நம்புங்கள் திரு பன்னீர்செல்வம் அவர்களே... நீங்கள்தான் முதல்வர்!

புகழ் ஏணியின் உச்சத்துக்கு தனிநபர் ஒருவர் வந்துவிட்டால் அவரை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உலக நடைமுறையாகிவிட்டது.

பயன்படுத்துதல் என்பது, விமர்சிப்பது, புகழ்வது, அதிகபட்ச துதிபாடுவது, உயிரைக் கொடுக்கவும் துணிவது, துணிவதுபோல் நடிப்பது என்று பல அம்சங்களைக் குறிக்கும் சொல்லாக இங்கே கருதவேண்டும். தமிழக முதன் மந்திரி ஓ.பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை வைத்து  இப்படியான 'பயன்படுத்தல்' அம்சங்கள் அதிகரித்து வருகின்றன.

ஓ பன்னீர்செல்வம்

மோடி டீக்கடையில் வேலை செய்தார், அதன்பின்னர்  ஆபீஸ்பாய் ஆனார் என்பார்கள்... ஓ.பி.எஸ். குறித்தும் அதே 'டீக்கடை' விமர்சனங்கள்தான். மோடியைப் பொறுத்தவரை இதுபோன்ற விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஓ.பி.எஸ் மீது இன்னும் கடுமையான விமர்சனங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் போட்டுத் தாக்குகிறார்கள். ஓ.பி.எஸ் மீதான சமீபத்திய தாக்குதல் 'மிக்ஸர்-முதல்வர்' என்பதுதான்.

ஒரு மனிதனின் தொடக்ககால தொழில், உணவுப்பழக்கம், கல்வி, உடை கட்டுப்பாடு போன்றவைக்கும் அவர்களின் நிகழ்கால பொறுப்புக்கும் - பதவிக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதில்லை. விமர்சனங்களை வைப்போருக்கு இதுகுறித்த கவலையோ, அக்கறையோ கொஞ்சமும் இருப்பதில்லை.

கொள்கை ரீதியான, அறிவு மற்றும் நிர்வாக ரீதியான தர்க்கங்கள் போட்டிகள், வாதங்களை முன்வைக்கும் பண்பானது வளரவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பண்பு செத்துக் கொண்டே வருவது, அடுத்த தலைமுறையை பலவீனப்படுத்திவிடும். இறுக்கமான மனிதர் என்பதுபோல் ஒரு இமேஜ் மோடிக்கும், எளிதில் அணுகிவிடக் கூடிய இயல்பான மனிதர் என்பதுபோல் ஒரு இமேஜ் ஓ.பி.எஸ்-ஸுக்கும் இயல்பாகவே அமைந்திருக்கிறது. அந்த இயல்பு என்பதும் குறிப்பிட்ட இவ்விருவரின் செயல்பாடுகளை வைத்தே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

மோடிக்கு அடுத்த நிலையில் இருக்கும் மந்திரிகளோ, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளோ கூட அவர் அருகில் நிற்பது இல்லை. அரசு விழாக்களில் பார்க்கும்போதுகூட இதை விளங்கிக் கொள்ளலாம். மோடியே அருகில் சென்று சிரித்தால்தான் மற்றவர்கள் சிரிப்பார்கள். அதுவரை மோடி அருகில் 'மூடி'யாகத்தான் அனைவருமே இருப்பார்கள். 

'தான் எளிமையான மனிதர்' என்பதை ஆவணப்படுத்தும் விதமாக காட்சிகளை வரலாறாகப் பதிவு செய்வதில் மோடி தெளிவானவர்.  சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போன்றோர் கால்களில் விழுந்து வணங்கும்போது, 'இப்படியும் ஒரு எளிய பிரதமரா?' என்று எல்லோரையும் வியப்பில் மூழ்க வைத்துவிடுவார் மோடி. 

