ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம்! முதல்வர் ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

o.panneer selvam

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தியதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சி  தலைவர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு பாராட்டு தெரிவித்ததோடு, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது குறித்தும், சென்னையில் போலீஸ் தடியடி தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்னைகளை ஜல்லிக்கட்டு சந்தித்துள்ளது. திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காட்சிப்படுத்தக் கூடாத பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து, மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியது தொடர்பான கேள்விக்கு விளக்கமளித்த முதல்வர், "ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கம் தந்தும் போராட்டங்கள் கைவிடப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தில் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையை எழுப்பினர். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சட்ட விரோதமாக சிலர் பயன்படுத்தினர். அதற்கான ஆதாரங்கள் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன. அமைதியான போராட்டத்தை சமூக விரோத கும்பல் திசை திருப்பியது. ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்துக்கும் சமூக விரோதிகள் தீ வைத்தனர். போராட்டம் திசை மாறியதால்தான் தடியடி நடத்த வேண்டியதாகிவிட்டது. அத்துமீறியதாக கூறப்படும் போலீஸார் மீது விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அலங்காநல்லூரில் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால் 16-ம் தேதி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!