போலீசார் தாக்குதலில் தப்பிப் பிழைத்த இமான் அண்ணாச்சி.. அவரே வெளியிட்ட வீடியோ!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தன்னையும் போலீசார் தாக்கியதாக இமான் அண்ணாச்சி, தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

இமான் அண்ணாச்சி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் ஏராளமான இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஏழு  நாட்கள் அமைதியாக நடந்த போராட்டம் முடிவில் வன்முறைக் காடானது. ஏராளமான பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தன. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. போலீசாரே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக  ஏராளமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கடும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் போலீசாரின் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். போலீசாரே ஆட்டோக்களுக்கு தீ வைப்பது, வீடுகளுக்கு தீ வைப்பது போன்று - சினிமாவில் பார்த்தது போன்ற சம்பவங்களை நிகழ்த்தி - நாட்டை அதிரவைத்தனர். 

போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இளைஞர்களை மெரினாவில் இருந்து வெளியேற்ற போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இளைஞர்கள் கடலை நோக்கி செல்லத் தொடங்கினர். இதை கேள்விபட்ட மீனவ மக்கள் தங்கள் படகுகளுடன் மெரினா கடற்கரைக்கு வந்தனர். ஒருவேளை இளைஞர்கள் கடலுக்குள் இறங்கினால், காப்பாற்றி விட வேண்டுமென்ற எண்ணத்தில் மீனவர்கள் படகுகளுடன் வந்திருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் நெல்லையில் நடந்தது. தாமிரபரணிக்கரையில் நடந்த அந்தப் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். தடியடிக்கு பயந்து ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். இந்த சம்பவத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதே போன்ற ஒரு நிலைமைதான் மெரினாவிலும் இருந்தது. அதனால்தான் மீனவ மக்கள் பயந்து போய் படகுகளுடன் மெரினாவுக்கு வந்தனர். போலீசாரை இன்னொரு கொலைப் பழியில் இருந்து மீட்க வேண்டுமென்பதுதான் அவர்களது நோக்கமாக இருதிருக்கக் கூடும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத போலீஸ் மீனவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து வருகிறது. வீடுகளைக் கொளுத்துகிறது. மீன் மார்க்கெட்டை சூறையாடுகிறது. சினிமாக்களில் வரும் போலீஸ் போல நிஜத்திலும் தற்போது தமிழக காவல்துறையை பார்க்க முடிகிறது. 

                          

 

போலீசாரின் முகத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் பல வீடியோக்கள் சமுக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த தன்னையும் போலீசார் தாக்கியதாக இமான் அண்ணாச்சி, தான் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தபோது, தன் மீதும் உடன் வந்த நண்பர் மீதும் தாக்குதல் நடத்தியதாக வீடியோவில் அவர் கூறியுள்ளார். போலீசார் நடத்திய தாக்குதலில் தன்னுடன் வந்த நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதித்து உயிரைக் காப்பாற்றியதாகவும் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் இமான் அண்ணாச்சி கூறியிருப்பதாவது,  ''மாணவர்கள் கடலுக்குள் இறங்குவது குறித்து கேள்வி பட்டு, நானும் மெரினாவுக்கு ஓடினேன். அப்போது போலீசார் என்னையும் எனது நண்பரையும் தாக்கினர். எனது நண்பருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளன. காலிலும் அடி பட்டுள்ளது.எனக்கும் கையில் பலத்த அடி பட்டது. கை வீங்கி போய் இருக்கிறது. இதற்கு காவல்துறை பதில் அளிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது. 

- எம். குமரேசன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!