின விழாவில் முதல்வர் கொடியேற்றுவதற்கு எதிராக புதிய சர்ச்சைகளும் கிளம்பியுள்ளன. 

தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையாவின் பதவிகாலம் கடந்த ஆண்டோடு முடிந்துவிட்டதால் மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் தமிழகத்திற்கு புதியஆளுநரை நியமிக்காமல் மஹாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்தியாசாக ராவை பொறுப்பு ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் விரைவில் நியமனம் செய்யபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் கடந்த நான்கு மாதமாக தமிழகத்திற்கு ஆளுநர் நியமிக்கபடவில்லை. ஆண்டுதோறும் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு துவங்கபடுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 23-ம் தேதி துவங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை பொறுப்பு ஆளுநரே துவக்கி வைத்தார். அதேபோல் சுதந்திர தினத்தன்று மாநில முதல்வரும், குடியரசு தினத்தன்று ஆளுநரும் தேசிய கொடியை ஏற்றுவது மரபாக கடைபிடிக்கபடுகிறது. இந்த ஆண்டு ஆளுநர் இல்லாததால் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவது யார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று முதல்முறையாக  தமிழக முதல்வரே தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொள்ளுவார் என்று  கூறப்படுகிறது.

வழக்கறிஞர் வில்சன்இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் “பல ஆண்டுகளாக குடியரசு தினத்தன்று ஆளுநர் கொடியேற்றுவதுதான் மரபாக கடைபிடிக்கபட்டு வருகிறது. 2002-ம் ஆண்டு தேசிய கொடி குறித்த சட்டப்படி, சுதந்திர தினத்திற்கு பிரதமரும், குடியரசு தினத்திற்கு ஜனாதிபதியோ அல்லது துணை ஜனாதிபதியோ கொடியேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நிலைதான் தமிழகத்திற்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்வர்தான்  கொடியேற்றுவார் என்று அறிவிக்கபட்டிருப்பது வழக்கமான நடைமுறைகளுக்கும் மரபுக்கும் எதிரானது” மனுவில் அவர் சுட்டிகாட்டியுள்ளார். இந்த வழக்கை உயர்நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் குடியரசு தின விழாவில் முதல்வர் கொடி ஏற்றலமா? என்ற புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது. ஆளுநர் இல்லாத பட்சத்தில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் கொடியேற்ற முடியும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. 

இது குறித்து முன்னாள் அரசு வழக்கறிஞர் வில்சன் “நாளை முதல்வர் கொடியேற்றுவதில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆளுநர் பதவி காலியாக இருந்தால் மட்டுமே இந்திய ஜனாதிபதி ஒப்புதலோடு தலைமை நீதிபதி கொடியேற்றுவார். ஆனால் தமிழகத்தில் ஆளுநர் பொறுப்பில் தற்போது வித்தியாசாகர ராவ் உள்ளார். அவர் மஹாராஷ்டிர மாநிலத்திற்கும் ஆளநராக உள்ளார். ஒரேநாளில் இரண்டு இடங்களில் அவர் கொடியேற்ற முடியாது என்பதால், அவரின் ஒப்புதலோடு முதல்வர் கொடியேற்றலாம். இதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. ஆனால் தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் பொறுப்பு ஆளுநரை வைத்தே காலம் தள்ளுவது நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார். 

- அ.சையது அபுதாஹிர் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்