வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (26/01/2017)

கடைசி தொடர்பு:16:31 (26/01/2017)

ஐஸ்ஹவுஸ் ஸ்டேஷனில் 15 பேரை ஏட்டு காப்பாற்றிய அந்த பரபர நிமிடங்கள்!

ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு இருச்சக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்திய மர்ம கும்பலிடமிருந்து 15 போலீஸ்காரர்களை ஏட்டு ஒருவர் துணிச்சலாக காப்பாற்றி உள்ளார்.

சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை கடந்த 23-ம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் நிலையத்துக்குள் 3 பெண் காவலர்கள் உள்பட 16 பேர் இருந்துள்ளனர். அவர்கள் எப்படி தப்பினார்கள் என்ற விவரத்தை விவரித்தன போலீஸ் வட்டாரங்கள்.

"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் சென்னை மெரினாவில் குடும்பத்துடன் போராடி வந்தனர். அவர்களின் பாதுகாப்பிற்காக மெரினா முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். 6 நாட்களாக அமைதியாக, அறவழியில் நடந்த போராட்டத்தின்போது போலீஸாரும் போராட்டக்குழுவினருக்கு முழுஅளவில் ஒத்துழைப்பு கொடுத்தனர். ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் இயற்றியதும் போராட்டக்குழுவிலிருந்து ஒரு தரப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மீதமுள்ளவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்த சமயத்தில் சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்தனர். அதில் சிலர் போலீஸ் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் போலீஸ் நிலையத்துக்குள் 16 பேர் சிக்கிக் கொண்டனர்.

வன்முறை சம்பவத்தின்போது  போலீஸ் நிலைய கதவு மூடப்பட்டது. இதனால் வெளியே வரமுடியாமல் போலீஸார் தவித்தனர். இதற்குள் தீ மள, மளவென  கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது உள்ளே சிக்கிய போலீஸார், 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என அலறினர். அனைவரும் பதற்றத்துடன் இருந்த சமயத்தில் துணிச்சலாக போலீஸ் ஏட்டு ஒருவர், போலீஸ் உயரதிகாரிகளைத் அவசர, அவசரமாக போனில் தொடர்பு கொண்டார். ஆனால் எந்த அதிகாரிகளும் பதிலளிக்கவில்லை.  அடுத்து, உடனடியாக போலீஸ் ஏட்டு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து தகவல் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நிகழ்ந்து அரை மணி நேரத்துக்குப்பிறகு போலீஸார் அங்கு வந்தனர். அதன்பிறகே போலீஸ் நிலையத்துக்குள் சிக்கியவர்கள் ஜன்னல் உடைத்து மீட்கப்பட்டனர். போலீஸ் ஏட்டு மட்டும் பரபரப்பான அந்த நேரத்திலும் சுதாரித்துக் கொண்டு செயல்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்த கும்பல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இல்லை. தற்போது போலீஸ் நிலையத்தின் முன்பு வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடியோ, சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் அவர்களை அடையாளம் கண்டு வருகிறோம். அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

-எஸ்.மகேஷ்

படங்கள்: தே.அசோக்குமார்


டிரெண்டிங் @ விகடன்