சவுதி அரேபியாவில் மணமகன்.. குமரியில் மணப்பெண்... நடந்தது அட்டகாச திருமணம் ! | Wedding without a brideGroom in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (27/01/2017)

கடைசி தொடர்பு:19:26 (27/01/2017)

சவுதி அரேபியாவில் மணமகன்.. குமரியில் மணப்பெண்... நடந்தது அட்டகாச திருமணம் !

nikkah திருமணம்

கன்னியாகுமரி : திருமணத்துக்காக சவுதி அரேபியாவில் இருந்து கிளம்பிய மணமகன், போக்குவரத்து நெரிசலில் சிக்கி விமானத்தை தவற விட்டதால், குமரியில் மாப்பிள்ளையே இல்லாமல் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த சோபியாவுக்கும் ,பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த அசாரூதின் மைதீனுக்கும் திருமணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்டது. அசாருதீன் மைதீன் சவுதி அரேபியாவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். தக்கலையில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடந்திருந்தது. திருமணத்துக்கு முந்தைய தினம், சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து தக்கலை செல்வது என்பது அசாரூதினின் திட்டமாக இருந்தது.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய தினம் சவுதி விமானநிலையம் சென்ற அசாருதீன் நெரிசலில் சிக்கினார். கடுமையான நெரிசலில் சிக்கிய அசாரூதின் மைதீன் விமானத்தையும் தவறவிட்டார். இதனால் திருமணத்துக்கு உரிய நேரத்துக்கு வர இயலாமல் போனது.

திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், உறவினர்களும் பெருமளவில் குவிந்தனர். மணமகனை எதிர்பார்த்து மணமகளும் காத்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பான தகவலை அசாரூதின் மைதீன் உறவினர்களுக்கு தகவல் சொல்ல அதிர்ந்து போனார்கள்.

ஏற்கனவே திருமணத்துக்கு அனைத்து ஏற்பாடுகள் செய்து விட்டநிலையில், உறவினர்கள் பெருமளவில் கூடியதால் திருமணத்தை ஒத்திவைக்காமல் நடத்திட முடிவு செய்தனர். அதன்படி மணமகனுக்கு பதில் மணமகனின் தங்கை ஒப்பந்த படிவத்தில் கையெழுத்திட்டு, தாலியை கட்ட திருமணம் நடந்தது.திருமணத்துக்கு வந்தவர்கள் மணமகளை மட்டும் பார்த்து வாழ்த்தி விட்டு சென்றனர்.

இந்நிலையில், இன்று சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரம் வரும் அசாருதீனுக்காக மணப்பெண் சோஃபியா ஆவலோடு காத்திருக்கிறார். "பொதுவாக இஸ்லாமிய திருமணங்களில் சடங்கு முறைகளை விட மணமக்களின் ஒப்புதல் தான் முக்கியம் .அது இருந்தால் திருமணத்தை தாலி கட்டி நடத்தி விடலாம்.அது போல தான் இந்த திருமணம் நடந்தது," என அவர்கள் தெரிவித்தனர்.

- த.ராம்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்