'சின்னம்மா... சி.எம்-மா வாங்கம்மா..!' - எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கோஷம்

ட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும்போது தொடக்கநாள் அன்று மாலையில் அந்தந்தக் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர்களின் தலைமையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த சட்டசபைக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் கூட்டத்தொடர் விவாதங்களையே மறந்துவிட்டார்கள். கூட்டத்தொடர் முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், அ.தி.மு.க சார்பில் திடீரென்று கட்சி எம்.எல்.ஏ க்கள் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டம் முடிந்தபிறகு, போயஸ் கார்டனில் சசிகலா சசிகலா தலையமையில் அ.தி.மு.க எம்.பி. க்கள் கூட்டம் நடந்தது. 

அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜனவரி 27 -ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கி 5.45 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு நிகராக அவைத்தலைவர் மதுசூதனன், சசிகலா அருகில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். மேடைக்கு எதிர் வரிசையில் அமைச்சர்களில் ஒருவராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். 

அவர்களிடையே இந்தக் கூட்டத்தில் சசிகலா பேசுகையில், 'அம்மா காலத்தில் இருந்ததுபோல கட்சி இராணுவக் கட்டுக்கோப்போடு இருக்கவேண்டும். அவரவர் தொகுதியில் கட்சிப்பணிகளையும், மக்கள் பணிகளையும் செய்வதில் சுணக்கம் இருக்கக்கூடாது. தொகுதிப் பிரச்னைகளை அமைச்சர்கள் தீர்க்காவிட்டால் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன். கடந்த ஓராண்டாக நிறையப் பணிகள் பாக்கி இருக்கின்றன. அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்துங்கள். கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரும் பட்ஜெட்டுக்குள் இலக்கு வைத்து முடித்து விடுங்கள். 

தொகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், நலத் திட்டங்கள் போன்றவற்றைப் பட்டியலிட்டு அந்தந்தத் துறைகளைச் சார்ந்த அமைச்சர்களிடம் கொடுங்கள். அவர்கள் பட்ஜெட் அறிவிப்பில் வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அம்மாவின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடவேண்டும். அதேபோல, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்சியின் சார்பிலும், ஆட்சியின் சார்பிலும் சிறப்பான முறையில் கொண்டாடப்படும். அம்மாவின் கனவுகளை நிறைவேற்ற நீங்கள் எல்லோரும் உழைக்கவேண்டும்' என்று பேசினார்.

இப்படி சசிகலா பேசிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் எம்.எல்.ஏ ஒருவர் திடீரென்று எழுந்து, 'சின்னம்மா... உடனே நீங்க முதலமைச்சர் ஆகணும். தமிழ்நாடே உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கு...' என்று கோஷமிட்டார். இது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏறத்தாழ ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் சசிகலா முதல்வராக வலியுறுத்தி ஓ.பி.எஸ் முன்னிலையில் கோஷம் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திடீர் கூட்டம் ஏன்? 


குடியரசு தினவிழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மனைவியோடு கலந்துகொண்டு சிறப்பித்தார். தேசியக்கொடி ஏற்றிவைத்து முப்படை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்த விழாவுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளரான சசிகலா வரவே இல்லை. சென்னை மக்கள் புறக்கணித்தது போல அ.தி.மு.க வினரும் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டனர். முதல்வருக்கு இந்த விழாவில் கிடைத்த முக்கியத்துவமும், அவர் நடந்துகொண்ட விதமும் அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அன்றுதான், எம்.எல்.ஏக்கள் கூட்டம் 27 -ஆம் தேதி மாலை நடைபெற இருக்கிறது என்ற உத்தரவை சசிகலா பிறப்பித்தார்.  ஓ.பி.எஸ் -ஸை ஓரங்கட்டும் வகையில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கிறது. 

- எஸ்.முத்துகிருஷ்ணன்,  விக்கி. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!