வங்கித் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி? #BankingExamTips

வங்கி தேர்வுக்கு தயாராகுதல்

அடுத்தடுத்து வங்கித் தேர்வுகள் வரிசைக்கட்டி வர இருக்கின்றன. இந்தத் தேர்வுகளின் மூலம் ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணியிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரி பணி வரை பல பணிகளுக்குத் தேர்வு செய்ய இருக்கிறார்கள். 

வங்கித் தேர்வில் ஒரு முறை வெற்றி பெற்று வேலை கிடைத்து விட்டால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு நல்ல சம்பளத்துடன் வங்கியாளராக வலம் வரலாம் என்பதால் பெரிய அளவில் போட்டி நிலவுகிறது.

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வங்கித் தேர்வுக்கு எந்த வகையில் தயாராவது? எப்படித் தயாரானால் நீங்கள் எளிதில் வெற்றி பெற முடியும் என்பது குறித்து சென்னை ரேஸ்  நிறுவனத்தின் இயக்குநர் பரத் வழங்கும் டிப்ஸ் உங்களுக்காக. 

முப்பது வயது வரை வங்கி தேர்வு எழுதலாம் என்றாலும் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போதே தேர்வுக்குத் தயாராக வேண்டும். இளம் வயதிலேயே தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது எளிது. 

வங்கித் தேர்வில் கணக்கு கேள்விகளை பார்த்துத்தான் பலரும் கஷ்டம் என்கிறார்கள். தேர்வுக்கான கணக்கு கேள்விகள் எட்டாம் வகுப்பு வரை உள்ள கணக்கு புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்படுகிறது. 

எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒவ்வொரு கணக்கிற்கும் பதிலளிப்பதற்கும் ஐந்து நிமிடங்களை எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால் வங்கித் தேர்வில் போது ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு நிமிடத்திற்குக் குறைவான நேரத்தில்  பதிலளிக்க வேண்டி இருக்கும்.

ரேஸ் இன்ஸ்டியூட் பரத்

வங்கித் தேர்வுக்கு தயாராகும்போது ஆரம்பத்தில் சின்ன சின்ன கணக்குகளுக்கு விடையளிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு கேள்விக்கு பத்து நிமிடம் ஆனாலும் பரவாயில்லை என்ற வகையில் கணக்கு போட ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்யும் போது கணக்கு போடுவதற்கான நேரம் குறைந்து வருவதை தன்னால் உணர முடியும். ஒரு மாத பயிற்சியில் ஒரு கணக்கிற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நீங்கள் விடையளித்து விடுவீர்கள். 

கணக்கு கேள்விகளுக்கு அடுத்து கஷ்டத்தை கொடுப்பவை புதிர் சார்ந்த வகையில் கேட்கப்படும் ரீசனிங் கேள்விகள். இந்த கேள்விகளுக்கான பதிலை கண்டுபிடிக்க நிறைய 'ஷார்ட்கட்' இருக்கிறது. ரீசனிங் கேள்விகளுக்கு திரும்ப திரும்ப பதிலளிக்கும் போது ஷார்ட்கட் முறையினை நாமே கற்றுக்கொள்ள முடியும்.

வங்கித் தேர்வில் நிறையப் பேர் தேர்ச்சிபெறாத பாடம் என்றால் அது ஆங்கிலம் தான். கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் 58% பேர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள். வங்கித் தேர்வில் பள்ளி அளவிலான ஆங்கில இலக்கணம் சார்ந்த கேள்விகள் தான் கேட்கப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

வங்கித் தேர்வுக்கு முழு அளவில் நேரத்தை ஒதுக்கி தயார் செய்தால் ஆறு மாதத்தில் வெற்றி பெற்று விடலாம். தொடர்ந்து வங்கிகள் ஆட்களைத் தேர்வு செய்து வருவதால் தொடர் பயிற்சியால் வெற்றி பெற்று விடலாம். தேர்வு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தயாராக ஆரம்பித்தால் வெற்றி பெறுவது என்பது கடினம் தான். 

வங்கித் தேர்வுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது பயிற்சி செய்ய வேண்டும். ஒரு சிலர் நல்ல முறையில் தயார் ஆனாலும், திடீரென்று டிஎன்பிஎஸ்சி தேர்வு, விஏஓ தேர்வு என்று திசை மாறி விடுவார்கள். இதைப்போலத் திசை மாறாமல் வங்கி தேர்வுகளுக்கு மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும். 

ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் தனித்தனி தேர்வு முறை என்று இருக்கிறது. ஒரு தேர்வு முறையில் இருந்து இன்னொரு தேர்வு முறைக்கு மாறும் போது கவனமும் மாறும். இதன் மூலம் எதிலும் நீங்கள் சிறப்படையாமல் போக வாய்ப்புகள் அதிகம். வங்கித் தேர்வுகளுக்கான வாய்ப்புகள், தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் ஒரே தேர்வில் வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்த தேர்வுகளில் வெற்றி பெற  வாய்ப்புகள் அதிகம். 

வங்கித் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது என்பதால் கவனமாக தேர்வு எழுத வேண்டும். இதற்கு, மாதிரித் தேர்வுகள் பெரிய அளவில் உதவும். வங்கித் தேர்வு எழுதுவதற்கு முன்பு குறைந்தது நாற்பதுக்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். 

மாதிரித் தேர்வு ஒரு மணி நேரம் எழுதினால், அடுத்த ஒரு மணி நேரம் எங்கு எல்லாம் மேம்படுத்தலாம்  என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நூறுக்கு ஐம்பது மதிப்பெண் பெற்றிருந்தால் இன்னும் ஐம்பது மதிப்பெண் ஏன் பெறவில்லை என்பது குறித்து ஆராய்ந்து அந்தப் பிரிவுகளை எல்லாம் மேம்படுத்த வேண்டும். 

வங்கித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், உங்களைப் போலவே தேர்வுக்குத் தயாராகி வரும் நண்பர்களுடன் இணைந்து அவ்வவ்போது கலந்துரையாட வேண்டும். இவ்வாறு கலந்துரையாடும் போது தேர்வு குறித்து உத்வேகம் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் குழுவின் மூலம் உங்களுடைய தேர்வு சார்ந்த சந்தேகங்களையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். 

ஏற்கனவே வங்கித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களிடம் பேசி, அவர்களுடைய அனுபவத்தையும், குறிப்பேடுகளையும், பயிற்சிக்குப் பயன்படுத்திய நூல்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

வங்கித் தேர்வுக்கு தயாராகும் ஆறு மாதத்திற்கு வாட்ஸ்அப், பேஸ்புக், டிவி தொடர் பார்ப்பது போன்றவற்றை எல்லாம் தவிர்த்து தயாரிப்பு பணியில் மட்டும் முழு கவனமும் செலுத்த வேண்டும்.

வங்கித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களது சான்றிதழில் உள்ளப்படியே பெயர், பிறந்த நாள் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட வேண்டும். தேர்ச்சி பெற்ற பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் போது பெயரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உங்களை நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம். இதுபோல் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

வங்கித் தேர்வில் கிளார்க் பணிகளுக்கு நேர்முக தேர்வு கிடையாது. இப்போது ஒவ்வொரு தேர்வும் இரண்டு நிலையில் நடக்கின்றன. அதாவது ஆரம்ப தேர்வு மற்றும் இறுதித் தேர்வு என இரண்டு தேர்வுகள் தான்.

இன்டர்வியூவில் நீங்கள் சொல்வதில் இருந்தே கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். உங்கள் ஊரின் பெயரில் இருந்தே கேள்வியினை ஆரம்பிப்பார்கள் என்பதால் நீங்கள் சொல்லும் பதிலை நிதானமாகவும் யோசித்தும் பதிலளிக்க வேண்டும். 

இன்டர்வியூவில் ஐந்து வகையில் மதிப்பெண்ணை பிரித்து இருப்பார்கள். இதில் உங்களுடைய உடை, நீங்கள் பேசும் விதம், உங்களுடைய அறிவு போன்றவற்றிற்கு தனித்தனியே மதிப்பெண் கொடுப்பார்கள்.

இன்டர்வியூக்கு முன்பு கண்ணாடி முன்பும், கேமரா முன்பும் நின்று பேசி, பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நேர்முகத்தேர்வு நடத்துபவர்களின் முகம் பார்த்து பேசவும், கொஞ்சம் புன்முறுவலுடன் பேசவும் உதவும். 

அருந்ததி பட்டாச்சார்யா

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிளார்க்காக தனது பணியினை துவங்கியவர் திருமதி. அருந்ததி பட்டாச்சார்யா. இன்று இவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர். இவரைப்போல் நீங்களும் வங்கி தலைவராக வரலாம்.

வங்கி வேலை வாய்ப்புகள் உள்ளபோதே பயன்படுத்தி வங்கி அதிகாரி ஆவது உங்களுடைய பயிற்சியிலும், முயற்சியிலும் தான் இருக்கிறது" என்கிறார் பரத்.

வாழ்த்துகள் நண்பர்களே!


- ஞா. சக்திவேல் முருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!