வெளியிடப்பட்ட நேரம்: 02:06 (26/01/2017)

கடைசி தொடர்பு:00:44 (26/01/2017)

அ.தி.மு.க வை காப்பாற்றுவது யார்? - ஓ.பி.எஸ் சொல்லும் ரகசியம்

ந்தி மொழித் திணிப்பை எதிர்த்து உயிர்நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25&ம் தேதி நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அ.தி.மு.க சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், ‘‘தமிழுக்காகவும் தமிழர்கள் நலனுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் புரட்சித் தலைவி அம்மா. தமிழர்களுக்கு வந்த இன்னல்களைத் துடைத்து உலகத்தமிழர்களின் ஒப்பற்றத்தலைவியாக விளங்கினார். தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்துவைக்கப் போர்க்குணத்தோடு போராடியவர் புரட்சித்தலைவி மட்டும்தான். அவர் வழியில் நாம் செயல்பட்டு கழகத்தைக் கட்டிக் காப்போம். மொழிப்போர்த் தியாகிகள் புகழைத் தூக்கிப் பிடிப்போம். அவர்களை போற்றுவோம்’’ என்று பேசினார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அன்னை தமிழுக்காக உயிர் தியாகம் செய்த மொழிபோர் தியாகிகளுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மா ஆணைக்கிணங்க வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. 1965 -ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகமே பற்றி எரிந்தது. மாணவர்களின் எழுச்சிமிகுந்த போராட்டத்தை அடக்க ராணுவமே வந்தது. 100க்கும் மேற்பட்டோர் மொழிக்காக உயிர்த் தியாகம் செய்தனர். உலக வரலாற்றில் தாய்மொழியை காப்பாற்றுவதற்காக இத்தனை பேர் உயிர்விட்டதாக வரலாறுகளே இல்லை. தமிழர்களின் எழுச்சியால் ஒரு பிரளயமே ஏற்பட்டது.

 

1965 -ஆம் ஆண்டு ஜனவரி 25 -ஆம் தேதி தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம் மார்ச் 15-ஆம் தேதிதான் முடிந்தது. தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசை மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம் வீழ்த்தியது. தமிழகத்தில் ஆட்சியை பறிகொடுத்து 50 ஆண்டுகள் ஆன பின்னரும் அவர்களால் இன்னும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. காங்கிரஸ் எழுந்திருக்க முடியாததற்கு மாணவச் செலவங்களின் எழுச்சிமிகுந்த, உணர்ச்சிகரமான போராட்டம்தான் காரணம். 

இந்த இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் 16 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். அந்த எண்ணிக்கையை ஒன்றரைக் கோடியாக உயர்த்தியவர் புரட்சித்தலைவி அம்மா. கட்சியை கட்டுப்பாட்டோடு வைத்து இருந்தார். இந்த கட்சியை, ஆட்சியை ஒழித்துவிட வேண்டும் என்று அரசியல் எதிரிகள் எவ்வளவோ சூழ்ச்சிகளை செய்தார்கள். அத்தனையையும் தனது வியூகதால் வீழ்த்தி கழகத்தை வெற்றி நடை போட வைத்தவர் அம்மாதான். கட்சியை எக்கு கோட்டை ஆக்கினார். இதற்காக அவர் செய்த தியாகங்களை உழைப்புகளை நாம் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மோடு அம்மா இப்போது இல்லை என்றாலும் கூட, கட்சியின் கட்டுப்பாடு காத்து அம்மாவின் தியாகங்களை நினைத்துச் செயல்பட வேண்டும். இது அம்மாவுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.

இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர்கள் பிரச்னை, முல்லைப் பெரியாறு, காவிரி என்று அடுக்கடுக்கான பிரச்னைகளில் தி.மு.க செய்த துரோகங்களால் தமிழினம் வஞ்சிக்கப்பட்டு வந்தது. அவை அத்தனையையும் தனது உறுதியான சட்டப்போராட்டங்களால் வெற்றியை பெற்றுத்தந்தவர் புரட்சித்தலைவி அம்மா. அதுபோல, இந்த இயக்கத்துக்கும் சோதனைகள் வந்தபோது அதில் வென்று காட்டி சாதனை படைத்தார். அம்மா மறைவுக்கு பிறகும் இப்போதும் பிரச்னைகள். அவை அனைத்திலும் நாம் வெற்றி கண்டு வருகிறோம். அதற்கும் அம்மாதான் காரணம். அவர் மறைந்தாலும் மறையாமல் தெய்வமாக நின்று நம்மை காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் காட்டிய வழியில் நாம் கட்டுப்பாடுமிக்கவர்களாக நடப்போம். அவர் காட்டிய வழியில் சென்றால் எப்போதும் நமக்கு வெற்றிதான்’’ என்று பேசினார்.

 

 - எஸ்.முத்துகிருஷ்ணன், படங்கள்: பா.காளிமுத்து. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்