ஓ.பி.எஸ் இந்த வட்டத்துக்குள் வந்ததில்லை... வருவதற்கான சூழ்நிலையும் அவருக்கு அமைந்ததில்லை. 'சட்டை என்னதுதான், ஆனா மாப்பிள்ளை நான் இல்லை' என்ற நிலையோடுதான் அவருக்கான முதல்வர் பொறுப்பு இருந்தது. இரண்டுமுறை தமிழ்நாட்டின் முதல் மந்திரியாக இருந்தபோதும் இதே நிலையில்தான் ஓ.பி.எஸ் வாழ்க்கைப்பாதை அமைந்திருந்தது. 'கேஸ் முடியற வரைக்கும் கையில் வைத்திருங்கள்' என்றே நாட்டின் மாபெரும் பதவியான முதல்வர் பதவி  அவர் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இப்போது மூன்றாவது முறையாக அதே முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைகளில்... இந்த முறை அந்தப்பதவியானது எப்போது கேட்டாலும் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை ஓ.பி.எஸ்-தான் விளக்க வேண்டும்.
ஓ.பி.எஸ் மூன்றாவது முறை முதல்வராகப் பதவியைப் பெற காரணமாக அமைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை... மீண்டும் அவரிடமே பதவியைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய நிர்பந்தமும் ஓ.பி.எஸ்-ஸுக்கு இல்லை.

நம்புங்கள் திரு. ஓ.பி.எஸ் அவர்களே... கை மாற்றி (ஒருவேளை மாற்றிவிட நேர்ந்தால்?!) விடுகிற வரையில் நீங்கள்தான் தமிழ்நாட்டின் முதன் அமைச்சர். 

பன்னீர்செல்வம்

 

முதல்வர் என்கிற பதவிக்கு சட்டபூர்வமாக ஒரு பாதையும், எழுதாத வழி வழிப் பாதையாக  புரோட்டோகால் (நெறிமுறை) ஒன்றும் உண்டு. சட்டபூர்வமாக உள்ளதை கண்டிப்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதல் அமைச்சர் ஆனதுமே அதை அரசுத்துறை அதிகாரிகளே உங்களுக்கு விளக்கியும் இருப்பார்கள். எழுதாத வழி வழிப் பாதையையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்... முதல்வர் அருகில் நெருக்கத்தில் நின்று மந்திரிமார்கள் கமென்ட் அடிக்க மாட்டார்கள்... உங்கள் பக்கத்தில் வட்டச்செயலாளர், கவுன்சிலர்களே நின்று கொண்டு அதைச் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உச்ச அதிகாரிகளே உங்கள் கண்ணசைவுக்காக கவனத்துடன் இருக்கவேண்டும். முதல் அமைச்சர் பதவி என்பது அத்தனை மகத்தானது. உங்கள் பக்கத்திலோ வயர்லெஸை ' ஆன்' செய்த நிலையில் 'கன்ட்ரோல்... கன்ட்ரோல்' என்று அலறியபடி இன்ஸ்பெக்டர்களும், தலைமைச் செயலக கடைநிலை ஊழியர்களும் இடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

உங்களின் எளிமை என்பது காணக்கிடைக்காத எளிமை. அது மிகவும் மெச்சத்தக்க ஒன்று. அதை அனைவரும் அறிவர், ஏற்றும் கொள்வர். 
அதிகாரப் பதவியில் இருந்து நாட்டை வழி நடத்துவோரின் எளிமையே நாட்டையும், சட்டம்- ஒழுங்கையும் பலவீனப்படுத்தி விடும் என்பதை யாரும் உங்களிடம் இதுவரை சொல்லியிருக்க மாட்டார்கள். மூக்கணாங்கயிற்றை இறுக்கிப் பிடிக்காவிட்டால் தெறி காளைகள் தறிகெட்டு ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. ஜல்லிக்கட்டு ஆர்வலரான உங்களுக்குத் தெரியாததல்ல அது.

முதல்வர் பதவி என்பது மிகவும் மகத்தானது. அதை குஜராத் முதல்வராக இருந்தபோதே முழுமையாக உணர்ந்ததால்தான் மோடி, நாட்டின் பிரதமராகி  இருக்கிறார்.

நீங்களும் அதை உணர்ந்தால்தான் நாட்டில் ஸ்திரத்தன்மை இருக்கும். முதல்வர் பதவி என்பது பெருமாள் கோவில் புளியோதரை அல்ல. குடும்பத்துடன் குடியரசு தினவிழாவில் கலந்துக் கொள்வது அதன் பணியல்ல...!

- ந.பா.சேதுராமன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!